பேரனை கொன்று தலைமறைவான பாட்டி மதுரையில் கைது: இன்றைய கிரைம் ரவுண்ட் அப்

Updated : அக் 24, 2021 | Added : அக் 24, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்உத்தரகண்ட் பனிப்புயல் 12 சடலங்கள் மீட்புஉத்தரகண்டில் கடுமையான பனிப் புயலில் சிக்கி உயிரிழந்த மலை ஏற்ற வீரர்கள் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு 11ல், ஹர்சில் நகரில் இருந்து 11 பேர் லம்காகா கணவாய் வழியே சிட்குல் மலைக்கு பயணத்தை துவக்கினர்.கடந்த வாரம் வீசிய கடும்
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்இந்திய நிகழ்வுகள்


உத்தரகண்ட் பனிப்புயல் 12 சடலங்கள் மீட்பு

உத்தரகண்டில் கடுமையான பனிப் புயலில் சிக்கி உயிரிழந்த மலை ஏற்ற வீரர்கள் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு 11ல், ஹர்சில் நகரில் இருந்து 11 பேர் லம்காகா கணவாய் வழியே சிட்குல் மலைக்கு பயணத்தை துவக்கினர்.கடந்த வாரம் வீசிய கடும் பனிப் புயலில் மலையேறும் குழுவினர் சிக்கி, திசை தவறினர். அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் விமானப் படை மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இது குறித்து உத்தரகண்ட் டி.ஜி.பி., அசோக் குமார் கூறியதாவது:ஹர்சில் நகரில் இருந்து மலையேறிய ஏழு பேர் பனிப் புயலில் சிக்கி இறந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன

இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரை தேடும் பணி நடக்கிறது. இது தவிர கடந்த 18ல் லம்காகா கணவாய் வழியே 17 பேர் மலையேறி உள்ளனர். அவர்களும் பனிப்புயலில் சிக்கி திசை மாறினர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். இறந்து கிடந்த ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சியோரை தேடும் பணியில் விமானப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


கடத்தப்பட்ட சிறுமி மீட்புபாலியா: உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஜனவரியில் மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்கு பின், வாரணாசியில் அந்த சிறுமியை நேற்று போலீசார் மீட்டனர். அவரை ஒரு இளைஞர் கடத்தி வந்ததும், ஒன்பது மாதங்களாக அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


சாலை விபத்து: 3 பேர் பலிராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பேமேதாரா மாவட்டத்தில் உள்ள பிரதான சாலையில், கார் மீது ஓர் ஆட்டோ வேகமாக மோதியது. இதில், காரில் இருந்த டிரைவர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். வன்முறை வழக்கு: 3 பேர் கைதுலக்கிம்பூர் கேரி: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் சமீபத்தில் நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமிழக நிகழ்வுகள்


latest tamil news
கொலை, குண்டுவீச்சு வழக்கு திருப்பூரில் ரவுடி கைதுதிருப்பூர்:பல்வேறு கொலை மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்குகளில், தொடர்புடைய பிரபல ரவுடி, திருப்பூரில் சிக்கினார்.

மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கொலை, பெட்ரோல் குண்டு வீச்சு, ஆயுதங்களை வீட்டில் வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய மதுரை, அனுப்பானடியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், 36 என்பவர், தலைமறைவானர்.அவரை, மதுரை போலீசார் கடந்த ஒரு மாதமாக தேடி வந்தனர். இவர் திருப்பூரில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. சாமளாபுரம், கருகம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ராமகிருஷ்ணனை போலீசார் பிடித்தனர். அவர் மதுரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் கூறுகையில், 'கைது செய்யப்பட்டுள்ள ராமகிருஷ்ணன் மீது, மதுரை, சிவகங்கையில், ஐந்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. 2012ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்று விட்டு திரும்பிய கார் மீது, பெட்ரோல் குண்டு வீசியதில், ஏழு பேர் இறந்தனர். இந்த வழக்கில், இவர் முக்கியக் குற்றவாளி. சமீபத்தில் அவரது வீட்டில் ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பான வழக்கும் உள்ளது' என்றார்.


இருவர் மீது 'போக்சோ'அணைக்கட்டு:இருவேறு இடங்களில் மாணவி உட்பட இருவரை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் போக்சோவில் க‍ைது செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் பிரசாந்த் குமார், 25; கட்டட தொழிலாளி. இவர், 13 வயது சிறுமியை கடந்த மாதம், 25ல் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். புகார்படி அணைக்கட்டு போலீசார் வேலுாரில் பதுங்கியிருந்த அவர்களை மீட்டனர். சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், பிரசாந்த் குமாரை போக்சோவில் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மாங்கொத்து கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார், 21. சென்னையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். விடுமுறைக்கு ஊருக்கு வந்த அவர், பிளஸ் 2 மாணவியை கடந்த, 2ல் கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்து, பலாத்காரம் செய்துள்ளார்.

புகாரின்படி, கோவிந்தந்தாங்கலில் பதுங்கியிருந்த அவர்களை, பாணாவரம் போலீசார் மீட்டனர். மாணவிய‍ை ராணிப்பேட்டை அரசு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், தினேஷ்குமாரை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.


வீட்டு ஜன்னல் உடைத்து ரூ. 1.5 கோடி நகை திருட்டுபெ.நா.பாளையம்: கோவையில் நள்ளிரவில் வீட்டு ஜன்னலை உடைத்து புகுந்த திருடர்கள், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றனர்.

கோவை மாவட்டம், துடியலுார் ஜி.என். மில்ஸ் பிரிவு அருகே உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர் ஸ்ரீனிவாசன், 52; ஐஸ்கிரீம் வினியோகஸ்தர்.நேற்று முன்தினம் இரவு, வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, முதல் தளத்தில் உள்ள ஒரு படுக்கை அறையில் உறங்கச் சென்றார். காலையில் ஸ்ரீனிவாசன் எழுந்து பார்த்தபோது, தரைதள ஹாலின் பின்புறம் உள்ள கண்ணாடி ஜன்னல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. ஆட்கள் வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் இருந்ததால், மேல்தளத்தில் இருந்த இன்னொரு படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, நான்கு வைர நெக்லஸ், 50 சவரன் நகை காணாமல் போய் இருந்தது. கோவை டி.ஐ.ஜி., முத்துசாமி, எஸ்.பி., செல்வ நாகரத்தினம் விசாரணை நடத்தினர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறிய, 4 டி.எஸ்.பி.,க்கள், 6 இன்ஸ்பெக்டர், 15 எஸ்.ஐ.,க்கள் கொண்ட, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதேபகுதியில், ஐந்து வீடுகளில் திருட முயற்சி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.


latest tamil news
பேரனை கொன்று தலைமறைவான பாட்டி கைது

பெ.நா.,பாளையம்: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரன் - ஐஸ்வர்யா தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பராமரிப்பதற்காக, ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி சமீபத்தில் மதுரையில் இருந்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா வெளியே சென்ற நேரத்தில், ஆண் குழந்தையை கத்தியால் தாக்கி கொன்ற சாந்தி, பெண் குழந்தையை கடுமையாக தாக்கி உள்ளார். இது குறித்து பாஸ்கரன் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். சாந்தி, தலைமறைவானார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மதுரை பாத்திமா கல்லூரி அருகே உறவினர் வீட்டில் தங்கியிருந்த சாந்தியை கைது செய்து துடியலூர் அழைத்து சென்றனர்.


உலக நிகழ்வு
மெக்சிகோவில் பலியான இந்திய பெண் யார்?லாஸ் ஏஞ்சலஸ்-வட அமெரிக்க நாடான மெக்சிகோவின், துலும் நகரில் நேற்று முன்தினம் இரவு, இரண்டு போதை பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது சாலையோர உணவகத்தில் அமர்ந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியர் மீது, குண்டுகள் பாய்ந்தன. இந்த சம்பவத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இறந்தனர்.பலியான இந்திய பெண் குறித்து போலீசார் கூறியதாவது: இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த அஞ்சலி ரையாட், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் ஜோசில் 'லிங்டுஇன்' நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சுற்றுலா பயண அனுபவங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்த இவர், அண்டை நாடான மெக்சிகோவின் துலும் நகர் சென்றுள்ளார். மறுநாள் தன் பிறந்த நாளை கொண்டாடவிருந்த அஞ்சலி ரையாட், நண்பர்களுடன் சாலையோர உணவகத்தில் அமர்ந்திருந்தபோது, போதை பொருள் கடத்தல் கும்பலின் துப்பாக்கி சண்டையில், குண்டு பாய்ந்து பலியானார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X