ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில், தமிழகத்தில், நான்கு கலை அறிவியல் கல்லுாரிகள், இந்த ஆண்டே திறக்கப்படும்' என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளில் அரசு தீவிரமாக உள்ளது.

சென்னை, கொளத்துாரில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் அமைக்கப்படும் கலை அறிவியல் கல்லுாரியில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிற புதிய கல்லுாரிகளிலும் இதே நிலை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர் நியமனமும் நடந்து வருகிறது. 'கொளத்துார் கல்லுாரியின் ஊழியர்கள், ஹிந்துவாக மட்டுமே இருக்க வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதை, பல கட்சி தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
10 ஆண்டுகள் சிறை
இது குறித்து, ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:ஹிந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில் இருந்து, சென்னை கொளத்துாரிலும்; நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில் திருச்செங்கோட்டிலும்.திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியில், பழநி தண்டாயுதபாணி கோவில் சார்பிலும்; துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில், திருச்செந்துார் முருகன் கோவில் சார்பிலும் கலை அறிவியல் கல்லுாரிகள் துவங்க, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. அறநிலைய துறைக்கு கல்லுாரி துவக்க சட்டப்படி அதிகாரம் கிடையாது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை எடுத்து கொள்வோம். அந்த கோவில் சார்பில் கல்லுாரி அமைக்க வேண்டும் என்றால் கூட, அதற்கு பல சட்ட வழி முறைகள் உள்ளன. அறநிலைய துறை சட்டப்படி, ஒரு கோவில் நிர்வாகம் கல்லுாரி அமைக்க வேண்டும் என்றால், அந்த கோவில் அறங்காவலர் தான் முடிவு செய்ய வேண்டும். கோவில் உபரி நிதியில் இருந்து கல்லுாரி துவங்க வேண்டும் என்றால், உபரி நிதியை குறிப்பிட்டு, ஹிந்து சமய அறநிலைய துறை கமிஷனருக்கு விண்ணப்ப கடிதம் எழுதி, அனுமதி கோர வேண்டும்.
அனுமதி அளிப்பதற்கு முன், அறநிலைய துறை கமிஷனர், இது தொடர்பான அறிவிப்பை பிரதான பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும். அதில், கோவில் அறங்காவலர் கோரியிருப்பதை குறிப்பிட்டு, இதில் பக்தர்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருந்தால், ஒரு மாத காலத்துக்குள், அறநிலைய துறைக்கு தெரிவிக்க வேண்டும் என, கோர வேண்டும்.
ஒருவேளை, பக்தர் யாரிடமிருந்தாவது ஆட்சேபனை இருக்குமானால், அது தொடர்பான பிரச்னைகளை தீர்க்க வேண்டும். இவற்றை முடித்துத் தான் அனுமதி அளிக்க வேண்டும். அப்படியொரு அனுமதி இல்லாமல், எந்த கோவில் சார்பாகவும், கல்வி நிறுவனங்களை துவங்க முடியாது. இவற்றை பின்பற்றாமல் கோவில் பணத்தை எடுத்து செலவு செய்து, கல்லுாரி தொடங்கினால், அது, இந்திய தண்டனைச் சட்டப்படி, பத்து ஆண்டுகள் சிறை தண்டனைக்குரிய குற்றமாகும்.
என்ன அவசியம் வந்தது?
மயிலாப்பூர் கோவிலில் அறங்காவலர் நியமிக்கப் படவில்லை. அப்படி இருக்கும்போது, எந்த அறங்காவலர், அரசிடம் அனுமதி கோரினார்?அதுமட்டுமல்ல, நிரந்தர செயல் அலுவலரும், அக்கோவிலுக்கு இல்லை என்பதை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எனக்கு விளக்கம் அளித்துள்ளனர். அப்படி இருக்கும்போது, யார், யாரிடம் அனுமதி பெற்றனர் என்ற தகவலும் இல்லை.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு, மயிலாப்பூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் நிறைய இடங்கள் உள்ளன. அங்கு, கல்லுாரியை துவங்கவில்லை. ஆனால், முதல்வர் தொகுதியில் கல்லுாரி துவங்க வேண்டும் என்ப தற்காக, கோவிலுக்கு சொந்தமான இடமே இல்லாத, தனியார் இடத்தில் துவங்க போவதாக அறிவித்துள்ளனர்.
இப்படி செய்ய என்ன அவசியம் வந்தது?
அறங்காவலர்கள் மட்டுமே கல்லுாரி அல்லது பள்ளி அமைக்க முடியும் என்ற நிலையில், அரசு உத்தரவிட்டு, கல்லுாரி தொடங்குவது சட்ட விரோதம். உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது. நான்கு கோவில்கள் வாயிலாக அமைக்கப்படும் கல்லுாரிகளுக்கான ஒப்புதல் அரசாணையை, உயர் கல்வி துறை, முறையான விசாரணை இல்லாமல் வெளியிட்டுள்ளது.
கோவில்களுக்கு சம்பந்தமில்லாத இடங்களில், புதிதாக கல்லுாரி அமைக்கப்படும் இடங்களில் தீயணைப்புத் துறை, காவல் துறை அனுமதி, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை, பொதுப்பணித் துறை ஆய்வு உள்ளிட்டவை நடந்து இருக்க வேண்டும்; ஆனால், நடக்கவில்லை. அது தேவையில்லை என்று உயர் கல்வி துறை ஆணை கூறுகிறது; இதுவும் சட்ட விரோதம்.
கல்லுாரிகளுக்கான நிலையான கட்டடங்கள், அறநிலைய துறைக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்படும் என, அரசாணை கூறுகிறது. ஆனால், அப்படி செய்யாமல், வேறு இடங்களில் கல்லுாரிகளை அமைக்கின்றனர். கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கல்லுாரி அமைத்தால், அதற்கு கோவில் பணத்தை செலவிட முடியாது. அப்படி செய்தால், அதுவும் சட்ட விரோதம்.
பழநி கோவிலுக்கான செயல் அலுவலர் பதவியை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, 2020 செப்டம்பரில் ரத்து செய்து விட்டது. அரசு மேல்முறையீட்டையும், சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால், இப்போதும் அந்த கோவிலுக்கு செயல் அலுவலர் இல்லை; அறங்காவலர்களும் இல்லை. இப்படி தான் நான்கு கோவில்களின் நிலையும் உள்ளது. அப்படி இருக்கும்போது, எந்த அறங்காவலரை கொண்டு, கல்லுாரி துவங்க அனுமதி வாங்கினர்?
திருச்செந்துார் கோவிலில் இருந்து, 90 கி.மீ., தொலைவில் உள்ள விளாத்திகுளத்தில், கல்லுாரி அமைக்கின்றனர். தி.மு.க., -- எம்.பி., கனிமொழியின் துாத்துக்குடி தொகுதிக்குள் வரும் விளாத்திகுளத்தில் கல்லுாரி அமைய வேண்டும் என்பதற்காக, அப்படி செய்கின்றனர்.

அரசு சார்பில் விபரீதம்
துாத்துக்குடி, திருநெல்வேலி போன்ற இடங்களில், திருச்செந்துார் கோவிலுக்கு, 1,500 ஏக்கர் நிலங்கள் உள்ளன. விளாத்திகுளத்தில் 1 சென்ட் நிலம் கூட, கோவிலுக்கு சொந்த மானது இல்லை. அறநிலைய துறை இஷ்டம் போல செயல்படுவது சரியான அணுகுமுறை அல்ல. இதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல இருக்கிறேன். சட்ட விரோதமான இந்த காரியத்துக்கு, கோர்ட் தடை போட்டதும் தான், அரசு சார்பில்விபரீதத்தை உணருவர்.
ஏற்கனவே, இப்படித் தான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்குகிறோம் என, நியமனம் செய்தனர். அந்த விவகாரம் கோர்ட் விசாரணையில் உள்ளது. அரசு முடிவுக்கு எதிராக தான் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். அதே நிலை தான், கல்லுாரி விஷயத்திலும் ஏற்படும். இவ்வாறு, டி.ஆர்.ரமேஷ் கூறினார்.
'யாரும் கேள்வி கேட்க முடியாது!'
அறநிலைய துறை சட்டத்தின்படி, சாதாரண நிலை பணியாளர் கூட, ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.அப்படி இருக்கையில், கோவில்கள் சார்பாக அமைக்கப்படும் கல்லுாரிகளில் பணிபுரிவோர், ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் தேர்வு நடந்திருப்பது சரியே. சட்டம் தெளிவாக இருக்கையில், இதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று, டி.ஆர்.ரமேஷ் கூறினார்.
- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE