ஒரு நாட்டை அடிமை ஆக்க, ஆயுதத்தின் மூலம் வெற்றி பெறலாம் அல்லது கடனைக் கொடுத்து அடிமையாக்கி விடலாம். முன்னது அமெரிக்காவின் கொள்கை; பின்னது சீனாவின் கொள்கை.
ஒரு நாடு, உள்நாட்டு கலவரங்கள், போராட்டங்களைச் சமாளிக்கவும், அண்டை நாட்டு ஆக்கிரமிப்பு போர்களை எதிர்கொள்ளவும், அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கி, பிறகு அடிமையாகிறது. மற்றொரு நாடு, பொருளாதார முன்னேற்றத்திற்கு சீனாவிடம் கடன் வாங்கி, அடிமை ஆகிறது.இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலக சரித்திரத்தை கூர்ந்து நோக்கினால், பல நாட்டு போர்களிலும், போராட்டங்களிலும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ அமெரிக்கா ஈடுபட்டு, அந்தந்த நாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்திருப்பது புலப்படும்.
அந்த நாடுகளை அடிமையாக்கி, உயிர்ச் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டு அழிவு நிலைக்கு இட்டுச் சென்ற கதை கூட உண்டு.ஆப்கனை கைகழுவியது, புதிய விஷயமல்ல; இது போல், பல போர்களில் பின்வாங்கி உள்ளது.அமெரிக்கா, உலகில் உள்ள போராளிகளுக்கு, தீவிரவாதிகளுக்கு, கடத்தல்காரர்களுக்கு, சர்வதேச ஆயுத வியாபார மாபியாக்கள் மூலம் ஆயுத விற்பனை செய்யும். இந்த மாபியாக்கள், சீனா, வடகொரியா, ரஷ்ய நாடுகளுக்குக் கூட உதவுவர். உலகெங்கும் இவர்களுக்கு, 'நெட்வொர்க்' உண்டு.
நம் நாட்டில், ஜாதி வெறி கொண்ட அரசியல்வாதிகள் இவர்களுக்கு உதவுவர். அமெரிக்காவின், 56 சதவீத ஆயுத தொழிற்சாலைகள், தனியார் மயமாக்கப்பட்டவை. ராணுவ தளவாடங்கள், நவீன போர் விமானங்கள் தாங்கிய கப்பல்கள் ஏற்றுமதியின் மூலம், பொருளாதாரத்தில் பலமிக்க நாடாக அமெரிக்கா திகழ்கிறது. 'நாங்கள் ராணுவ தளவாடங்களை தயாரிப்பது, உலக அமைதிக்கும், சமாதானத்தை நிலை நாட்டவும்' என்று கூறுவது கபட நாடகமே!
விசேஷம் என்ன தெரியுமா...
அமெரிக்காவின் இந்த முக்கியவெளியுறவுக் கொள்கை, எந்த கட்சி செனட்டர்களுக்கும் தெரியாது என்பது தான். ஈரான், சவுதி அரேபியா, கம்போடியா, வியட்நாம், லாவோஸ் உட்பட, 167 நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் இரண்டு முகங்கள்
* அரை நூற்றாண்டுக்கு முன், ஈரான் மன்னராக ஷா இருந்தபோது அந்நாட்டிற்கு, ஆயுத தளவாடங்கள் தாங்கிய விமானங்களையும், ஏவுகணைகளையும், தரையிலிருந்து தரை தாவும் ஏவுகணைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் சூப்பர்சானிக் ஏவுகணைகளையும், வெடிகுண்டுகளையும், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றது. அப்போதைய டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 ரூபாய்.எண்ணெய் வளத்தைக் காக்கவே இந்த ஏற்பாடு என அமெரிக்கா அப்போது கூறியது.
அந்நாட்டின் அதிபராக ரிச்சர்டு நிக்சன் இருந்தார்.பின், 1979ல் ஈரானில் ஷா ஆட்சி வீழ்ந்து, இஸ்லாமியப் புரட்சியாளர் அயதுல்லா கோமேனி ஆட்சியைக் கைப்பற்றினார். ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் எதிரியாகினர். இன்றைய ஆப்கனை விட்டு, அமெரிக்க ராணுவம் எப்படி ஓடியதோ அதே நிலை தான் அன்றைய ஈரானிலும் நடந்தது. அமெரிக்கா விட்டுச் சென்ற ராணுவ தளவாடங்களை வைத்து, ஈரான் புரட்சியாளர்கள் அமெரிக்காவை எதிர்த்தனர்.
* ஈரானிலிருந்து விரட்டப்பட்ட அமெரிக்கா, தன் தளவாடங்களை, 1980ல் ஈராக்குக்கு கொடுத்து, ஈரானுடன் போரிட வைத்தது; ஈராக் கதி என்ன ஆயிற்று என்பது எல்லாருக்கும் தெரியும்.
* பனாமா, தென் அமெரிக்காவின் நேச நாடு. இங்கு அமெரிக்கா, ராணுவ தளவாடங்களை அமைத்து அங்குள்ள அரசு படைக்கும் பயிற்சி கொடுத்தது. அங்கு ஏற்பட்ட புரட்சியில், ஜெனரல் இமானுவேல் நோரியோகா ஆட்சிக்கு வந்தவுடன், பனாமாவில் அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதத்துடன், அமெரிக்க படையோடு போரிட்டது; இதுவும் வரலாறு!
* பாகிஸ்தானில் ராணுவ முகாம் அமைத்துள்ள அமெரிக்கா, ஆப்கனில் ஆட்சி செய்த சோவியத் யூனியன் ஆதரவு அரசை எதிர்த்து, மறைமுகப் போரை துவக்கியது. இதற்காக, முஜாஹிதீன் புரட்சியாளர்களை உருவாக்கி, பாகிஸ்தானில் பயிற்சியும் கொடுத்தது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., யுடன் கூட்டாக, முஜாஹிதீனை ஆப்கனுக்கு அனுப்பி போரிட வைத்தது. பின்வாங்கிய சோவியத் யூனியன், ஆப்கனை விட்டு விலகியபோது, முஜாஹிதீன்கள், தலிபான்கள், அல்கொய்தா அமைப்பினர், ஆப்கனில் குடிகொண்டனர்; இனக் கலவரங்களை ஏற்படுத்தினர். உள்நாட்டு போர் ஏற்பட்டது.
முஜாஹிதீன்களுக்கும், தலிபான்களுக்கும் இடையே போர் மூண்டது. அமெரிக்கா பயிற்சி கொடுத்த முஜாஹிதீனின் ஒரு பிரிவினர், தலிபான் போராளிகள், அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டனர். ஆப்கனின் நிலையை என்னவென்று சொல்வது! அமெரிக்கா ஆயுத வாடிக்கையாளர்களைப் பற்றி ஓர் ஆய்வு செய்து வைத்துள்ளது. மிகவும் ஆபத்தான நாடுகள், மிதமான ஆபத்துள்ள நாடுகள், சாதாரண நாடுகள், ஆபத்தில்லாத நாடுகள் என பிரித்திருக்கிறது.
ஒரு நாட்டின் அரசியல் மற்றும் ஆட்சியின் ஸ்திரத்தன்மை, மக்களை நடத்தும் விதம், ஜாதிவெறி, ஊழல், பணத்துக்கு அடிமையாகும் அரசியல்வாதிகள், பகுத்தறிவற்ற மக்கள் ஆகியோரைத் தன் வசப்படுத்துவதில், அமெரிக்கா கில்லாடி. பணத்தைக் கொடுத்து அனைத்தையும் கொத்தடிமை ஆக்கி விடுகிறது.
சோவியத் யூனியன் பிளவுபட்ட பிறகு ரஷ்யாவிலிருந்து இடது சாரி சிந்தனையாளர்களுக்கு இது போல உதவிகள் கிடைப்பதில்லை; அவர்கள் மட்டும் சீனாவிடம் கையேந்தி நிற்கின்றனர். ஆபத்தான நாடுகள் என்றும் சில நாடுகளைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறது அமெரிக்கா. ஈராக், லிபியா, ஏமன், சூடான், காங்கோ ஆகியவை இதைப் பொருத்தவரை ஆபத்தான நாடுகள்.ரிச்சர்ட் நிக்சன் தொடங்கி தற்போதைய பைடன் வரை, அனைத்து அதிபர்களும், ஆயுத சப்ளை செய்து தான், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றனர்.
உலக அளவில் 35 சதவீத ஆயுத வியாபாரம் அமெரிக்கா செய்கிறது. பிரான்ஸ் 23, ஏமன் 15, சீனா 6, ரஷ்யா 3, மற்ற நாடுகள் 15 சதவீத ஆயுத வியாபாரம் செய்கின்றன.இப்போது, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வியாபாரம் தான், 'டாப் கியரில்' செல்கிறது.அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா, ஜப்பான், சீனாவிடம் இந்த கப்பல்கள் உள்ளன.
ஆஸ்திரேலியா சமீபத்தில், பிரான்சிடமிருந்து இந்த கப்பலை வாங்குவதற்காக ஒரு ஒப்பந்தம் செய்தது. அதற்குள் அமெரிக்கா முந்திக் கொண்டு, பனிரெண்டு கப்பல்களை, ஆஸ்திரேலியாவுக்கு விற்று விட்டது. இதனால் தான், சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை திட்டித் தீர்த்தார்.இப்படி, ஆயுத வியாபாரத்தில் தன்னை மிஞ்ச ஆள் இருக்கக் கூடாது என்று நினைக்கும் அமெரிக்காவுக்கு, 'ஆப்பு' அடிக்கவே வடகொரியா கிளம்பியுள்ளது.
வடகொரியாவிடம் கொக்கரிப்பு
உலகில் உள்ள தீவிரவாத அமைப்பு அனைத்திற்கும், ஆயுத சப்ளை செய்வதில் வேகம் காட்டுகிறது வடகொரியா.வடகொரியாவின் ஆயுதத்தை வாங்கிய முதல் நாடு ஜிம்பாப்வே. 1980 முதல் இன்று வரை, ஆயுதக் கொள்முதல் செய்கிறது.
ஜிம்பாப்வே ஜனாதிபதி ராபர்ட் முகஹோவாவும், வட கொரிய அதிபர் சங்கும் இணைபிரியா நண்பர்கள்.லிபியா, ஏமன், உகாண்டா, மடகாஸ்கர், சிரியா, ஈராக், ஈரான், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு வடகொரியா ஆயுத சப்ளை செய்கிறது.எங்கெல்லாம் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்கிறதோ, அங்கெல்லாம் தீவிரவாதிகளுக்கு வடகொரியா ஆயுதங்களை விற்கும்.
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை 8,100 மைல்களை, 30 நிமிடங்களில் தாண்டும் வல்லமை கொண்டது. வடகொரிய தலைநகரிலிருந்து அமெரிக்காவை தாக்கும் வல்லமை கொண்டது. இதனால் தான், அமெரிக்கா இப்போது கொந்தளிக்கிறது. போறாத குறைக்கு, வடகொரியாவிடம் அணு ஆயுதங்களும் ஏராளமாக உள்ளன.எவ்வளவு தான் வடகொரியா தனிமைப்படுத்தப்பட்டாலும், அதன் சர்வதேச ஆயுத பேரம் அதைக் காப்பாற்றுகிறது.
இப்படி அமெரிக்கா, உலக நாடுகளை கொத்தடிமையாக்கி வைத்திருக்க, சீனாவோ தன் கந்துவட்டி வியாபாரத்தின் மூலம், மற்ற நாடுகளை தந்திரமாக கவர்கிறது. எப்படி?நாளை பார்ப்போம்!
டாக்டர் சு. அர்த்தநாரி
இதய ஊடுருவல் நிபுணர்
தொலைபேசி: 98843 53288
இ - மெயில்:prabhuraj.arthanaree@gmail.com