உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
கு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் நேர்மையற்றோராக இருப்பதால், ஊழல் இல்லாத சமுதாயம் என்பது கனவாகவே உள்ளது.காவல் துறையில் உட்புகுந்துள்ள ஊழலால், குற்றங்களின் எண்ணிக்கை உயர்கிறது என்பதே கசப்பான உண்மை. குற்றவாளிகளுக்கு, போலீசார் மீது அறவே பயம் இல்லாமல் போய்விட்டது.'லஞ்சம் வாங்கினேன் கைது செய்தனர்; லஞ்சம் கொடுத்தேன் விடுவித்தனர்' என்ற நிலை தான், தற்போது உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், தலைமைச் செயலராக இறையன்பு, டி.ஜி.பி., ஆக சைலேந்திரபாபுவை நியமித்தது. இது, அரசு நிர்வாகத்தை திறம்பட, நேர்மையுடன் செயலாற்றச் செய்யும் என்ற நம்பிக்கையை, மக்களிடம் விதைத்தது.அரசு அலுவலகங்களில் லஞ்சம் குறையவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசார் அவ்வப்போது, 'ரெய்டு' நடத்தினாலும், லஞ்சம் வாங்குவோர் திருந்தியதாக தெரியவில்லை.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழக காவல் துறையில் நிலவும் லஞ்சம் குறித்து தெரிய வந்துள்ளது. எந்தெந்த விவகாரத்திற்கு எவ்வளவு லஞ்சம் வாங்குகின்றனர் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து, டி.ஜி.பி., தரப்பிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.போலீஸ் ஸ்டேஷனில் உள்ள எழுத்தர் முதல் இன்ஸ்பெக்டர் வரை வாங்கும் லஞ்சம் குறித்த பட்டியல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அடிதடி, லாட்டரி விற்பனை, கட்டப்பஞ்சாயத்து என சமூக குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, போலீசார் 1,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறுகின்றனர்.
சினிமாவில் மட்டும் தான், 'தங்கப்பதக்கம் சிவாஜிகணேசனை' நாம் பார்க்க முடிகிறது.தமிழகத்தில் ஆட்சியாளர்களுடன், அரசு அதிகாரிகள், 'சிண்டிகேட்' அமைத்து ஊழல் செய்கின்றனர்.முந்தைய தி.மு.க., ஆட்சிகள் போன்று இல்லாமல், நேர்மையாக ஆட்சி செய்ய, முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அவரின் முயற்சி வெற்றி பெறட்டும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE