சமீபத்தில் தி.மு.க., அரசு மீது, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஊழல் புகார் தெரிவித்தார். மின்சாரத் துறையில் ஊழல் நடக்கஉள்ளதாக கூறினார்; இது, தி.மு.க.,வை கலங்கடித்து விட்டது. 'இந்த விவகாரம் எப்படி வெளியானது' என, ஆளும் தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. தமிழக அரசில் பணியாற்றும் அந்த சீனியர் அதிகாரி, அடிக்கடி டில்லி வந்து முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். வட மாநிலத்தைச் சேர்ந்த இந்த அதிகாரியின் திறமைக்கு ஏற்ற பதவி தரப்படவில்லை.
இதனால் வெறுத்துப் போன அவர், தி.மு.க., அரசில் நடக்கும் வில்லங்கமான விவகாரங்களை கண்காணித்து வருகிறார். அதோடு, இது தொடர்பான ஆவணங்களையும் எடுத்து வந்து, டில்லியில் கொடுத்து விட்டுச் செல்கிறார்.மத்திய அரசின் பெண் அமைச்சர் ஒருவரைச் சந்தித்து, தமிழக அரசுக்கு எதிரான ஆவணங்களைக் கொடுத்துள்ளார் இந்த அதிகாரி. விரைவில் இந்த ஆவணங்கள் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் என்கின்றனர் டில்லி அதிகாரிகள்.
முதலிடத்தில் தமிழகம்
லோக்சபா எம்.பி.,க்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கண்காணித்து வருபவர் சபாநாயகர் ஓம் பிர்லா. எந்த ஒரு எம்.பி., மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ உடனடியாக சபாநாயகருக்கு தெரிவித்தாக வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி உடனடியாக எம்.பி., கைது தொடர்பாக சபாநாயகருக்கு தகவல் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாதமும் இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்படும். இந்த மாத பட்டியலில் முதலிடம் வகிப்பது தமிழகம் தான்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது எம்.பி.,க்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஓம் பிர்லாவிற்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலுார், திருநெல்வேலி தி.மு.க., - எம்.பி.,க்கள் மீதான வழக்குகள் ஓம் பிர்லாவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, அமலாக்கத் துறையில் தமிழக எம்.பி.,க்கள் சிலர் சிக்கியுள்ள தகவலும் சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுதித் தள்ளும் தமிழக எம்.பி.,
தமிழக எம்.பி.,க்களில் சுறுசுறுப்பாக இருப்பவர், மதுரையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன். சக உறுப்பினர்கள் அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர். தமிழகம் தொடர்பான பிரச்னைகளை பார்லிமென்டில் அதிகம் கிளப்புவது இவர் தான். இத்துடன் நிற்காமல், தமிழக பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்கு உடனே கடிதம் எழுதி விடுகிறார்.
சமீபத்தில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குருக்கு, ஒரு கடிதம் எழுதினார் வெங்க டேசன். அதில், பிரசார் பாரதி தனியார் வசம் போகிறது என குற்றம் சாட்டியிருந்தார். இந்த கடிதம் கிடைத்த உடனேயே, பிரசார் பாரதியின் தலைமை அதிகாரி வாயிலாக ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடச் செய்தார் அமைச்சர் அனுராக்.
குளிர்கால கூட்டத்தொடரும் போச்சா?
அடுத்த மாதம் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எனவே, பிரதமர் மோடியை எதிர்க்கும் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள் தான் என்பதைக் காட்ட, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முடிவு செய்துஉள்ளார். இதனால், குளிர்கால கூட்டத்தொடரின் போது சபையின் மையப் பகுதியில் நின்று கூச்சல் போடுவது, மேஜை மீது ஏறி நடனம் ஆடுவது என பல திட்டங்களை அவரது கட்சியினர் தயாராக வைத்துள்ளனர்.
பார்லி.,யை முடக்க ஆம் ஆத்மி கட்சியும் மம்தாவோடு கைகோர்த்துவிட்டது. ஆனால், மம்தாவோடு சேர காங்கிரஸ் தயங்குகிறது. எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக மம்தா தன்னை நினைப்பது தான் இதற்கு காரணம்.
மோடிக்கு யார் நெருக்கம்?
வட மாநில தொழில் அதிபர்கள் மத்தியில் ஒரு விவகாரம் ஒவ்வொரு மாதமும்அலசப்படும். எந்த அமைச்சர் பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருக்கிறார் என்பது தான் அது.மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், சில அமைச்சர்களுடன் மோடி தனியாக பேசுவார். இதை வைத்து அந்த அமைச்சர், பிரதமருக்கு நெருக்கம் என்ற பேச்சு ஓடும்.ஆனால், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில், சென்ற முறை தனியாக பேசிய அமைச்சர்களை பிரதமர் மோடி கண்டுகொள்ள மாட்டார். தனக்கு நெருக்கம் என அமைச்சர்கள் வெளியே சொல்வதை மோடி விரும்பாதது தான் இதற்கு காரணம்.
ஆனாலும் மூத்த அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோருடன் எப்போதும் நெருக்கமாக இருக்கிறார் மோடி. காரணம், இவர்களின் துறைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. புதிதாக பதவியேற்றுள்ள ஒரு அமைச்சருக்கு இதில் வருத்தமாம்.