நாஞ்சில் சம்பத், மீண்டும் ம.தி.மு.க.,வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலமாக, ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலராக இருந்த சம்பத், பொதுச் செயலர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகினார்.கடந்த, 2012ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்து, கொள்கை பரப்பு துணைச் செயலர் பதவியுடன், 'இன்னோவா' காரையும் பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா, தினகரனை ஆதரித்தார். பின், தினகரனிடம் இருந்து விலகி, இனி இலக்கிய கூட்டங்களில் மட்டும் பங்கேற்க போவதாக அறிவித்தார். சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியை ஆதரித்து பேசினார்.
இதுவரை எந்த ஒரு கட்சியிலும் சேராமல் இருக்கும் சம்பத், வைகோ மகன் துரைக்கு ம.தி.மு.க.,வில் பதவி வழங்கியதற்கு ஆதரவாக பேசி வருகிறார். அவர் கூறியுள்ளதாவது:துரையை கட்சித் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டால், அந்த முடிவை மக்களும் ஏற்றுக் கொள்கிற நிலைமைக்கு காலம் கொண்டு வந்து நிறுத்தும். ம.தி.மு.க., ஆயுள் முழுதும் போராடுவதற்காக பிறந்த கட்சி. தேர்தல் களத்தில் தோல்வி கண்டிருக்கலாம்; ஆனால், போர்க்களத்தில் வென்றிருக்கிறது. இது, வாரிசு அரசியல் அல்ல; வரலாற்று அரசியல்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில், 'நாஞ்சில் சம்பத் மீண்டும் ம.தி.மு.க.,வில் இணைய வேண்டும்.'அவருக்கு துணைப் பொதுச் செயலர் பதவி வழங்க வேண்டும். துரைக்கு உறுதுணையாக சம்பத், பிரசார பீரங்கியாக வலம் வருவார்' என, கட்சியினர் பதிவிட்டுள்ளனர்.மீண்டும் ம.தி.மு.க.,வில் சம்பத் இணைவதற்கு, வைகோ அழைப்பு விடுப்பார் என, அக்கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
'முதல் படி நுால் படி'
தலைமை நிலையச் செயலர் பதவி வழங்கப்பட்ட துரை, நேற்று சென்னை தாயகத்தில் பொறுப்பேற்றார். நிர்வாகிகளுக்கு துரை அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'எனக்கு சால்வைகள், பட்டாடைகள் அணிவிக்க வேண்டாம். மரக்கன்றுகள் அல்லது நீட், டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு புத்தகங்கள் வழங்குங்கள். அவற்றை கிராம மாணவர்களை சந்தித்து வழங்க உள்ளேன். முன்னேற்ற அரசியலுக்கான முதல் படி, நுால் படி என்பதே' என, கூறியுள்ளார்.இதற்கிடையில், துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்ட மாணவர் அணி செயலர் சாஜி விலகி உள்ளார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE