சென்னை :''ஏழை மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஏழை மக்கள், விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கு, வங்கிகள் உழைக்க வேண்டும். வங்கி சேவைகள், அவர்களுக்கு பயன்பட வேண்டும். தமிழக அரசால் வகுக்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு பயன் தர, அரசுடன் வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும்.தகுதியானவர்களுக்கு கடன்கள் கொடுப்பதன் வழியே, வங்கியும் வளரும், மக்களும் வளர்வர்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, இந்த ஆண்டு கடன் இலக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த மாதம் வரை, 4,951 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இலக்கை அடைய மீதமுள்ள தொகையை வழங்க வேண்டும்.'பி.எம்.ஸ்வாநிதி' என்பது, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகளுக்கு, மலிவு கடன்களை வழங்குவதற்கான சிறப்பு திட்டம். இதன் கீழ் விண்ணப்பித்த அனைவருக்கும் உதவ வேண்டும்.தமிழக அரசு வங்கி கடன் அடிப்படையில், மூன்று சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சமீப ஆண்டுகளில், மாநிலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட, 1.37 லட்சம் விண்ணப்பங்களில், 35.67 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.அனைத்து வங்கிகளும், சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த, ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்க வேண்டும்.கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில், 31 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 7.16 லட்சம் பயனாளிகளுக்கு, விரைவாக கார்டுகள் வழங்கப்பட வேண்டும். உணவு பதப்படுத்தும் தொழில்களின் கீழ், 104 விண்ணப்பங்கள் வங்கிகளில் நிலுவை உள்ளன. அவற்றுக்கு கடன் வழங்க வேண்டும்.
மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்க, வங்கியாளர்கள் முடிந்த அளவு உதவ வேண்டும். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும்.கல்விக்காக, மகளிர் சுய உதவிக் குழுவினருக்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் கடன் வழங்கும் போது, அந்த நிகழ்ச்சிக்கு நான் வருவேன்.இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர்கள் நேரு, தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, நிதித் துறை செயலர் கிருஷ்ணன், மாநில வங்கியாளர் குழுத் தலைவர் சென்குப்தா பங்கேற்றனர்.
துறை கட்டடங்கள் திறப்பு
அரசு துறை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.கருவூல கணக்குத் துறை சார்பில் 15.10 கோடி ரூபாய் செலவில், திருநெல்வேலி, காஞ்சிபுரம், திண்டுக்கல் பகுதியில், மூன்று மாவட்ட கருவூல அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மணச்சநல்லுார், பூந்தமல்லி, மயிலாடுதுறை, திண்டிவனம் பகுதியில், நான்கு சார் கருவூல அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மத்திய அரசின், 'நிர்பயா' திட்டத்தின் கீழ், கரூர், கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், ஊட்டி, அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், 2.78 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து ஒருங்கிணைந்த சேவை மையங்கள் கட்டப்பட்டுள்ளன.தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக் கோட்டையில், பணிபுரியும் மகளிர் விடுதி; சென்னை கெல்லீசில் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கூடுதல் கட்டடம்; ராயபுரம் அரசு குழந்தைகள் இல்ல வளாகத்தில் மருத்துவ சிகிச்சை அறை; தஞ்சாவூர் அரசு குழந்தைகள் இல்ல வளாகத்தில் பல்நோக்கு கூடம் கட்டப்பட்டுள்ளன.இவை அனைத்தையும், நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர்கள் கீதாஜீவன், தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE