நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வந்த மாணவர்களை, இழிவாக பேசிய பள்ளி ஆசிரியர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன அய்யன்குளம், இந்திரா நகரைச் சேர்ந்த கமலகண்ணன் - ஹேமாவதி தம்பதி மகன் கிருபானந்தன், 14; குமார் - ராதிகா தம்பதி மகன் கிருபாகரன், 14.இருவரும், காஞ்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், பிளஸ் 1 படிக்கின்றனர்.இவர்கள் சைவ மதத்தை பின்பற்றி, நெற்றியில் திருநீறு பூசியும், கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தும் தினமும் பள்ளி செல்வது வழக்கம்.
இரு வாரத்திற்கு முன், பள்ளி சென்ற இரு மாணவர்களை பார்த்து, ஆசிரியர் ஜாய்சன் என்பவர், 'பொறுக்கிகள் தான் ருத்ராட்சம் அணிந்திருப்பர்' எனக்கூறி, அவர்களை அடித்துஉள்ளார். இதனால், இருவரும் பள்ளி செல்ல விரும்பவில்லை என, பெற்றோரிடம் கூறினர்.
அவர்கள் விசாரித்த போது, ஆசிரியர் ஜாய்சனின் நடவடிக்கைகளை அறிந்தனர். தொடர்ந்து முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு, பெற்றோர் புகார் மனு அனுப்பினர். கடந்த, 17ம் தேதி சிவகாஞ்சி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இதையடுத்து, அசிங்கமாக பேசுதல், மதத்தை இழிவுபடுத்தி பேசுதல், மாணவர்களை அடித்தல் என, ஆசிரியர் ஜாய்சன் மீது மூன்று பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பள்ளி நிர்வாகம், ஆசிரியர் ஜாய்சனை மதுராந்தகம் சி.எஸ்.ஐ., பள்ளிக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE