அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வடை போச்சே!': காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எல்லா இடங்களையும் அள்ளியது தி.மு.க.,

Updated : அக் 23, 2021 | Added : அக் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று நடந்த மறைமுக தேர்தலில் எதிர்பார்த்தபடியே தி.மு.க.,வினர் வெற்றி பெற்றனர். அமைச்சர், மாவட்ட செயலர், ஒன்றிய செயலர் உறவினர், ஆதரவாளர்களுக்கே, பெரும்பாலான பதவிகள் போட்டியின்றி வழங்கப்பட்டன. வழக்கம் போல, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், துணை தலைவர் பதவி எதிர்பார்த்த கூட்டணி கட்சியினருக்கும் ஏமாற்றமே

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று நடந்த மறைமுக தேர்தலில் எதிர்பார்த்தபடியே தி.மு.க.,வினர் வெற்றி பெற்றனர். அமைச்சர், மாவட்ட செயலர், ஒன்றிய செயலர் உறவினர், ஆதரவாளர்களுக்கே, பெரும்பாலான பதவிகள் போட்டியின்றி வழங்கப்பட்டன. வழக்கம் போல, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், துணை தலைவர் பதவி எதிர்பார்த்த கூட்டணி கட்சியினருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.latest tamil newsதமிழகத்தில், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர்.மோதல்தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல், நேற்று நடந்தது.

இதற்காக, அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மறைமுக தேர்தலில் வெற்றி பெற்று, எப்படியாவது பதவிகளை பிடித்து விட, ஒரே கட்சியில் பலர் முட்டி மோதினர்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில், ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு, 6வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.,வை சேர்ந்த உஷா நந்தினியும், 12வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க., மகளிர் அணியைச் சேர்ந்த மலர்விழியும் காய் நகர்த்தினர்.ஆனால், மாவட்ட அமைச்சர் அன்பரசனின் நிழலாக வலம் வரும் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் மனோகரனின் மனைவி சரஸ்வதி, போட்டியின்றி ஒன்றிய குழு தலைவராக தேர்வானார்.

மற்றொரு புறம், 19வது வார்டில் வெற்றி பெற்ற, ஸ்ரீபெரும்புதுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகையின் அண்ணன் மகன் மணிகண்டன், ஒன்றியக் குழு துணை தலைவர் பதவிக்கு மோதினார்.இருப்பினும், ஒன்றிய குழு தலைவர் போன்று, துணை தலைவராக தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலரான வந்தேமாதரத்தின் மனைவி உமாமகேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.தி.மு.க.,வைச் சேர்ந்த இரண்டு ஒன்றிய செயலர்களின் மனைவியருக்கு, தலைவர், துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது, தி.மு.க., வினர் மத்தியிலும், கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

குன்றத்துார் ஒன்றியத்தில், சென்னையை ஒட்டியுள்ள ஊராட்சிகளில், பூந்தண்டலம்,- அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஆதிகேசவன்; பழந்தண்டலம், தி.மு.க.,வைச் சேர்ந்த- தியாகு; திருமுடிவாக்கம் தி.மு.க.,வின் வைத்தியலிங்கம்; சிறுகளத்துார் தி.மு.க.,வின் கோவிந்தராஜ் ஆகியோர் துணை தலைவர்களாக வெற்றி பெற்றனர்.

நந்தம்பாக்கம் தி.மு.க.,வின் ஜீவிதா சுரேஷ்; கொல்லச்சேரியில் தி.மு.க.,வைச் சேர்ந்த- முருகன்; இரண்டாம் கட்டளை அ.தி.மு.க.,வின் கோவிந்தராஜி; தண்டலம் ஊராட்சியில் அ.தி.மு.க.,வின் கவுதமி; தரப்பாக்கம் தி.மு.க.,வின் சோனியா விநாயகம் துணை தலைவர்களாக வெற்றிபெற்றனர்.தேர்வுபரங்கிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.,வின் சங்கீதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். காஞ்சிபுரம் ஒன்றியத்தின் 18 ஒன்றிய கவுன்சிலர்களில் தி.மு.க., 14; அ.தி.மு.க., இரண்டு; பா.ஜ., மற்றும் சுயேச்சை தலா 1 இடம் பிடித்தனர். தி.மு.க.,விடம் பெரும்பான்மை இருந்ததால், 9வது வார்டு மலர்கொடி, ஒன்றிய குழு தலைவராகவும், துணை தலைவராக 17வது வார்டு உறுப்பினர் திவ்யப்ரியா துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


latest tamil news


உத்திரமேரூர் ஒன்றியத்தில், 22 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில், தி.மு.க., 18 இடம், அதன் கூட்டணியான மா.கம்யூனிஸ்ட் ஓரிடம் என, மொத்தம், 19 இடங்களை தி.மு.க., பிடித்தது. அ.தி.மு.க., மூன்று இடங்களில் வெற்றி பெற்றது.இதில் உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரன் மனைவி ஹேமலதா, ஒன்றியக்குழு தலைவராகவும், சாலவாக்கம் ஒன்றிய செயலர் குமார் மனைவி வசந்தி, துணை தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திருப்போரூர் ஒன்றியத்தின், 22 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 10ஐ தி.மு.க., கைப்பற்றியது. அ.தி.மு.க., எட்டு; பா.ம.க., இரண்டு; சுயேச்சையாக இருவர் வென்றனர்.நேற்று நடந்த ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுக தேர்தலில், மூன்றாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் இதயவர்மன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், வென்றதாக அறிவிக்கப்பட்டார். இத்தேர்தலை அ.தி.மு.க.,வினர் புறக்கணித்தனர்.

அதேபோல் 21வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சத்யா சேகர், போட்டியின்றி துணை தலைவராக தேர்வானார்.வேட்பு மனுதிருக்கழுக்குன்றம் ஒன்றியத்தின் 26 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளில், தி.மு.க., - 16; அ.தி.மு.க., - 7; வி.சி., - 1; சுயேச்சைகள் - 2 என வென்றன.மாமல்லபுரம் விடுதியில் தங்கியிருந்த தி.மு.க., - வி.சி., சுயேச்சை கவுன்சிலர்கள், நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர்களும் வந்தனர்.தி.மு.க., கவுன்சிலர் ஆர்.டி.அரசு, அ.தி.மு.க., கவுன்சிலர் எஸ்வந்த்ராவ் ஆகியோர், தலைவர் பதவிக்கு, வேட்புமனு அளித்தனர்.

அ.தி.மு.க., கவுன்சிலரான முன்னாள் திருப்போரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தனபால், 10:40 மணிக்கு அலுவலகம் வந்தார். தாமதமாக வந்த அவரை, தி.மு.க.,வினர் எதிர்ப்பு காரணமாக போலீசார் வெளியேற்றினர்.தி.மு.க., கவுன்சிலர் ஆர்.டி.அரசு 18 ஓட்டுகள் பெற்று, ஒன்றிய குழு தலைவராக வென்றார். அ.தி.மு.க., கவுன்சிலர் எஸ்வந்த்ராவ், எட்டு ஓட்டுகள் பெற்றார். துணை தலைவராக தி.மு.க., கவுன்சிலர் எஸ்.ஏ.பச்சையப்பன், 19 ஓட்டுகள் பெற்று வென்றார்.காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில், தி,மு.க., சார்பில் உதயா, துணைத்தலைவர் பதவிக்கு ஆராமுதன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மற்றவர்கள் போட்டியிடாததால், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பெரும்பாலான இடங்களில் துணை தலைவர்கள் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டனர். அமைச்சர் அன்பரசன் ஆதரவாளர்கள், மாவட்ட செயலர் சுந்தரின் ஆதரவாளர்கள், ஒன்றிய செயலரின் உறவினர்கள், ஆசி பெற்றவர்களுக்கு பதவி வழங்கப்பட்டது.போட்டி இருந்த சில இடங்களிலும், கண்துடைப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டதே தவிர, பதவி முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டவை தான் என்பதால், கட்சியினர், கூட்டணி கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.
-நமது நிருபர் குழு- -

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
23-அக்-202115:33:34 IST Report Abuse
Vena Suna அதிமுக கௌரவர்கள் கூட்டம் அவ்வளவு தான் ஹிஹிஹி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X