கோவை: பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான விமானப்படை அதிகாரியிடம், போலீசார் விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.கோவை, ரெட்பீல்ட்ஸ் விமானப்படை கல்லுாரியில் பயிற்சி பெற்ற, டில்லியை சேர்ந்த 28 வயது விமான படை பெண் அதிகாரியை, சக அதிகாரி அமித்தேஷ் ஹர்முக்,29, பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.அவரை, 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மகளிர் போலீசார், கூடுதல் மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விமானப்படை புலன் விசாரணை அதிகாரிகள், கைதான அதிகாரியை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பதில் மனு தாக்கல் செய்தனர்.விசாரணையை விமானப்படை நீதிமன்றமான, 'கோர்ட் மார்ஷியலுக்கு மாற்றி, கோர்ட் உத்தரவிட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்தது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நாகராஜன் நேற்று பிறப்பித்த உத்தரவு:கைதான அதிகாரியிடம் விசாரிக்க, போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. விமானப்படையிடம் முன் அனுமதி பெற்று, விசாரணை நடத்தலாம். விசாரணைக்கு, விமானப்படை நிர்வாகம், தனி இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும். போலீஸ் விசாரணைக்கு, விமானப்படை அதிகாரிகள் எந்த குறுக்கீடும் செய்யக்கூடாது.போலீசார் விசாரித்து முடித்த பிறகு, விசாரணை அறிக்கை மற்றும் சாட்சிய ஆவணங்களின் ஒரு நகலை கோர்ட் மார்ஷியலிடம் போலீசார் ஒப்படைக்க வேண்டும். கைதானவரை விமானப்படை கஸ்டடியில் வைத்துக்கொள்ளலாம்.விமானப்படை சட்டத்தின் படி, வழக்கு விசாரணை கோர்ட் மார்ஷியலில் நடைபெறும். கோர்ட் மார்ஷியல் வழக்கை விசாரித்து தீர்ப்பு அளித்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டாலோ அல்லது தண்டனை பெற்றாலோ, மத்திய அரசின் முன் அனுமதி பெற்று, கிரிமினல் கோர்ட்டில் அதே குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரணை நடத்தலாம்.
இவ்வாறு, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE