சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

நான் எந்த யோகாவ தேர்வு பண்றது?

Added : அக் 26, 2021
Share
Advertisement
இப்போது உலகில் பலவிதமான யோக வழிமுறைகள் வந்துவிட்டன. BPக்கு யோகா, டையாபெடிசுக்கு யோகா என எங்கு பார்த்தலும் அதைப் பற்றின செய்திகள், விளம்பரங்கள் வந்த வண்ணமே உள்ளன. இப்படியிருக்க இதில் எதை நான் தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் குழம்புவது வாஸ்தவம்தான். இதற்கு சத்குரு தரும் விளக்கம் இங்கே...சாதகர் சத்குரு, பலவிதமான யோகமுறைகள் உள்ளன. எனக்கு ஏற்ற யோகமுறை எது என்று நான் எப்படித்
நான் எந்த யோகாவ தேர்வு பண்றது?

இப்போது உலகில் பலவிதமான யோக வழிமுறைகள் வந்துவிட்டன. BPக்கு யோகா, டையாபெடிசுக்கு யோகா என எங்கு பார்த்தலும் அதைப் பற்றின செய்திகள், விளம்பரங்கள் வந்த வண்ணமே உள்ளன. இப்படியிருக்க இதில் எதை நான் தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் குழம்புவது வாஸ்தவம்தான். இதற்கு சத்குரு தரும் விளக்கம் இங்கே...

சாதகர் சத்குரு, பலவிதமான யோகமுறைகள் உள்ளன. எனக்கு ஏற்ற யோகமுறை எது என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது?
சத்குரு:
இப்போதைக்கு உங்கள் அனுபவத்தில் இருப்பவை உங்கள் உடல், மனம் மற்றும் உங்கள் உணர்வுகள் மட்டும்தான். இவை ஓரளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்குமேயானால் அதற்கு அடிப்படையிலான சக்தி இருக்க வேண்டும். அந்த சக்தி இல்லையெனில் இந்த செயல்பாடுகள் நிகழாது. இதை உங்களில் சிலர் உணர்ந்து இருக்கலாம். உணராதவர்கள் இந்த செயல்பாடுகளை வைத்து அதன்பின்னால் ஒரு சக்தி இருக்கிறது என்று புரிந்துகொள்வார்கள்.
உதாரணமாக ஓர் ஒலிபெருக்கி என் குரலின் ஒலியைப் பெரிதுபடுத்துகிறது. இந்த ஒலிபெருக்கி என் குரலை எப்படிப் பெருக்குகிறது என்கிற தொழில்நுட்பம் தெரியாமலேயே அதற்குப் பின்னால் ஒரு சக்தி இருப்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
உடல், மனம், உணர்வு, சக்தி என உங்கள் வாழ்க்கையில் நான்கு உண்மைகள்தான் உள்ளன. எனவே உங்களுக்கு நீங்கள் என்ன செய்துகொள்ள வேண்டும் என்று கருதுகிறீர்களோ அவை இந்த நான்கு தளங்களில் மட்டுமே நிகழமுடியும். நீங்கள் செய்ய விரும்புவதையெல்லாம் உங்கள் உடல் மூலமாகவும், உங்கள் மனம் மூலமாகவும், உங்கள் உணர்வுகள் மூலமாகவும், உங்கள் சக்திகள் மூலமாகத்தான் செய்ய முடியும்.

உணர்வுகளைப் பயன்படுத்தி உச்சநிலையை எட்டிவிட முடிந்தால் அதற்கு பக்தி யோகம் என்று பெயர். இது அன்பின் பாதை. உங்கள் அறிவைப் பயன்படுத்தி இறைநிலையை எட்டமுயன்றால் அதற்கு ஞானயோகம் என்று பெயர். இது அறிவின் பாதை.

உங்கள் உடலைப் பயன்படுத்தி, செயல்களின் மூலமாக இறைநிலையை எட்ட முயன்றால் அதற்கு கர்மயோகம் என்று பெயர். அது செயல்களின் பாதை. உங்கள் சக்திநிலைகளை மேம்படுத்தி இறைநிலைகளை எட்ட முயன்றால் அதற்கு கிரியா யோகம் என்று பெயர். அதற்கு உள்நிலை செயல் என்று பொருள்.

இந்த நான்கு வகைகளில் நீங்கள் எதையாவது ஒன்றை எட்ட முடியும். இல்லை... இல்லை... நான் முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில்தான் இருக்கிறேன். எனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று சிலர் எண்ணக் கூடும். யாராவது ஒரு மனிதருக்கு தலை மட்டும் இருந்து இதயம், கைகள், சக்தி இல்லாமல் இருக்கிறதா? அல்லது யாருக்காவது இதயம் மட்டும் இருந்து, பிற பாகங்கள் இல்லாமல் இருக்கின்றனவா? இந்த நான்கின் கூட்டமைப்புதான் நீங்கள், இல்லையா?

ஒரு மனிதருக்கு அவருடைய இதயம் ஆளுமையோடு இருக்கலாம். இன்னொரு மனிதருக்கு அவர் தலை ஆளுமையோடு இருக்கலாம். இன்னொருவருக்கு கைகள் ஆளுமையோடு இருக்கலாம். ஆனால் அனைத்துமே இந்த நான்கின் கூட்டமைப்புத்தான். இவை நான்கும் சரிவிகிதத்தில் கலந்து செயல்படும்பொழுதுதான் உங்களுக்கு நிகழவேண்டிய நன்மைகள் நிகழும்.

ஒருவருக்குத் தருகிற பாதையை, இன்னொருவருக்கு தருவோமேயானால் அது உங்களுக்கு செயல்படாமல் போகக்கூடும். ஏனென்றால் அவர் இதயம் சார்ந்து செயல்படுபவர். நீங்கள் மூளை சார்ந்து செயல்படுபவராக இருக்கலாம். எனவே இந்த நான்கும் சரிவிகிதத்தில் கலந்து தரப்பட வேண்டும். அதனால்தான் ஆன்மீகப் பாதையில் ஒரு குருவின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. அவர் சரியான கலவையில் உங்களுக்கு ஏற்றாற்போல் கலந்து தருகிறார்.

யோக மரபில் ஒரு அற்புதமான கதை உண்டு. ஒரு நாள் ஒரு ஞானயோகி, ஒரு பக்தியோகி, ஒரு கர்மயோகி, ஒரு கிரியாயோகி என நால்வரும் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பொதுவாக இந்த நால்வரும் சேர்ந்திருப்பது என்பது மிகவும் அரிது. காரணம், ஞானயோகி, பிற யோகமுறைகளை ஏற்றுக்கொள்வது இல்லை. அது அறிவுசார்ந்த யோகம்.

பொதுவாகவே தர்க்க அறிவில் சிறந்து விளங்குகிற மனிதன், சிந்தனை சார்ந்த மனிதரை அவ்வளவாக மதிப்பது இல்லை. ஒரு பக்தியோகி முழுக்க முழுக்க அன்பும் உணர்வும் சார்ந்த மனிதர். அவரைப் பொறுத்தவரை இந்த ஞானயோகம், கர்மயோகம், கிரியா யோகம் அனைத்தும் நேர விரயம்தான். வெறுமனே கடவுளிடம் அன்பு செலுத்தினால் அது நிகழும் என்று கருதுவார்.

கர்மயோகியோ, 'அனைவரும் சோம்பேறிகள். எல்லாவிதமான பகட்டான தத்துவங்களையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் செய்யப்பட வேண்டியது செயல்கள்தான்' எனக் கருதுவார். ஒருவர் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்.

கிரியாயோகியோ நான்கையும் பார்த்து அலட்சியமாக சிரிப்பார். அவரைப் பொறுத்தவரை, இந்த பிரபஞ்சமே சக்திதான். எனவே சக்திநிலையை மேம்படுத்தாவிட்டால், நீங்கள் கடவுளுக்காக ஏங்கினாலும் சரி, வேறு எதற்காக ஏங்கினாலும் சரி, எதுவும் நிகழாது என்பார். அதனால் இந்த நால்வரும் சேர்ந்திருப்பது கடினம்.
ஆனால் இன்றோ இந்த நால்வரும் சேர்ந்து நடந்துபோகிறார்கள். அவர்கள் காட்டில் போய்க்கொண்டிருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. ஒதுங்குவதற்கு இடம் தேடி நால்வரும் ஓடினார்கள். அங்கே ஒரு பழங்காலத்துக் கோவில். அது ஒற்றைக் கூரையுடன் இருந்தது, சுவர்கள் இல்லை. நடுவே ஒரு லிங்கம் இருந்தது. எனவே இந்த நால்வரும் அங்கே ஒதுங்குவதற்கு இடம் தேடிச் சென்றார்கள்.

வெள்ளம் பெரிதாகிக் கொண்டிருந்தது. காற்று சுழன்றடித்தது. கோவிலுக்குள்ளும் வெள்ளம் புகுகிற நிலைவந்ததால், அவர்கள் லிங்கத்தை நெருங்கி நின்றார்கள். நான்கு புறத்திலேயும் இருந்து வெள்ளப்பெருக்கு. நேரம் அதிகம் ஆக ஆக அவர்களுக்கு இருந்த ஒரே வழி என்பது அந்த லிங்கத்தை அரவணைத்துக் கொள்வதுதான். அரவணைத்துக் கொண்டார்கள்.

சிறிது நேரத்திலே மகத்தான ஒன்று நிகழ்வதை உணர்ந்தார்கள். ஒரு பிரம்மாண்டமான இருப்பு, ஐந்தாவது இருப்பு அங்கே நிகழ்ந்தது. இவர்கள் நால்வரும் "என்ன இது? ஏன் இப்போது இது நிகழ்ந்திருக்கிறது?" என்று அதிசயித்தார்கள். ஏனென்றால் அங்கே சிவபெருமானுடைய இருப்பை உணர்ந்தார்கள்.

"இத்தனை நாட்கள் கழித்து, நாங்கள் இவ்வளவு சாதனைகள் செய்தும் இது நிகழவில்லை. இப்பொழுது நிகழ்ந்தது ஏன்?" என்று கேட்டபொழுது சிவபெருமான், "கடைசியாக நீங்கள் நால்வரும் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள். இது நிகழ வேண்டும் என்றுதான் நீண்டகாலம் காத்திருந்தேன்" என்று சொன்னார்.

ஈஷா யோகா வகுப்புகளில், இவை நான்கும் சரியான கலவையில் ஒன்றுசேர கற்றுத்தரப்படுகிறது. இதைப் பயில்வதன் மூலமாக, மக்கள் அவர்களுக்கு ஏற்றார் போன்ற பலன்களை அனுபவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X