சென்னை: பதிவாளர் அலுவலகங்களில், ஆவண மோசடியை தடுக்கும் வகையில், பதிவறைகளில் 6 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த அலுவலகங்களில் ஆள்மாறாட்டம் மற்றும் தரகர்கள் நடமாட்டத்தை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பத்திரப்பதிவு பணிகள் முறையாக நடக்கிறதா என்பதை, தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் அளவுக்கு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இருப்பினும், சமீபகாலமாக, பல இடங்களில் மோசடியாக பத்திரப்பதிவுகள் நடப்பதாக புகார்கள் எழுகின்றன.அத்துடன், பதிவு முடிந்த பத்திரங்களை பாதுகாப்பதிலும், பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன.பத்திரங்களை ஸ்கேன் செய்து கணினியில் பதிவேற்றம் செய்தாலும், குறிப்பிட்ட காலம் வரை அச்சு பிரதிகளும், குறிப்பேடுகளும் பராமரிக்கப் படுகின்றன.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது பல இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்களின் பதிவு அறைகளில் இருந்து, கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளது.இதையடுத்து, பதிவு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க பதிவுத் துறை முடிவு செய்துள்ளது. இதுபற்றி பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போது சார் - பதிவாளர் அலுவலகங்களில், மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இதை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், ஆவணங்கள் வைக்கப்படும் பதிவறையிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இத் திட்டத்தை 6 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள, அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE