சென்னை :தென்மேற்கு பருவ மழை விலகி, வடகிழக்கு பருவ மழை நேற்று துவங்கி உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துஉள்ளது.
தென்மேற்கு பருவ மழை, ஜூன் 3ல் துவங்கி, பல மாநிலங்களில் பரவலாக பெய்துள்ளது. வழக்கத்தை விட 11 சதவீதம்கூடுதலாக, தமிழகத்தில் பெய்துள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை நேற்றுடன் விலகி, வடகிழக்கு பருவ மழை துவங்கி விட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் ஜெனரல் பாலச்சந்திரன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை, இந்த மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயல்பு அளவான, 44 செ.மீ., அளவுக்கு, வடகிழக்கு பருவ மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:இன்று திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவாரூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில், மிதமான மழை பெய்யும்.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் இன்று, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.இதன் காரணமாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், இடி, மின்னலுடன் நாளை கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
வரும் 28 மற்றும், 29ம் தேதிகளில், டெல்டா மாவட்டங்களிலும், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும்.தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று, மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் வீசும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அணைகள் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அணைகள், ஏரிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. நீர்வளத் துறை வாயிலாக, 90 அணைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் பராமரிக்கப்படுகின்றன. வடகிழக்கு பருவ மழை காலத்தில், இந்த ஏரிகளுக்கு அதிகளவில் நீர்வரத்து கிடைக்கிறது. ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவ மழையால், பல அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பும் கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை நேற்று துவங்கியது. மழையால், அணைகள், ஏரிகள் நிரம்பும்பட்சத்தில் அவற்றில் இருந்து உபரி நீரை உடனடியாக திறக்க வேண்டும். கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற வேண்டும்.
ஆறுகள், பிரதான பாசன கால்வாய்களையும் கண்காணிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்த தகவலை, அரசுக்கு தெரிவிப்பதற்காக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நீர்வளத் துறை தலைமை அலுவலகத்தில், 24 மணி நேர தலைமைக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. இங்கு, மூன்று 'ஷிப்டு' அடிப்படையில், அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.இதேபோல, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. இங்கு பெறப்படும் தகவல்கள், சென்னையில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE