புதுடில்லி: புதிய உருமாறிய ஏ.ஒய்.4.2 வகை வைரஸ் குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக அறியப்பட்ட நிலையில், பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. டெல்டா வகை கொரோனா வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து அதிகமாக பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். கொரோனா வைரஸ் பல விதங்களில் உருமாற்றம் அடைந்தாலும், ஏ.ஒய்.4.2 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் அதிக வீரியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. நம் நாட்டிலும் மத்திய பிரதேசத்தில் இரு ராணுவ அதிகாரிகள் உட்பட 7 பேருக்கு இந்த புதிய தொற்று உறுதியானது.

இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியும் இவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை உருமாறிய வைரஸ் எவ்வளவு வேகமாக பரவக்கூடியது என்பது உள்ளிட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறியதாவது: பிரிட்டனில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக கருதப்படும் டெல்டா வைரசின் துணை வகையான ஏ.ஒய்.4.2 குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. அப்படியிருக்கையில் இதன் வீரியம் குறித்து இப்போது கூறுவது சரியாக இருக்காது. அதேபோல், இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதற்கோ, தடுப்பூசி செலுத்தியும் பயனளிக்கவில்லை என்பதற்கோ ஆதாரம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE