மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில், மக்காசோள சாகுபடியில் அமெரிக்கன் படைப்புழு கட்டுப்படுத்த வேளாண்மைத் துறையினர் வழிகாட்டுதல் தெரிவித்துள்ளனர்.
மடத்துக்குளம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்ட அறிக்கை:மக்காசோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, கோடை உழவு செய்யும் போது, 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். அனைத்து விவசாயிகளும் ஒரே சமயத்தில் குறிப்பிட்ட பருவத்தில் விதைப்பு செய்ய வேண்டும்.
குறைவான இடைவெளியில் படைபுழு வேகமாக பரவுவதை தவிர்க்க, இறவை சாகுபடியில் 60 x 25, மானாவாரி சாகுபடியில் 45x20 செ.மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும். கதிர்கள் உருவாகும் பருவத்தில், பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும்.இரண்டரை ஏக்கர் பரப்பிற்கு 12 இனக்கவர்ச்சி பொறியை வைக்க வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறை இனக்கவர்ச்சி பொறியின் செப்டா மாற்ற வேண்டும்.
பெவேரியாபேசியானா பயன்படுத்தி, ஒரு கிலோ விதைக்கு, 10 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். மக்காசோளம் சாகுபடியின் போது, வயல் ஓரங்களில் தட்டைப்பயறு, ஆமணக்கு, சூரியகாந்தி, சாமந்திப்பூ, உளுந்து மற்றும் பாசிப்பயறு உள்ளிட்டவைகளை பயிர் செய்ய வேண்டும்.
இறுதி உழவின் போது, தேவையான அளவு அடியுரத்துடன் வேப்பம்புண்ணாக்கு, ஒரு ஏக்கருக்கு, 100 கிலோ இடவேண்டும்.தாக்குதல் அதிகமிருப்பின், ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஸ்பின்னோசட் 12 எஸ்.பி. 0.5 மிலி, எமாமேக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி,, 0.4 கிராம், தயோடிகார்ப் 2 கிராம் இதில் ஏதாவது ஒரு ரசாயன பூச்சிக்கொல்லியை, கைத்தெளிப்பான் அல்லது பேட்டரியால் தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.படைப்புழு தாக்கம் தெரிந்தால், உடன டியாக வேளாண்மைத்துறையினரை விவசாயிகள் அணுக வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.