சென்னை :'மழை காலத்தில் வெள்ள அபாயம் ஏற்படுவதை தவிர்க்க, அனைத்து நடவடிக்கைகளையும், மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.
கண்காணிப்பு
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதாவது:மழைக்காலம், கோடைக்காலம் என வரையறுக்க முடியாத அளவுக்கு, காலமாற்றம் இப்போது கடுமையாகி வருவதை உணர்ந்து செயல்பட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, விரைவாக எடுப்பது மட்டுமல்ல; எத்தகைய பேரிடரையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவ மழை காலத்தில், தமிழகத்திற்கு இயல்பான மழைப்பொழிவு கிடைக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த மாதத்திலேயே, கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், மிக அதிக மழை பெய்துள்ளது. மேலும், 17 மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. எனவே கவனத்துடன் பணியாற்ற வேண்டும்.
அரசுத் துறையின் செயல்பாடும், பொதுமக்களின் எண்ணமும் ஒன்றிணைய வேண்டும். இயற்கையை எதிர்கொள்ளும் மனநிலையை, மக்களுக்கு முதலில் உருவாக்க வேண்டும். உங்கள் செயல்பாடுகள் அனைத்தும், மக்களோடு இணைந்தே இருக்கும்படி திட்டமிட வேண்டும்.
முன்னெச்சரிக்கை செய்திகளை, ஊடகங்கள் வழியாக, பொது மக்களுக்கும், மீனவர்களுக்கும், உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
சென்னையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களும், 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். இந்த மையங்களை மக்கள், '1070, 1077' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மழைக்காலத்தில் மீனவர்களுடன், எப்போதும் தொடர்பில் இருக்க, மீன் வளத்துறை தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பகுதிக்கு தனித்தனியே பல்துறை மண்டல குழுக்கள் அமைக்க வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள், கலெக்டர்கள், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை ஆய்வு செய்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அணைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க, அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
பாதிப்பு
மழைக்கால நோய்கள் பரவும் சூழ்நிலை உள்ளது. அதை தடுக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள், உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருந்து, ஆக்சிஜன் உருளைகள், மருத்துவ வசதிகள் போன்றவற்றை, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து துறைகளுடைய ஒருங்கிணைப்பு தான் அனைத்து பாதிப்புகளையும் தடுக்கும்.இவ்வாறு முதல்வர் பேசியுள்ளார்.வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE