சென்னை : ''கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை, ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,'' எனக் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
கூட்டுறவு துறையின் செயல்பாடு தொடர்பாக, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியசாமி, நேற்று கூடுதல் பதிவாளர்கள் மற்றும் மண்டல இணை பதிவாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.பின் பெரியசாமி கூறியதாவது: விவசாயிகளின் உர தேவையை பூர்த்தி செய்ய, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, உரங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது 56 ஆயிரம் டன் அளவில், அனைத்து வகை உரங்களும் இருப்பில் உள்ளன. மேலும் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நடப்பு நிதியாண்டில், 11 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில் இம்மாதம், 15ம் தேதி வரை 3.43 லட்சம் விவசாயிகளுக்கு, 2,450 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில், 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார்.தள்ளுபடிக்கு தகுதியான நபர்களை கண்டறியவும், முறைகேடு ஏதும் நடந்துள்ளதா என்பதை கண்டறியவும், அதிகாரிகள் 100 சதவீதம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.ஒரு வாரத்திற்குள் நகை கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்படும். இதனால் 11 லட்சம் பேர் பயன் பெறுவர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE