துபாய்-'டி-20' உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக முதன் முறையாக சரிந்தது இந்திய அணி. லீக் போட்டியில் 10 விக்கெட்டில் தோல்வி அடைந்தது.

டி-20' உலக கோப்பை தொடரின் 7வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. முதல் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் தற்போது 12 அணிகள் தலா இரு குரூப்பாக பிரிக்கப்பட்டு, 'சூப்பர்-12' சுற்று போட்டிகள் நடக்கின்றன. 'குரூப்-2'ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்தது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், பவுலிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் இந்திய அணியில் இஷான் கிஷான், அஷ்வின், ராகுல் சகார், ஷர்துல் தாகூருக்கு இடம் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி சேர்க்கப்படவில்லை.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை ஷகீன் அப்ரிதி வீசினார். 4வது பந்தில் ரோகித், எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானார். மீண்டும் வந்த அப்ரிதி, இம்முறை ராகுலை (3) போல்டாக்க இந்திய அணி 6 ரன்/2 விக்., என திணறியது. கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், அப்ரிதி
பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இவர் 11 ரன் எடுத்து அவுட்டானார். சூர்யகுமார், ஹசன் அலி 'வேகத்தில்' ரிஸ்வானிடம் 'கேட்ச்' கொடுத்து வெளியேற இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மனம் தளராத கோஹ்லி, ஹசன் அலி பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். ரிஷாப், 39 ரன்னுக்கு அவுட்டானார்.
கோஹ்லி அரைசதம்
ஹாரிஸ் பந்தில் கோஹ்லி ஒரு பவுண்டரி அடித்து உதவ, 15 ஓவரில் இந்திய அணி 100/4 ரன் எடுத்தது. தொடர்ந்து ஹசன் அலி ஓவரில் 2 பவுண்டரி அடித்து கைகொடுத்த கோஹ்லி, 'டி-20' அரங்கில் 29 வது அரைசதம் எட்டினார். பந்துகளை வீணடித்த ஜடேஜா 13 ரன் (13 பந்து) எடுத்து அவுட்டானார்.
அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, அப்ரிதியின் 19 வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். இதே ஓவரின் 4 வது பந்தில் கோஹ்லி (57 ரன், 49 பந்து) அவுட்டானார். கடைசி பந்தில் 'ஓவர் த்ரோ' வகையில் 5 ரன் இந்தியாவுக்கு கிடைத்தன. பாண்ட்யா 11 ரன் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் மட்டும் எடுத்தது. புவனேஷ்வர் (5), முகமது ஷமி (0) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் அப்ரிதி 3, ஹசன் அலி 2 விக்கெட் சாய்த்தனர்.

எளிய வெற்றி
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கடந்த 10 போட்டிகளில் 5 விக்கெட் மட்டும் சாய்த்து மோசமான பார்மில் இருக்கும் புவனேஷ்வர் முதல் ஓவரை வீசினார். இதன் 2, 3வது பந்தில் பவுண்டரி, சிக்சர் அடித்தார் ரிஸ்வான். ஜடேஜா பந்தில் பாபர் ஒரு சிக்சர் விளாசினார்.
வருண் சக்ரவர்த்தியின் 4வது ஓவரில் ரிஸ்வான், பாபர் தலா ஒரு சிக்சர் அடிக்க, போட்டி இந்திய அணியின் கையை விட்டு நழுவியது. பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரிஸ்வான் (78), பாபர் (68) அவுட்டாகாமல் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE