பண்டிகைக்கு உள்ளூர் பொருட்களை வாங்கும்படி பிரதமர்...வேண்டுகோள்! :தடுப்பூசி சாதனையால் நாட்டிற்கு வலிமை என பெருமிதம்| Dinamalar

பண்டிகைக்கு உள்ளூர் பொருட்களை வாங்கும்படி பிரதமர்...வேண்டுகோள்! :தடுப்பூசி சாதனையால் நாட்டிற்கு வலிமை என பெருமிதம்

Updated : அக் 26, 2021 | Added : அக் 24, 2021 | கருத்துகள் (17) | |
புதுடில்லி, அக். 25- தன் மாதாந்திர, 'மன் கி பாத்' ரேடியோ உரையில், பண்டிகைக்கு உள்ளூர் பொருட்களை வாங்கும்படி, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். தடுப்பூசி சாதனையால் நாட்டிற்கு வலிமை ஏற்பட்டுள்ளதாக பெருமிதத்துடன்குறிப்பிட்டுள்ள அவர், பெண் போலீசாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு பாராட்டும் தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி 2014ல் பதவியேற்றதில் இருந்து, மன் கி பாத்
பண்டிகைக்கு உள்ளூர் பொருட்களை வாங்கும்படி பிரதமர்...வேண்டுகோள்! :தடுப்பூசி சாதனையால் நாட்டிற்கு வலிமை என பெருமிதம்

புதுடில்லி, அக். 25- தன் மாதாந்திர, 'மன் கி பாத்' ரேடியோ உரையில், பண்டிகைக்கு உள்ளூர் பொருட்களை வாங்கும்படி, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். தடுப்பூசி சாதனையால் நாட்டிற்கு வலிமை ஏற்பட்டுள்ளதாக பெருமிதத்துடன்குறிப்பிட்டுள்ள அவர், பெண் போலீசாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு பாராட்டும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 2014ல் பதவியேற்றதில் இருந்து, மன் கி பாத் என்ற ரேடியோ உரை வாயிலாக, நாட்டு மக்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்.


புதிய கொள்கை

அதன்படி, இந்த மாதத்துக்கான நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ளதாவது:நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், கலாசார அமைச்சகம் சார்பில் தேசபக்தி பாடல் போட்டிகள் விரைவில் அறிவிக்கப்படும். இதில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்று, புதிய இந்தியாவை பிரதிபலிக்கும் வகையில், நம் நாட்டின் சாதனைகளைக் குறிக்கும் வகையில், தேசபக்தி பாடல்களை எழுத வேண்டும்.

தாலாட்டு பாடல்கள் கலையை நாம் பேணி காக்கும் வகையிலும் போட்டிகள் நடத்த திட்டமிட்டு உள்ளோம். தேசபக்தியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்காக பாடும் வகையில் தாலாட்டு பாடல்கள் எழுதப்பட வேண்டும். அவை, 21வது நுாற்றாண்டுக்கான நம் கனவுகள், இலக்குகளை உணர்த்தும் வகையில் இருக்க வேண்டும்.

மேலும், 75வது சுதந்திர தினத்தையொட்டி, ரங்கோலி எனப்படும் வண்ணக் கோலங்கள் வரையும் போட்டியும் நடத்தப்படும்.இவை நம் கலாசாரத்தை, பாரம்பரியத்தை பிரதிபலிக்கும். அதே நேரத்தில், தொழில்நுட்ப ரீதியில் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கேற்ப, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறு விமான பயன்பாட்டில் புதிய கொள்கையை உருவாக்கி உள்ளோம். இதனால், இந்த துறையில் புதிய முதலீடுகள் கிடைக்கத் துவங்கிஉள்ளன.

நம் ராணுவமும் தன் தேவைக்கு அதிக அளவில் 'ஆர்டர்' கொடுக்க உள்ளது.இது ஒரு துவக்கம் தான். ட்ரோன் தொழில்நுட்பத்தில் பல புதிய முயற்சிகளில் நம் நாடு முன்னோடியாக விளங்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.


தடுப்பூசி சாதனை

இந்த நேரத்தில் 100 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசி வழங்கி புதிய சாதனை படைத்து உள்ளோம்; இது புதிய உற்சாகத்தை நமக்கு அளித்துள்ளது.ஒன்றிணைந்து செயல்படுவதில் வலிமையையும், நம் நாட்டின் திறனையும் வெளிப்படுத்தி உள்ளோம்.இந்த மிகப்பெரிய வெற்றி சாத்தியமாகும் என்பதை முதலில் இருந்தே நம்பினேன். நம் சுகாதார பணியாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் மீது முழு நம்பிக்கையுடன் இருந்தேன்.

தங்கள் ஓய்வில்லா உழைப்பின் வாயிலாக புதிய உதாரணத்தை சுகாதார பணியாளர்கள் படைத்துள்ளனர்.தடுப்பூசியால் நாட்டு மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு அளித்துள்ள அதே நேரத்தில், மக்களின் பொது பாதுகாப்பில் பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவது பாராட்டுக்கு உரியது.கடந்த 2014ல் நாங்கள் பதவியேற்ற போது, போலீஸ் துறையில் 1.05 லட்சம் பெண்கள் இருந்தனர். அது, 2020ம் ஆண்டில் 2.15 லட்சமாக உயர்ந்துள்ளது. ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளிலும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.


வெற்றி வேண்டும்

வரும் 31ம் தேதி, நம் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாள். பல பிராந்தியங்களை ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட நாட்டை உருவாக்கியவர் அவர். ஒற்றுமை என்ற அவரது கோட்பாட்டை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.தற்போது பண்டிகை காலம் துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் நாம் உள்ளூர் பொருட்களை வாங்குவதன் வாயிலாக, நம் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும்.

மேலும், உள்ளூரைச் சேர்ந்த நம் வியாபாரிகள் வீட்டிலும் விளக்கேற்றி வைக்க முடியும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து உள்ளூர் பொருட்களை வாங்குவோம் என, நாம் அனைவரும் உறுதி எடுத்து, இந்த இயக்கத்தையும் வெற்றி பெற வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


'ஜி - 20' மாநாட்டில் பங்கேற்பு

ஐரோப்பிய நாடான இத்தாலியில், வரும் 30ம் தேதி துவங்கும், ஜி - 20 நாடுகளின் இரண்டு நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர், இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.இந்த மாநாட்டில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நிலவரத்தில் ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்பதை அவர் வலியுறுத்துவார்.

மேலும், பருவ நிலை மாறுபாடு பிரச்னை மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை களில், உலக நாடுகள் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்து விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாநாட்டிற்கு இடையே, பல நாட்டுத் தலைவர்களையும் அவர் தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளதாக தெரிகிறது.

இதைத் தவிர, வரும் 31 முதல் நவ., 12 வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடக்கும், காப் - 26 எனப்படும் பருவ நிலை மாறுபாடு தொடர்பான அமைப்பின் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X