ஜம்மு:''ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியை சீர்குலைத்திட ஒருவரையும் அனுமதிக்க மாட்டோம்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
மூன்று நாள் பயணமாக ஜம்மு - காஷ்மீர் சென்ற அமித் ஷா, ஜம்மு ஐ.ஐ.டி.,யில் நடந்த புதிய வளாகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். பின் மாலை ஜம்முவில் பகவதி நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது காஷ்மீரை ஆண்ட காங்., மற்றும் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய முன்று கட்சிகள் குறித்து பெயர் குறிப்பிடாமல் பேசியதாவது:
மூன்று குடும்பங்கள் பல ஆண்டுகளாக காஷ்மீரை ஆட்சி செய்தன. ஆனால் காஷ்மீர் வளர்ச்சியில் தோல்வி அடைந்து விட்டன. இதற்கு அந்த குடும்பங்கள் காஷ்மீர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில், ஜம்மு - காஷ்மீர் புதிய வளர்ச்சிப் பாதையில் நடைபோடத் துவங்கியுள்ளது. அதை சீர்குலைக்க சில விஷமிகள் முயற்சிக்கின்றனர். காஷ்மீரின் அமைதி மற்றும் வளர்ச்சியை ஒருவராலும் தடுக்க முடியாது.
பிரதமர் மோடியின் முயற்சியால் ஜம்மு - காஷ்மீரில் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு குவிந்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர உள்ளது. மத்தியில் பா.ஜ., அரசு அமைந்த பின் காஷ்மீருக்கு 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் 33 ஆயிரம் கோடி ரூபாய் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். பிரதமர் மோடியின் இதயத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு தனி இடம் உள்ளது. அவரது ஆட்சியில் இனி, ஜம்மு - காஷ்மீர் மக்களிடையே பாகுபாடு, அநீதி ஆகியவற்றுக்கு இடமில்லை. பல ஆண்டுகளாக ஜம்மு புறக்கணிக்கப்பட்டு வந்தது. இந்த பாரபட்ச அணுகுமுறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இனி காஷ்மீருடன் சேர்ந்து ஜம்முவும் வளர்ச்சி காணும்; இது இந்தியாவுக்கு மேலும் வலு சேர்க்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று, அமித் ஷாவின் பேச்சுக்கு பலத்த உற்சாகத்துடன் கரகோஷம் எழுப்பினர். இக்கூட்டத்தைத் தொடர்ந்து டிஜியானா குருத்வாரா சென்ற அமித் ஷா, காஷ்மீரின் அமைதி, வளம் ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்தார். அவருடன், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு - காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் குருத்வாரா சென்றனர்.
இதன்பின், காஷ்மீர் பண்டிட் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்த அமித் ஷா, அவர்களது குறைகறை கேட்டறிந்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவது ஜனசங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு பெரும் கனவாக இருந்தது. அந்தக் கனவை பிரதமர் நரேந்திர மோடி தன் முயற்சியால் ரத்து செய்து, நனைவாக்கியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE