சென்னை :'பண்டிகைக்கு பின் கொரோனா தொற்றின் தாக்கம், தமிழகத்தில் உயராமல் இருப்பதை உறுதி செய்ய, குறிப்பிட்ட பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால், எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்றாத சூழ்நிலையே, பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது.துர்கா பூஜை, நவராத்திரி விழா போன்ற பண்டிகைகளுக்கு பின், மேற்கு வங்கம், அசாம், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பண்டிகைக்கு முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடும் போது, மேற்கு வங்கத்தில், 10 சதவீதம்; அசாமில், 50 சதவீதம்; ஹிமாச்சலில், 38 சதவீதத்திற்கு மேலாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், பள்ளிக்கரணை, சென்னை புறநகர் பகுதிகளில், புத்தாடைகளை வாங்கிச் செல்ல, காலை முதலே பொதுமக்கள்
வருகின்றனர்.
நேரம் செல்லச் செல்ல, கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதை காண முடிகிறது. இதே நிலை தான் பிற மாவட்டங்களிலும் நிலவுகிறது.இதுபோன்ற நிலைமை, கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.எனவே, முதல்வர் இதில் தலையிட்டு, கொரோனா தொற்றின் தாக்கம், பண்டிகைக்கு பின் உயராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இதற்காக, குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும். இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்து செல்லவும், தேவையான அறிவுரைகளை வழங்கும்படி, தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துஉள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE