சாதிக்க வயது தடையில்லை ; சொல்கிறார் வில்லன் நடிகர் ‛'பெசன்ட்' ரவி

Updated : அக் 26, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
''சாதிக்க வயது ஒரு பொருட்டே இல்லை. அதை நிரூபிக்கவே, நான் சர்வைவர் சென்றேன்,'' என்கிறார் வில்லன் நடிகர் 'பெசன்ட்' ரவி. சமீபத்தில் தொலைக்காட்சி தொடரான, 'சர்வைவர்' நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய அவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:அதென்ன 'பெசன்ட்' ரவி? ரவி என்ற பெயரில் பலர் உள்ளனர். ரவி என்பதை விட 'நிழல்கள்' ரவி என்பது தான் அடையாளம்.
 சாதிக்க வயது  தடையில்லை ;   சொல்கிறார்  வில்லன் நடிகர்  ‛'பெசன்ட்' ரவி

''சாதிக்க வயது ஒரு பொருட்டே இல்லை. அதை நிரூபிக்கவே, நான் சர்வைவர் சென்றேன்,'' என்கிறார் வில்லன் நடிகர் 'பெசன்ட்' ரவி.

சமீபத்தில் தொலைக்காட்சி தொடரான, 'சர்வைவர்' நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய அவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:


அதென்ன 'பெசன்ட்' ரவி?


ரவி என்ற பெயரில் பலர் உள்ளனர். ரவி என்பதை விட 'நிழல்கள்' ரவி என்பது தான் அடையாளம். இயக்குனர் ஹரி ஒரு முறை, 'பெசன்ட் நகரில் இருந்து வருவாரே அந்த ரவியை கூப்பிடு' என்றார். அது அப்படியே, 'பெசன்ட்' ரவி ஆகிவிட்டது.


சர்வைவர் போட்டியில் ஆர்வமாக பங்கேற்ற நீங்கள், போட்டியாளர்களிடம், 'என்னை வெளியேற்றி விடுங்கள்' எனக்கூற காரணம் என்ன?


இந்த விளையாட்டு ரொம்ப புதுசு. அனைவருமே ஜெயிக்க வேண்டும் என்று தான் வந்தோம். போன பின் தான், பிராக்டிக்கலாக பல விஷயம் தெரிந்தது. அங்கே சாப்பாடு எதிர்பார்த்தது போல் இல்லை. போட்ட துணியை உப்பு தண்ணீரில் துவைத்து போட வேண்டும். துாக்கம் இல்லை. விலங்குகள் பயம் ஒரு பக்கம்.இந்த மனநிலையில், ஒவ்வொரு கடினமான போட்டியிலும் முன்னேற வேண்டும். கற்றுக் கொள்ளும் நேரமும் மிக குறைவு. இதில், எனக்கு ஏற்பட்ட முதுகுபிடிப்புடன் தான், ஏழெட்டு முறை விளையாடினேன். என், 49 வயதில் ஏதாவது நிரூபிக்க வேண்டும் என்று தான் வந்தேன்.இருந்த வரை நன்றாகவே விளையாடினேன். ஆனால், வலியால் தொடர முடியவில்லை. என்னால் என் குழுவுக்கு பாதிப்பு வரக்கூடாது. அதனாலேயே வெளியேற்ற சொன்னேன்.


சர்வைவர் இப்படி தான் இருக்கும் என தெரிந்து தானே சென்றீர்கள்?


வெளிநாட்டில் நடக்கும் சர்வைவர் போட்டியை பார்த்துள்ளேன். எப்படி இருக்கும் என்றும் தெரியும். தமிழில், ஏதாவது ஒரு லுாப் இருக்கும் என நினைத்தேன். ஆனால், சர்வைவர் ரூல் இது தான் என கூறிவிட்டனர். சாப்பாடு உட்பட அனைத்தையுமே கஷ்டப்பட்டு தான் பெற வேண்டி இருந்தது. நாங்கள் மட்டுமல்ல; அர்ஜுன் சார் வரை அனைவருமே கஷ்டப்பட்டோம்.


போட்டியாளர்களில் பெண்களும் பங்கேற்றது குறித்து?


சர்வைவரை பொறுத்தவரை, மைன்ட் மற்றும் பவர் இரண்டுமே தேவை. அப்புறம் கூட்டு முயற்சி. கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே முன்னேற முடியும். அதனால், இதில் ஆண், பெண் வித்தியாசம் பார்க்க முடியாது.கேமில், கடைசி நிமிடத்தில் தான் சில விஷயம் தெரியவரும். யாருக்கு என்ன வரும் என்பதை அறிந்து, அப்போது திட்டமிடுவோம். உடன் இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதும் மிகவும் முக்கியம். ஏன் என்றால் ஓட்டு போடுவது போட்டியாளர் அல்லவா!


சர்வைவர் என்ன சொல்லிக் கொடுத்தது?


வலிமையாக இரு; சாப்பாடு இல்லாமல் வாழ கற்றுக் கொள். உடன் இருப்பவர்களுடன் அன்பாக நடந்து கொள் என்பதையே சொல்லி கொடுக்கிறது.


கூட்டு முயற்சிக்கு பங்கம் வந்தது ஏன்?


சின்ன சண்டை வந்தாலும், அதை உடனே சரி செய்து, அடுத்த கட்டத்திற்கு செல்வோம். நான் உள்ளவரை பங்கம் வந்ததே இல்லை. ஒரே ஒரு அம்மா இருந்தாங்க; பார்வதின்னு ஒருத்தர் அழகாக இருந்தாங்க.ரொம்ப திறமையான பெண். அதிகம் விஷயம் தெரிந்தவங்க. நல்லா விளையாடினாங்க. ஆனால் அவரே, அவரை கெடுத்துக் கொண்டார். 'பெண்ணா இருந்தால் செய்ய முடியாதா?' என, அவர் தான் கூறினார். நாங்கள் யாரும் சொல்லவில்லை. யாரையும் நாங்கள் தனிமைப்படுத்தவில்லை.


வீட்டுக்கு வந்ததும் வரவேற்பு எப்படி இருந்தது?


வீட்டில் என்னை பார்த்ததும் மகிழ்ந்தனர். 'இன்னும் விளையாடி இருக்கலாம்' என்றனர். ஆனால், என் வலியை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் நின்றபடி தான் வந்தேன்.என்னால் உட்கார முடியவில்லை. இடுப்புக்கு கீழே வேலை செய்யாமல் போய்விட்டது. எனக்கு வழங்கப்பட்ட மருத்துவத்தை பார்த்து, 'நீங்கள் திரும்பி வந்ததே நல்லது' என்றனர்.


வெற்றி வாய்ப்பு யாருக்கு எப்படி?


இதுவரை எனக்கு தெரியவில்லை. இதில், ஆண், பெண் வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். ஆனால், வெற்றிக்கனியை பறிக்கும் போது, அந்த நபர் தகுதியானவராக இருக்க வேண்டும். அப்போது தான் ரசிகர்களும், நாங்களும் மகிழ்வோம்.


அடுத்து எந்தெந்த படங்களில் நடிக்கிறீர்கள்?


ஏழெட்டு படம் கைவசம் இருந்த போதே, சர்வைவர் வந்து விட்டேன். கிட்டத்தட்ட 14 கிலோ குறைந்து விட்டேன். அந்தந்த படங்களில் நடிக்க உடற்பயிற்சி மூலம் எடையை கூட்ட வேண்டும். சில படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறேன்.


திரைத்துறை பயணம் குறித்து?


சினிமாவில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். அடியாளாகவும், வில்லனாகவும் நடித்துள்ளேன். இப்போதும், நான் சினிமாவில் இருப்பதே எனக்கு மகிழ்ச்சி. இந்தந்த பாத்திரத்தில் தான் நடிப்பேன் என கூறியது இல்லை. கடைசி வரை கெட்ட பெயர் எடுக்காமல், நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


சண்டை காட்சிகளில் அதிக மிகைப்படுத்துதல் நியாயமா?


நடிகனாக நான் மட்டுமே முடிவு எடுக்க முடியாது. இயக்குனர் சொல்படியே நடக்க வேண்டும். இன்று யாரையுமே குறைத்து மதிப்பிட முடியாது. அப்போது வந்த ஷாருக் கான் கூட, நேற்று வந்த லெஜென்ட் சரவணன் சார் மாதிரி தான் இருந்தார். சாதிக்க வயது ஒரு பொருட்டே இல்லை. அதை நிரூபிக்கவே, நான் சர்வைவர் சென்றேன். ஹாலிவுட்டில் 50 வயதுக்கு மேற்பட்ட நாயகர்கள் அதிகம். அதை நாம் ஏற்கும் போது, இந்தியாவில் மட்டும் ஏன் மறுக்க வேண்டும்?


நன்றி சொல்ல நினைக்கும் நபர் யார்?


நிறைய பேருக்கு சொல்ல வேண்டும். சின்ன பையனாக இருந்தாலும், அவரிடம் சில விஷயம் கற்றால் அவரையும் குருவாகவே பார்ப்பேன். எனக்கு ஆசானாக, ரோல் மாடலாக நிறைய பேர் உள்ளனர். கணக்கு வழக்கே இல்லை. கெட்டவனிடமும் உள்ள நல்ல விஷயத்தை எடுத்துக் கொள்வேன்.


வாழ்க்கையில் இழப்பை கொடுத்த வலி எது?


நிறைய இருக்கு சார். கொரோனாவால் ஏகப்பட்ட இழப்பு. அப்போதெல்லாம் இன்று தான் வாழ்க்கை ஆரம்பம் என, நினைப்பேன். இழந்ததை பாடமாக எடுத்துக் கொள்வேன். பைக் மெக்கானிக்காக நடைபாதையில் வாழ்க்கையை துவங்கிய நான், இன்று சினிமா, ஓட்டல் தொழில் என, பயணிக்கிறேன். சாகும் வரை இழப்பு இருந்து கொண்டு தான் இருக்கும். அதில் மீண்டு வந்து கொண்டே இருக்க வேண்டும்.


எதிர்காலம் குறித்து?


பிள்ளைகள் நன்கு படிக்கின்றனர். அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும். நண்பருடன் இணைந்து ஓட்டல் நடத்தி வருகிறேன். சாப்பிட்டு செல்பவர்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சியை பார்த்து, நானும் மகிழ்கிறேன். இது தொடர வேண்டும். சினிமாவில் எந்த கெட்டப்பெயரும் இல்லாமல் கடைசி வரை நடிக்க வேண்டும்.


விட நினைக்கும் பழக்கம்?


ஆல்கஹால் மாதிரியான எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. நான் அதிகமாக நகை அணிவேன். நம்மை நாமே அழகாக காட்ட வேண்டும் என நினைத்தேன். ஆனால், இது எதுவுமே இல்லாமல் வாழ முடியும் என்பதை சர்வைவர் கற்றுக் கொடுத்துள்ளது.இனி வரும் காலம், எளிமையாக இருக்கும். அடையாளத்தை மாற்ற முடியாது. தோரணையில் மாறவில்லை என்றாலும், மனதளவில் சிம்பிள் நான்.
-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G. Madeswaran - MA,யூ.எஸ்.ஏ
21-நவ-202109:43:07 IST Report Abuse
G. Madeswaran சூப்பர் பெசன்ட் ரவி சார், திரையில் நீங்கள் வில்லனானாலும், நிஜத்தில் மிக பண்பாடான மிக எளிமையான மனிதர், உண்மை வார்த்தைகள், வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
FABIEN RAVINDRAN - DRANCY,பிரான்ஸ்
26-அக்-202112:31:08 IST Report Abuse
FABIEN RAVINDRAN அருமை வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X