புது டில்லி: கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது சில மாணவர்களின் ஓ.எம்.ஆர்., விடைத்தாள்களுக்கும், வெளியான மதிப்பெண்களுக்கும் வித்தியாசம் ஏற்பட்டது. இம்முறை காஞ்சிபுரம் உட்பட சில இடங்களில் மாணவர்கள் விடையளித்த ஓ.எம்.ஆர்., தாளே மாறியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டால் தங்களுக்கு மறு தேர்வு நடக்குமா என்ற கேள்வி மாணவர்களிடம் எழுந்துள்ளது.
![]()
|
கோவிட் காரணமாக இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இந்தாண்டு தாமதமாக செப்., 12 அன்று நடந்தது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். இந்தாண்டும் தேர்வு தொடங்குவதற்கு முன்பிருந்தே நிறைய பிரச்னைகள் கிளம்பின. ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சில மாணவர்கள், பெற்றோர்கள், பயிற்சி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.
விடைத்தாள்கள் மாற்றம்!
இதற்கிடையே மஹாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த நீட் தேர்வில் கேள்வி பதில் தாள்கள் விநியோகித்ததில் தவறிழைத்துள்ளார் அறை கண்காணிப்பாளர். வைஷ்ணவி போபாலே மற்றும் அபிஷேக் கப்சே என்ற இருவரும் இதனால் பாதிக்கப்பட்டு மும்பை நீதிமன்றத்தை நாடினர். அவர்களில் வைஷ்ணவி என்பவருக்கு கோட் 04 என்ற கேள்வி தாளுக்கு, கோட் பி4 என்கிற விடை எழுத வேண்டிய தாள் வழங்கப்பட்டுள்ளது. அபிஷேக் என்பவற்கு கோட் பி4 எனும் கேள்வி தாளும், கோட் 04 எனும் விடைத்தாளும் மாற்றி மாற்றி வழங்கியுள்ளார்.
சிறப்பு தேர்வு
இது பற்றி மாணவர்கள் கேள்வி எழுப்பியதற்கு வெளியே அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார். அவர்களுக்கு சிறப்பு நீட் தேர்வு நடத்த மும்பை உயர் நீதிமன்றம் கடந்த புதனன்று உத்தரவிட்டது. ஏற்கனவே தாமதமாகி உள்ள தேர்வு முடிவுகள், இதனால் மேலும் தாமதமாகியுள்ளன. “இவர்கள் இருவரும் நீதிமன்றத்தை நாடியதால் இவ்விஷயம் வெளியே தெரிந்துள்ளது. இது போன்று எத்தனை தேர்வு மையங்களில் என்னென்ன குளறுபடிகள் நடந்தனவோ” என்று பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொருந்தாத ஓ.எம்.ஆர்., நகல்கள்!
கடந்த ஆண்டில் கணிசமான மாணவர்கள் தாங்கள் விடையளித்த ஓ.எம்.ஆர்., தாளுக்கும் பெற்ற மதிப்பெண்களுக்கும் வித்தியாசம் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தனர். இந்தாண்டு மாணவர்களின் ஓ.எம்.ஆர்., தாள் மற்றும் விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில் சில மாணவர்களின் ஓ.எம்.ஆர்., தாள்களே மாறியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த ஆயுஷ், (17) என்ற மாணவர், சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில், 'நீட்' தேர்வு எழுதினார். 180 கேள்விகளில் 177 கேள்விகளுக்கு பதில் அளித்ததாக கூறுகிறார். ஆனால் அவருக்கு அனுப்பப்பட்ட ஓ.எம்.ஆர்., விடைத்தாள் நகலில் ஆறு கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மாணவரின் ஓ.எம்.ஆர்., தாள் மாற்றி அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. மேலும் சில மாணவர்களின் பெற்றோர்கள் சமூக ஊடகங்களில் இதே போன்ற புகாரை கூறியுள்ளனர்.
![]() |
சந்தேகங்களை தீர்க்க எளிய வழி இல்லை!
மாணவர்களுக்கு இது போன்ற சங்கடங்கள் ஏற்படும் போது அவற்றை தீர்க்க எளிமையான வழிமுறைகள் இல்லை. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் நீட் தேர்வு பற்றிய சந்தேகங்கள், புகார்களுக்கு 011-69227700 மற்றும் 011-40759000 ஆகிய இரு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசியே புகாரை பதிவு செய்ய வேண்டியுள்ளது.
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் 6,412 பேர் உட்பட 1,10,971 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்கள் ஏதேனும் குளறுபடிகளை எதிர்கொண்டால் அதனை தங்கள் மொழியில் கூறி தீர்வு காண வழியில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE