புதுடில்லி : படுக்கை உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய இரண்டு 'கன்டெய்னர்' மருத்துவமனைகளை டில்லி மற்றும் சென்னையில் தயார் நிலையில் வைத்திருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக நாட்டின் எந்த பகுதிக்கும் அவசர காலத்தில் இந்த கன்டெய்னர் மருத்துவமனைகளை விமானம் அல்லது ரயில் வழியாக எடுத்துச் செல்ல முடியும்.
மத்திய சுகாதார அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மன்சுக் மாண்டவியா கூறியதாவது:நாட்டில் மருத்துவ சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும், சுகாதார வசதிகளை மேம்படுத்தவும், மத்திய அரசு உறுதி எடுத்துள்ளது.
பராமரிப்பு
கொரோனா பெருந்தொற்று, நாட்டின் சுகாதார உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. அதற்காகவே, 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள் கட்டமைப்பு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றான ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கமானது, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள முக்கியப் பராமரிப்பு வசதி களில் உள்ள இடைவெளிகளை குறைப்பதை, நோக்கமாகக் கொண்டது.
இந்த இயக்கத்தின் கீழ், அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய இரண்டு கன்டெய்னர்கள் மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. டில்லியிலும், சென்னையிலும், இந்த கன்டெய்னர் மருத்துவமனைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். நாட்டின் எந்த பகுதியிலாவது பெரிய அளவிலான அவசர சிகிச்சை வசதி தேவைப்பட்டால், இந்த கன்டெய்னர்கள் விமானம் அல்லது ரயில் வாயிலாக அந்த பகுதிக்கு உடனடியாக கொண்டு செல்லப்படும்.
இந்த கன்டெய்னர்களில் தலா ௧௦௦ படுக்கைகள் உட்பட அனைத்து சிகிச்சை வசதிகளும் இடம் பெற்றிருக்கும்.
இலவசம்
நாடு முழுதும் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இப்போது 79 ஆயிரத்து 415 மையங்கள் அமைக்கப்பட்டு விட்டன.மாவட்ட அளவில் தரமான மருத்துவ பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தற்போது 134 வகையான மருத்துவ சோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.
மாவட்டங்களில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு சார்பில் 90 - 100 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் கொரோனா உட்பட எந்த நோய், எப்போது பரவினாலும் அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள நம்மால் முடியும்.
இந்த இயக்கத்தின் கீழ் நாடு முழுதும் 157 புதிய மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இவற்றில் 63 மருத்துவக் கல்லுாரிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மருத்துவக் கல்லுாரி இடங்களும் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. 'கோவாக்சின்' தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உருமாறிய வைரஸ் ஆய்வு
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மேலும் கூறியதாவது: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், என்.சி.டி.சி., எனப்படும் தேசிய நோய் கட்டுப்பாடு மையமும் ஆய்வு செய்து வருகின்றன.
நாட்டில் புதிதாக ௧௫௭ மருத்துவக் கல்லுாரிகள் துவக்க, பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன.கொரோனா தடுப்பூசி நிர்வாகம் குறித்து, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளேன். குழந்தைகளுக்கு 'ஜைகோவிட்' தடுப்பூசி போடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE