ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் பேட்டி:கோவில்களில் பக்தர்கள் அளித்த தங்க நகைகளை, அறநிலையத்துறை உருக்கி வருகிறது. இதை கண்டித்து, வரும் 26ல் போராட்டம் நடத்தப்படும். உருக்கியதில் எவ்வளவு தங்கம் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறநிலையத்துறை தெரிவிக்க வேண்டும்.
இப்போது தங்கத்தை உருக்கி, வங்கியில் வைத்து, வட்டி பெறுவர். வரும் காலத்தில் கோவில் நிலங்களை அடமானம் வைத்து, வங்கிகளில் கடன் பெற்றாலும் பெறுவர் என்பதால் தான், இந்த விஷயத்தில் ஹிந்து அமைப்புகள் கறாராக இருக்கின்றனவோ?
தமிழக சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: வங்கதேசத்தில் சிறுபான்மையாக இருக்கும் ஹிந்துக்கள் மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தப்படுகிறது. பிரதமர் உடனடியாக அந்நாட்டு பிரதமரிடம் பேச வேண்டும்; மோடி மவுனம் காப்பது ஏன்?
பிரதமர் பதவிக்கு என ஒரு கண்ணியம் உள்ளது. தமிழகத்தின் சில தலைவர்கள் போல, எடுத்தோம், கவிழ்த்தோம் என அவர் செயல்பட்டால் நன்றாக இருக்காது!
அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி: ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் சசிகலா. காமராஜர், காந்தி போன்றவர்களுக்கு பலர் உதவியாளர்களாக இருந்தது போல, ஜெயலலிதாவுக்கு அவர் இருந்தார். அவர்கள் அரசியலுக்கு வராதது போல, சசிகலாவும் வரக் கூடாது. அரசியலில் ஈடுபட மாட்டோம் என ஜெயலலிதாவிடம் அவர் எழுதிக் கொடுத்ததை பின்பற்ற வேண்டும்.
இது, பூனையிடம், இனி அசைவம் சாப்பிடக் கூடாது என சொல்வது போல உள்ளது!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு: சிறுபான்மையினர் மற்றும் பிற பிரிவினர் இடையே பிளவை ஏற்படுத்தி, தமிழகத்தை கூறு போட மத்திய, பா.ஜ., அரசு முயல்கிறது. அ.தி.மு.க.,வின் முதுகில் ஏறி சவாரி செய்து, தமிழகத்தை கைப்பற்றவும் அக்கட்சி முயல்கிறது.

இது, ஜனநாயக நாடு. பாகிஸ்தானில் தான் நீங்கள் சொல்வது போல நடக்கும். எனவே, மக்களை முட்டாள்கள் என நினைத்து, இதுபோல தொடர்ந்து பேச வேண்டாம்!
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி: அ.தி.மு.க., ஆட்சியில் பல அமைச்சர்கள், பதவியை வைத்து தவறு செய்துள்ளனர். அந்த அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்படும், 'ரெய்டு' சட்டப்பூர்வமான நடவடிக்கையாகும்.
கூட்டணிக்காக கொள்கையை, எப்படி எல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது பாருங்கள்!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, 'டீன்' சாந்திமலர் பேச்சு: தற்போதுள்ள உலக சூழலில், உடல் நலம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு மன நலனும் முக்கியம். எனவே, இந்த இரு நலனிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
உண்மை தான். நோயாளிகளிடம் டாக்டர்கள் கனிவாக பேசினால், நோயாளிகளின் மனநலம் வியத்தகு வகையில் மேம்படும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE