லக்னோ: பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு லிட்டருக்கு நூறு ரூபாயை கடந்து உச்சம் தொட்டுள்ள நிலையில், உ.பி., மாநில அமைச்சர் உபேந்திர திவாரி, தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை மிகக் குறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (அக்.,21), பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து ரூ.103.61 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.99.59 ஆகவும் விற்பனையாகிறது. தமிழக அரசு பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்துள்ளது. மும்பை போன்ற பெருநகரங்களில் விலை மேலும் அதிகரித்துள்ளது. அங்கு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.112.44 ஆகவும், டீசல் ரூ.103.26 ஆகவும் உள்ளது. பொருளாதாரத்தில் தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கத்தால் மக்கள் ஏற்கனவே தடுமாறி வரும் நிலையில், எரிபொருள் விலை ஏற்றம் விலைவாசி உயர்வுக்கு வழி வகுத்துள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு உத்தர பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரி கூறியதாவது: 2014-க்கு முந்தைய புள்ளிவிவரத்தையும், இப்போதைய விலையையும் ஒப்பிடுகிறீர்கள். மோடி மற்றும் யோகி அரசு அமைந்த பிறகு தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. 95 சதவீதம் பேருக்கு பெட்ரோல், டீசல் தேவையில்லை. நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் மற்றும் பெட்ரோல் தேவைப்படுபவர்கள் குறைந்த அளவே உள்ளனர்.
பெட்ரோல் விலை குறைந்த அளவே உயர்ந்திருக்கிறது. தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகக் குறைவே. 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அரசு இலவச தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இலவச கோவிட் சிகிச்சையை அளித்துள்ளது. மருந்துகள் வீடு வீடாக விநியோகிக்கப்படுகின்றன. என கூறினார்.

முன்னதாக மத்திய பெட்ரோலிய இணை அமைச்சர் எரிபொருள் விலை உயர்வு பற்றி கூறும் போது, “இலவச தடுப்பூசிகளுக்கான பணம் மத்திய அரசு வசூலிக்கும் வரிகளிலிருந்து வருகிறது. எரிபொருள் விலை அதிகமாக இல்லை. ஆனால் வரி விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இலவச தடுப்பூசி போட்டிருப்பீர்கள். அதற்கு பணம் எங்கிருந்து வரும். இப்படித்தான் வசூலிக்கப்பட்டது.” என்று கூறியிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE