சொத்துக்காக குடும்பத்தையே தீர்த்துக் கட்டிய தம்பதிக்கு 4 தூக்கு!| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சொத்துக்காக குடும்பத்தையே தீர்த்துக் கட்டிய தம்பதிக்கு '4 தூக்கு!'

Updated : அக் 27, 2021 | Added : அக் 26, 2021 | கருத்துகள் (15)
Share
சென்னை :சொத்துக்காக தாய், தந்தை, தம்பி என ஒட்டு மொத்த குடும்பத்தையே காலி செய்த தம்பதிக்கு, நான்கு பிரிவுகளில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த குற்றத்திற்கு, கணவன் - மனைவி இருவருக்கும், தலா இரண்டு ஆயுள் தண்டனையும் விதித்து, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்
சொத்து, குடும்பம், கொலை,தம்பதி,4 துாக்கு

சென்னை :சொத்துக்காக தாய், தந்தை, தம்பி என ஒட்டு மொத்த குடும்பத்தையே காலி செய்த தம்பதிக்கு, நான்கு பிரிவுகளில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த குற்றத்திற்கு, கணவன் - மனைவி இருவருக்கும், தலா இரண்டு ஆயுள் தண்டனையும் விதித்து, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவேரிபாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜ், 60; 'வெல்டிங்' பட்டறை உரிமையாளர். இவரது மனைவி கலைச்செல்வி, 52. இவர்களது மகன்கள் கோவர்த்தனன், 30 மற்றும் கவுதம், 27.கலைச்செல்வியும், கவுதமும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர். கோவர்த்தனன் அ.தி.மு.க., உறுப்பினர். கோவர்த்தனனுக்கும் செஞ்சியை சேர்ந்த தீபகாயத்ரிக்கும் திருமணம் நடந்தது. அனைவரும் ஒரே வீட்டில் வசித்தனர்.

இந்நிலையில், 2019 மே 15ம் தேதி, கலைச்செல்வியும், கவுதமும் ஒரு அறையில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். வீட்டு வராண்டாவில் ரத்த காயத்துடன் ராஜ் இறந்து கிடந்தார்.இது தொடர்பாக, கோவர்த்தனனிடம் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தானும், தன் மனைவியும், மற்றொரு அறையில் துாங்கியதாகவும், மின் கசிவு ஏற்பட்டு குளிர்சாதன பெட்டி வெடித்து, தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறினார்.

அதே நேரத்தில், சம்பவம் நடந்த அறையில் கிடந்த உடைந்த பாட்டில் துகள்கள், ரத்தக்கறை, கழிப்பறை வாளியில் இருந்த பெட்ரோல் வாசனை போன்றவை, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், ராஜுவின் உடலில் கத்தி வெட்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனால், மூன்று பேரும் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த திண்டிவனம் போலீசார், கோவர்த்தனனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, மூவரையும் கொலை செய்ததையும், அதற்கு மனைவி தீபகாயத்ரி உடந்தையாக இருந்ததையும், கோவர்த்தனன் ஒப்புக் கொண்டார். உடன், கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இருவருக்கும் எதிராக, கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டியது மற்றும் குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்தது தொடர்பாக, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நான்கு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

இது தவிர்த்து, வெடிபொருள் சட்டம், சொத்துக்கள் சேதம் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டது.கொலை நடந்த அன்று அதிகாலையில், ராஜி, கலைச்செல்வி, கவுதம் ஆகியோர் துாங்கிய அறையில், பெட்ரோல் குண்டுகளை கோவர்த்தனன் வீசியுள்ளார். அந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில், அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.கலைச்செல்வியும், கவுதமும் உடல் கருகி, அந்த அறையிலேயே இறந்தனர். பின்பக்க கதவு வழியாக வெளியே வந்து கதறிய ராஜியை, கோவர்த்தனன் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின், குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், பெற்றோர் மற்றும் சகோதரர் இறந்ததாக நாடகமாடியது தெரிய வந்தது.

கோவர்த்தனன் தொழில் துவங்க பணம் கேட்ட போது, பெற்றோர் தர மறுத்ததாகவும், அவருக்கு எளிமையாக திருமணம் நடத்தி விட்டு, கவுதமுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்த ஏற்பாடு செய்ததாகவும் தெரிகிறது. கவுதமுக்கு அதிக சொத்து கொடுக்கப் போவதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கோவர்த்தனன், மூன்று பேரையும் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். இவ்வழக்கு, பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், நேற்று தீர்ப்பு வழங்கினார்.காலையில் தம்பதி இருவரும் நீதிபதி முன் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, இருவரும் குற்றவாளிகள் என்றும், தண்டணை விபரம் மாலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நேற்று மாலை நீதிபதி வேல்முருகன் அறிவித்த தீர்ப்பில், இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், துாக்கு தண்டனை விதிப்பதாக கூறினார். இருவர் மீதான கொலை குற்றமும் நிரூபிக்கப்பட்டதால், இந்திய தண்டனை சட்டத்தின் நான்கு பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவின் கீழும் துாக்கு தண்டனையும், வெடிபொருளை பயன்படுத்தி சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட இரண்டு சட்டப் பிரிவுகளில், தலா இரண்டு ஆயுள் தண்டனையும், தலா 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தீர்ப்பை கேட்டதும், தம்பதியர் இருவரும் கண்ணீர் விட்டு கதறினர். இந்த வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயராஜ் ஆஜரானார். இந்த வழக்கில், 19 சாட்சிகள் 35 ஆவணங்கள் 17 சான்று பொருட்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X