சேலம்: முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நபர்களின் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதன்படி கடந்த வாரம் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் 600 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று (அக்.,22) சேலத்தில் 17 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும் , திருச்சி, கரூர், தலா ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
மாநில கூட்டுறவு வங்கி தலைவர்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும், அதிமுக.,வின், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராகவும் உள்ளார். முன்னாள் முதல்வர் பழனிசாமியின் நிழலாகவும் உள்ளார். இளங்கோவன் அவரது மகன் பிரவீன் ஆகியோர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக இன்று காலை 6 மணி முதல் இளங்கோவனின் வீடு, தோட்டம், அவருக்கு சொந்தமான துறையூரில் உள்ள வேளாண் கல்லூரி, பெட்ரோல் பங்க் உள்பட மொத்தம் 24 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.