மும்பை:பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மீதான போதை பொருள் வழக்கில், அதிகாரிகள் தன்னிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியதாக முக்கிய சாட்சியான பிரபாகர் செய்ல் புகார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் பல கோடி ரூபாய் பேரம் நடந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்தியதற்காக சமீபத்தில் கைதாகி சிறையில் அடைக்கப் பட்டு உள்ளார்.
சொகுசு கப்பல்
இந்த வழக்கில் தனியார் துப்பறியும் நிபுணரான கே.பி.கோசாவி என்பவர், போதை பொருள் தடுப்பு படையினருக்கு உதவியதாக கூறப்படுகிறது. கோசாவி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. கோசாவியின் கார் டிரைவரான பிரபாகர் செய்ல், 40, இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இணைக்கப்பட்டுள்ளார். ஆர்யன் கான் கைதின் போது பிரபாகரும், கோசாவியும், சொகுசு கப்பலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபாகர் செய்ல் தற்போது 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:கடந்த அக்., 2ல் சொகுசு கப்பலில் சோதனை நடந்த அன்று இரவு கோசாவி என்னை அழைத்தார். கப்பலில் விருந்தினர்கள் வருகை தரும் பகுதியில் ஆர்யன் கானும், முன்முன் தமேச்சா என்ற பெண் உட்பட வேறு சில நபர்களுடன் போதை பொருள் தடுப்பு படையினர் இருந்தனர்.அவர்களை போதை பொருள் தடுப்பு படை அலுவலகத்துக்கு அழைத்து சென்ற பின், கோசாவியும், போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவும் வெற்று காகிதத்தில் என்னிடம் கையெழுத்து வாங்கினர்.
பின், சாம் டிசோஸா என்பவரை கோசாவி சந்தித்து பேசினார். அதன் பின் நாங்கள் காரில் புறப்பட்டு சென்றோம். அப்போது கோசாவி தொடர்ந்து சாம் டிசோஸாவுடன் மொபைல் போனில் பேசிய படி வந்தார்.அப்போது '25 கோடி ரூபாய் பெரிய தொகை, 18 கோடி ரூபாயை இறுதி செய்து கொள்வோம். அதில் 8 கோடி ரூபாயை சமீர் வான்கடேவுக்கு கொடுக்க வேண்டும்' என, பேசினார்.
ரூ.38 லட்சம்
அன்று மாலையில் கோசாவி, சாம் டிசோஸா, நடிகர் ஷாருக்கின் மேலாளர் பூஜா தட்லானி ஆகியோர் காரில் சந்தித்து 15 நிமிடங்கள் பேசினர்.அருகில் உள்ள ஓட்டலில் இருந்து பணத்தை பெற்று வரும்படி என்னை அனுப்பினர். வெள்ளை நிற காரில் வந்த சிலர், இரண்டு பைகள் நிறைய பணம் தந்தனர். அதை வாங்கி வந்து சாம் டிசோஸாவிடம் கொடுத்தேன். அதில் 38 லட்சம் ரூபாய் இருந்தது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை போதை பொருள் தடுப்பு படையினர் மறுத்துள்ளனர். 'இது அடிப்படை ஆதாரமற்றது. அவர் கூறுவதை போல பணம் கைமாறி இருந்தால் கைது நடவடிக்கையை எதற்காக மேற்கொள்ள வேண்டும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.''இந்த குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் தகுந்த பதிலடி தரப்படும்,'' என, போலீஸ் அதிகாரி சமீர் வான்கடே தெரிவித்தார்.
பெரிய அளவில் பேரம்
இது குறித்து சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறியதாவது:சாட்சியிடம் வெற்று தாளில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பெரிய அளவில் பேரம் நடந்துள்ளதாக முக்கிய சாட்சியே கூறுகிறார். இதை போலீசார் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். மஹாராஷ்டிர அரசுக்கு களங்கம் விளைவிக்கவே இந்த வழக்கு போடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
நல்வழிபடுத்த வேண்டுகோள்!
பல்வேறு மாநிலங்களிலும் போதை பொருள் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் வருவாய் துறையிடம் வேண்டுகோள் ஒன்றை சமீபத்தில் விடுத்து உள்ளது. அதில், 'சொந்த பயன்பாட்டுக்காக சிறிய அளவில் போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைப்பதற்கு பதில், அவர்களை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் வகையில், போதை பொருள் தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE