ஆயுள் தண்டனை கைதிகளுக்கு, 'பரோல்' விடுப்பைத் தாண்டி, 'பர்லோ' என்ற நீண்டகால விடுப்பு அளிக்கும் முறை உள்ளது. இதன்படி, குஜராத் சாமியார் ஆசாராம் மகனுக்கு அளித்த நீண்டகால விடுப்பை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பர்லோ விடுப்பு என்பது பற்றியும், அது தமிழக கைதிகளுக்கு பொருந்துமா என்பது குறித்தும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கூறியதாவது: குற்ற வழக்கில் ஈடுபட்டு சிறைக்கு சென்று, ஆயுள் தண்டனை பெற்ற குஜராத்தின் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு மகன் நாராயண் சாய்க்கு, குஜராத் சிறைத் துறை அதிகாரிகள் மறுத்த பின்னும், குஜராத் உயர் நீதிமன்றம், பர்லோ என்ற நீண்டகால விடுப்பு அளித்திருந்தது.
இதை எதிர்த்து குஜராத் மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாராயண் சாய்க்கு வழங்கியபர்லோ விடுப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சிறை கைதிகளுக்கு வழங்கக் கூடிய, பரோல் என்ற குறுகிய கால விடுப்பும், பர்லோ என்ற நீண்டகால விடுப்பும், குஜராத் போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.
உரிமை கோர முடியாது
ஆயுள் தண்டனை கைதி ஒருவர் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையை கடந்திருந்தால், அவருக்கு பர்லோ முறையில் நீண்டகால விடுப்பை, சிறைத் துறை அதிகாரிகள் அளிக்கலாம். ஆனால் அதற்கு முன், அவர் சம்பந்தப்பட்ட வழக்கு, பின்னணி, அவரது நடத்தை ஆகியவற்றை பின்புலமாக கொண்டு தான், அவருக்கு அந்த சலுகை வழங்க முடியும். பர்லோ விடுப்பை எந்த நேரமும் ரத்து செய்வதற்கு சிறைத் துறைக்கு அதிகாரம் உள்ளது.
தனக்கு பர்லோ விடுப்பை கொடுக்குமாறு, சம்பந்தப்பட்ட கைதி விண்ணப்பிக்க முடியுமே தவிர, கட்டாயம் தனக்கு விடுப்பு அளித்து தான் ஆக வேண்டும் என, உரிமை கோர முடியாது. அப்படித் தான், சிறைத் துறையிடம் நாராயண் சாய் விண்ணப்பித்தார்.ஆனால், வழக்கு பின்புலம், அவரது நடத்தை எல்லாவற்றையும் வைத்து, குஜராத் சிறைத் துறை அதிகாரி அவரின் விண்ணப்பத்தை நிராகரித்தார். இருந்தும், குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகி, தனக்கு சாதகமான உத்தரவை நாராயண் சாய் பெற்றார்.
இதை எதிர்த்து குஜராத் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் நாகரத்னா ஆகியோர், நாராயண் சாய்க்கு வழங்கப் பட்ட சலுகையை ரத்து செய்தனர். பர்லோ நடைமுறை தமிழகத்தில் இல்லை. அத்துடன், தமிழக சிறைத் துறை விதிகளின்படி, தனக்கு கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என, எந்த கைதியும் உரிமை கோர முடியாது.
தமிழக சிறைத் துறை விதிகளில், நீண்டகால விடுப்பை சாதாரண விடுப்பு என்றும், குறுகிய கால விடுப்பை அவசர விடுப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பொதுவான பெயரில் பரோல் என, அழைத்து வந்துள்ளனர்.
சாதாரண விடுப்பு
உறவினர் இறப்பு, உறவினருக்கு உடல் நிலை சரியில்லை, திருமணம் போன்றவற்றுக்காக, அவசரகால விடுப்பு கேட்டு,சிறை துறை கண்காணிப்பாளருக்கு, கைதி விண்ணப்பிக்கலாம். இந்த விடுப்பை 15 நாட்கள் வரை மட்டுமே பெற வாய்ப்புள்ளது. அதேபோல, தன் உடல் சிகிச்சை, குடும்பத்தினரோடு இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளிட்ட காரணங்களுக்காக, தமிழக கைதிகள் சாதாரண விடுப்பு பெற்று செல்ல முடியும். இதை சிறைத் துறை டி.ஐ.ஜி.,யே வழங்கலாம்.
ஆனால், எத்தனை நாட்களுக்கு சாதாரண விடுப்பு வழங்கலாம் என்பது குறித்த எந்த குறிப்பும் விதிகளில் இல்லை. அதை வைத்து தான், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முதலில் அளிக்கப்பட்ட 30 நாள் சாதாரண விடுப்பை தொடர்ந்து நீட்டித்து செல்கிறார். சில மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள நடைமுறை போல, தமிழகத்தில்நீண்டகால விடுப்பில் கைதிகள் செல்ல முடியாது.
பர்லோ என்பது, ராணுவத்தில் பணியாளர்கள் பயன்படுத்தும் ஒரு நடைமுறை சொல். 12 மாதங்கள் தொடர்ச்சியாக பணியாற்றும் ராணுவ வீரர், ஒரு மாத காலம் தொடர்ச்சியாக விடுப்பு எடுக்க முடியும். அதைத் தான், பர்லோ விடுப்பு என்கின்றனர். அந்த நடைமுறை சொல் தான், கைதிகள் விஷயத்திலும் விடுப்பு எடுத்து செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு, சில மாநிலங்களில் சிறை விதிகளிலும் இடம் பெற்றுள்ளது. மற்றபடி தமிழகத்துக்கும்,இந்த நடைமுறைக்கும்எந்த சம்பந்தமும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE