மதுரை:பட்டா கோரி 6 லட்சத்து 62 ஆயிரத்து 330 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும், 3 மாதங்களில் தீர்வு காணப்படும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நில உட்பிரிவு செய்தல் மற்றும் பட்டா மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி பல்வேறு வழக்குகள் தாக்கலாகின.நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார். நில அளவை மற்றும் நில ஆவணத்துறை கூடுதல் இயக்குனர் கண்ணபிரான் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கை: 2020 டிசம்பர் வரை பட்டா கோரி 40 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருந்தன.
மாதம்தோறும் 1.18 லட்சம் வீதம் புதிய மனுக்கள் தாக்கலாகின. தற்போது வரை பட்டா தொடர்பாக 6 லட்சத்து 62 ஆயிரத்து 330 மனுக்கள் நிலுவையில் உள்ளன என குறிப்பிடப்பட்டது.
நீதிபதி: நிலுவையிலுள்ள மனுக்களுக்கு தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் படும். இதற்கு 3 மாதங்கள் அவகாசம் தேவை. ஓ.பி.டி.,-ஐ.எஸ்.டி.,மனுக்கள் தொடர்ந்து மறு ஆய்வு செய்யப்படுகிறது. தற்போதைய மனித சக்தியின் துணையுடன் அதிகபட்ச மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
நில அளவை மற்றும் நில ஆவணத்துறையில் போதிய அலுவலர்கள் இல்லை. கள உதவியாளர் பணியிடத்தில் 70 சதவீதம் மற்றும் கள அளவையாளர் 40 சதவீதம் காலியாக உள்ளதாக இந் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. காலியிடங்களை நிரப்ப மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்.,26க்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE