புதுடில்லி :நாட்டின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு, துல்லியமான தணிக்கை அறிக்கைகள் தேவை என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
தேசிய தணிக்கை மற்றும் கணக்கு அகாடமியின் அதிகாரிகளிடம் பேசும்போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தணிக்கையானது, மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதால், அது பொருளாதார மீட்சிக்கு அவசியமானதாக இருக்கிறது.உலகளாவிய ஒருங்கிணைந்த பொருளாதாரத்தில், நியாயமான மற்றும் சார்பற்ற தணிக்கை என்பது, உள்நாட்டின் நலனுக்கானது மட்டுமல்ல. உலக அரங்கில், நாட்டின் நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தும் ஒரு கருவியும் ஆகும்.
நிதிச் சந்தைகளின் சிக்கலான தன்மை மற்றும் திறமையான நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து, மக்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதால், தணிக்கையின் பங்கு மேலும் முக்கியமானதாகி உள்ளது.நமக்கு கிடைக்கக்கூடிய தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலேயே பெரும்பாலான பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
எனவே, தவறான தரவுகள் சரியான முடிவுகளை எடுக்க இயலாமல் செய்துவிடும்.
உதாரணமாக, வங்கி துறையை எடுத்துக் கொண்டால், துல்லியமற்ற, தவறாக வழிநடத்தக்கூடிய நிதி அறிக்கைகள் காரணமாக, கடன் வாங்கிய நிறுவனம் அதை திருப்பி செலுத்த இயலாமல் போய்விடும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE