ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில் பருவமழை பெய்வதால், தண்ணீர் தொட்டி, வனக்குட்டை உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு போதிய அளவு நீர், உணவு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேற்குத்தொடர்ச்சிமலையில், முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலங்களுள், ஆனைமலை புலிகள் காப்பகமும் ஒன்றாகும். புலிகள் காப்பக வனப்பகுதிகளில், 320 வகையான பறவைகள், யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு, மான், வரையாடு உட்பட பல்வேறு வகையான வன உயிரினங்கள் உள்ளன.மழை காலங்களில் வனப்பகுதியிலுள்ள குட்டைகள், ஓடை, சிற்றோடை நீர் ஆதாரங்களில் தேங்கும் தண்ணீர் வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறது. வறட்சி காலத்தில் வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காமல் வன விலங்குகள் அலைமோதுவதுடன், வனத்தை விட்டு வெளியேறி, விளைநிலங்களுக்குள் புகுவது வழக்கமாக உள்ளது.ஆண்டுதோறும், ஆழியாறு, சேத்துமடை, சர்க்கார்பதி, செமணாம்பதி, தம்மம்பதி, சரளைப்பதி உள்ளிட்ட பகுதிகளில், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் வனவிலங்குகளால் சேதமடைந்தன. வால்பாறை, மானாம்பள்ளி பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளில் யானைகள் நுழைவதால், வீடுகள், ரேஷன்கடைகள் சேதமடைகின்றன.இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, புலிகள் காப்பகம் முழுவதிலும் அதிக மழைப்பொழிவு உள்ளதால், வனம் பசுமையாக காட்சியளிக்கிறது. கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு அதிக மழைப்பொழிவு உள்ளதால், வனத்தில் காணுமிடமெல்லாம் இயற்கையான நீராதாரங்கள் நிரம்பி வழிகின்றன. வனவிலங்குகள் தாகம் தீர்க்க, பொள்ளாச்சி, டாப்சிலிப் வனச்சரக பகுதிகளில், 13 தண்ணீர் தொட்டிகள், கசிவுநீர் குட்டைகள், ஆழ்குழாய் கிணறுடன் கூடிய தண்ணீர் தொட்டிகள், 60க்கும் மேற்பட்ட சிறு தடுப்பணைகள் உள்ளன. இந்த நீராதாரங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், வனத்தில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.அதேபோல், வனத்தில் தாவரங்களின் அடர்த்தி அதிகரித்து, தாவர உண்ணிகளுக்கு போதிய அளவு உணவு கிடைத்துள்ளது.
மனித -- வனவிலங்கு மோதல் பெரும் அளவு குறைந்துள்ளது.வழக்கமாக, மே மாதம் முதல் செப்., வரையிலான இடைவெளியில், பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப் வனச்சரக பகுதிகளில், அதிகப்படியான தென்னை, வாழை மரங்கள் சேதமடைவதுடன், மனித - வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வந்தது. தற்போது, இவை குறைந்துள்ளது.
வனத்துறை மகிழ்ச்சி
அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில், வனத்தில் நீர் ஆதாரமும், தாவர உண்ணிகளுக்கான உணவு தேவையும் பூர்த்தியடைந்துள்ளது. மாமிச உண்ணிகளின் அடர்த்திக்கு ஏற்ப, தாவர உண்ணிகள் அடர்த்தியும் அதிகரித்துள்ளது.சரியான பருவத்தில், தேவையான அளவுக்கு மழை பொழிவும், வனவிலங்குகளின் தேவைக்கு ஏற்ப உணவும் வனத்தினுள் கிடைக்கிறது. இதனால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், வனஉயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது, வனத்துறையின் சமீபத்தில் கணக்கெடுப்புகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.4 மாதங்களுக்கு கவலை இல்லை!பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்தி கூறியதாவது:இயற்கையின் கருணையால், புலிகள் காப்பகத்தில் அதீத மழை பெய்து, வனம் பசுமையாக மாறியுள்ளது. ஆனாலும், சில இடங்களில் யானைகள் வனத்தை விட்டு வெளியே வந்து விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன.இவற்றை தொடர்ந்து கண்காணித்து, வனத்தினுள் விரட்டி வருகிறோம். தண்ணீர் தொட்டிகள், கசிவுநீர் குட்டைகளை அவ்வப்போது ஆய்வு செய்து, தண்ணீர் குறையும் பகுதிகளில் நிரப்பி வருகிறோம்.தற்போது பெய்துள்ள மழையால், வரும் நான்கு மாதங்களுக்கு வனவிலங்குகளுக்கு தேவையான நீர், உணவு கிடைத்துள்ளது.இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE