தேர்தல் வந்தால் தெரியும்!
'இருந்தாலும் இவருக்கு ரொம்ப தைரியம் தான். துணிச்சலாக களத்தில் இறங்குகிறாரே...' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி கூறுகின்றனர், பஞ்சாப் மாநில அரசியல்வாதிகள். பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.இந்த முறை ஆளும் கட்சியான காங்கிரசை எதிர்த்து அகாலி தளம், பா.ஜ., ஆகிய கட்சிகள் தனித் தனியே களம் காண்கின்றன. ஆம் ஆத்மியும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.
பஞ்சாப், டில்லியின் அண்டை மாநிலம் என்பதால், ஆம் ஆத்மிக்கு அங்கும் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் ஆம் ஆத்மி வென்றது. இதனால் இந்த முறை எப்படியும் மோதி பார்த்து விடலாம் என்ற முடிவுடன் களத்தில் இறங்கியுள்ளார் கெஜ்ரிவால். 'ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக சீக்கியர் தான்' என, துவக்கத்திலேயே அறிவித்து விட்டார் கெஜ்ரிவால்.
மேலும், 'ஆம் ஆத்மிக்கு ஓட்டுப் போடுங்கள்' என்ற கெஜ்ரிவாலின் பதிவு செய்யப்பட்ட பேச்சும், பஞ்சாப் மக்களின் மொபைல் போன்களுக்கு அடிக்கடி வருகின்றன. இதைப் பார்த்த அரசியல்வாதிகள், 'காங்கிரஸ், அகாலி தளம், பா.ஜ., போன்ற பெரும் கட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு உண்மையிலேயே பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு உள்ளதா என்பது தேர்தல் வந்தால் தெரிந்து விடும்' என்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE