புதுடில்லி :பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், விசாரணை அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் 25 கோடி ரூபாய் கேட்டு பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போதை பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
போதை பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சொகுசு கப்பலில் சோதனையிட்டு ஆர்யன் கான் உட்பட 20 பேரை கைது செய்தனர்.
கையெழுத்து
இந்த வழக்கில் தனியார் துப்பறியும் நிபுணரான கே.பி.கோசாவி, அவரது கார் டிரைவரும், மெய்காப்பாளருமான பிரபாகர் செய்ல் உட்பட எட்டு பேர் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதில், கே.பி.கோசாவி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் முதன்மை சாட்சியான பிரபாகர் செய்ல், போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று முன் தினம் தாக்கல் செய்தார். அதன் விபரம்:ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட பின், 10 வெற்று காகிதங்களில் போலீஸ் அதிகாரி சமீர் வான்கடே என்னிடம் கையெழுத்து வாங்கினார்.
அதிகாரிகள் நியமனம்
அதன் பின் சாம் டிசோஸா என்பவரை கே.பி.கோசாவி சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் நடிகர் ஷாருக்கின் மேலாளரை காரில் சந்தித்து 15 நிமிடங்கள் விவாதித்தனர்.
இந்த விவகாரத்தில் சமீர் வான்கடே தரப்பினர் 25 கோடி ரூபாய் வரை பேரம் பேசினர். 'இதில், சமீர் வான்கடேவுக்கு எட்டு கோடி ரூபாய் தர வேண்டும்' என, சாம் டிசோஸாவிடம், கோசாவி தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். இதற்கான ஆதரங்கள் என்னிடம் உள்ளன. நேரம் வரும்போது அனைத்தையும் வெளியிட தயாராக உள்ளேன்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆர்யன் கான் கைது விவகாரத்தில் பிரபாகர் செய்லின் இந்த புகார் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 'இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது' என, போலீஸ் அதிகாரி சமீர் வான்கடே திட்டவட்டமாக மறுத்திருந்தார். இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாக்ரேலுக்கு நேற்று முன் தினம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'பொய்யாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி என்னை கைது செய்ய அடையாளம் தெரியாத சில நபர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
'எனவே கைது செய்யப்படுவதில் இருந்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில் சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க டில்லியை சேர்ந்த போதை பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் ஜெனரலும், லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அதிகாரியுமான கியானேஸ்வர் சிங் தலைமையில் மூன்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மனு தாக்கல்
இது குறித்து விசாரணை அதிகாரி கியானேஸ்வர் சிங் கூறியதாவது:
எங்கள் துறை அதிகாரிகள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தயாராக உள்ளோம். இந்த விசாரணை நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் நடக்கும்.விசாரணையின் போக்கு மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் ஆர்யன் கான் வழக்கை, சமீர் வான்கடே தொடர்ந்து விசாரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.பிரபாகர் செய்ல் வைத்துள்ள குற்றச்சாட்டின் அனைத்து அம்சங்களும் முழுமையாக விசாரிக்கப்படும். சமீர் வான்கடே மற்றும் பிரபாகரின் வாக்குமூலங்கள் முறையாக பதிவு செய்யப்படும்.விசாரணை முடிந்ததும் போதை பொருள் தடுப்பு பிரிவின் இயக்குனர் ஜெனரலிடம் அதை அறிக்கையாக சமர்ப்பிப்போம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவர் முடிவெடுப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.
பிரபாகர் செய்லின் குற்றச்சாட்டு குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் போலீஸ் அதிகாரி சமீர் வான்கடே தரப்பில் இருந்து தனித்தனியாக இரண்டு மனுக்கள் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. அதன் விபரம்:ஆர்யன் கான் மீதான வழக்கை நேர்மையாக விசாரிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. எனவே வழக்கு விசாரணையில் முட்டுக்கட்டை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை மற்றும் சாட்சிகளில் குளறுபடி ஏற்பட்டுவிட அனுமதிக்க கூடாது. ஒரு பிரபலமான அரசியல் தலைவரால் தனிப்பட்ட முறையில் பழிவாங்கப்படுகிறேன்.
மன உளைச்சல்
அந்த அரசியல் தலைவரின் மருமகன் சமீர் கான் என்பவரை போதை பொருள் வழக்கில் ஏற்கனவே கைது செய்துஉள்ளேன்.ஆர்யன் கான் வழக்கில் தொடர்புடையவர்கள் சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள். பண பலம் மற்றும் அதிகார பலம் படைத்தவர்கள்.
எனவே உண்மை வெளிச்சத்துக்கு வராமல் இருக்க, விசாரணை அதிகாரிகளை Dமன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோக்கத்தில் இத்தகைய அழுத்தங்கள் அளிக்கப்படுகின்றன. என் மீது கைது நடவடிக்கை பாயுமோ என்ற அச்சுறுத்தலில் இருக்கிறேன். இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட சாட்சியின் குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட கூடாது என நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த மனு போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.வி.பாட்டீல் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, ''தற்போதைய நிலையில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது,'' என, உத்தரவிட்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
அமைச்சர் குற்றச்சாட்டுவான்கடே பதில்
மஹாராஷ்டிராவின் தேசியவாத காங்.,கை சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக், தன் சமூக வலைதள பக்கத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் பிறப்பு சான்றிதழை வெளியிட்டுள்ளார். அதில், 'சமீர் வான்கடேவின் உண்மையான பெயர் சமீர் தாவூத் வான்கடே. முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவர் பொய்யான ஆவணங்களை அளித்து தன்னை தலித் என சொல்லி பணியில் சேர்ந்துள்ளார். இந்த மோசடி இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு சமீர் வான்கடே கூறியதாவது:என்னை பற்றி அவதுாறான தகவல்களை அமைச்சர் பரப்புகிறார். என் குடும்பத்தின் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிடுகிறார். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. என் தந்தையின் பெயர் தியான்தேவ் கச்ருஜி வான்கடே, கலால் துறையில் இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். மறைந்த என் தாயாரின் பெயர் ஸஹீதா, அவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆஜராகாத அனன்யா
பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுடன், ஆர்யன் கான் நடத்திய 'வாட்ஸ் ஆப்' தகவல் பரிமாற்றம் குறித்து, அனன்யாவிடம் இரண்டு நாட்கள் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அனன்யா பாண்டே நேற்று ஆஜராகவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE