பாட்னா: பீஹாரில், காங்., - ஆர்.ஜே.டி., இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அக்கட்சிகள் அடங்கிய 'மெகா கூட்டணி'யில் விரிசல் ஏற்படும் என தெரிகிறது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 இடங்களை கைப்பற்றியது. காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது.
ஓராண்டுக்குப் பின், பீஹார் சட்டசபை தேர்தலில், காங்., மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி., எனப்படும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.'மகா' கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்ட இந்த அணி, பெரும்பான்மைக்கு தேவையான, 10 இடங்களை குறைவாகப் பெற்றதால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நெருக்கத்தில் தவற விட்டது.
இந்நிலையில் அடுத்த வாரம் இடைத் தேர்தல் நடக்க உள்ள தாராபூர், குஷேஷ்வர் சட்டசபை தொகுதிகளுக்கு காங்., உடன் ஆலோசிக்காமல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இதனால் கடுப்பான காங்., போட்டி வேட்பாளர்களை அறிவித்தது. இது மகா கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

இந்நிலையில், 'அடுத்த லோக்சபா தேர்தலில் பீஹாரில் அனைத்து தொகுதிகளிலும் காங்., வேட்பாளர்களை நிறுத்தும்,'' என பீஹார் மாநிலத்திற்கான அகில இந்திய காங்., பொறுப்பாளர் பக்த் சரன் தாஸ் அறிவித்தார். இதனால் இரு கட்சிகள் இடையிலான மோதல் மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து பீஹார் மாநில ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் ஜகதானந்த் சிங் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. அதற்குள் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக காங்., கூறுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது என தெரியவில்லை. இது கட்சித் தலைமையின் கருத்தா? அல்லது சொந்தக் கருத்தா? என்பதை பக்த் சரன் தாஸ் விளக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த மோதல் காரணமாக எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி பிளவுபடும் என தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE