பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க, மதுரையில் முகாமிடுகிற சசிகலாவை, முக்குலத்தோர் சமுதாய 'மாஜி'க்கள் சந்தித்து பேசினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் ஆலோசித்த தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க.,வில் சசிகலாவை சேர்க்கக் கூடாது என்பதில், பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயகுமார், சி.வி.சண்முகம் போன்றவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனர்.
வரவேற்பு நிகழ்ச்சி
ஆனால், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த, 'மாஜி' அமைச்சர்களில் சிலர், சசிகலாவை சேர்ப்பதற்கு மறைமுக ஆதரவு அளித்து வருகின்றனர்.அதை அறிந்து தான், 'சசிகலாவை சேர்ப்பதுகுறித்து தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வர்' என ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தெரிவித்திருக்கிறார்.
அவரது கருத்துக்கு முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த, 'மாஜி' அமைச்சர் செல்லுார் ராஜு ஆதரவு அளித்துள்ளார்.தஞ்சாவூரில் இன்று அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.சுற்றுப்பயணம் அதில் பங்கேற்ற பின், தஞ்சாவூரில் தங்குகிற சசிகலா, முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ் போன்றவர்களிடம் ஒற்றுமையை வலியுறுத்தி பேச திட்டமிட்டு உள்ளார். பின், 28ம் தேதி தென் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மதுரையில் தங்கும்அவரை சந்திக்க வருமாறு, ராஜேந்திர பாலாஜி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லுார் ராஜு மற்றும் ராஜன் செல்லப்பா, கருப்பசாமி பாண்டியன் போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வரும் 30ம் தேதி, முத்துராமலிங்க தேவரின் குருபூஜை முடிந்ததும், முக்குலத்தோர் சமுதாய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பன்னீர்செல்வம் தலைமையில் சசிகலாவை சந்திக்க வைக்கும் ஏற்பாடுகளை, சசிகலா ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். ஆனால், சசிகலாவை சந்திப்பதை தவிர்க்க, பன்னீர்செல்வம் விரும்புகிறார். காரணம், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அ.தி.மு.க., பொதுக்குழுவில் அடுத்த பொதுச்செயலர் யார் என்பது முடிவு செய்யப்பட உள்ளது.
அமைதி காக்கலாம்
பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே போட்டி உள்ளதால், அதுவரை அமைதி காக்கலாம் என நினைக்கிறார் பன்னீர்செல்வம். அதற்கு முன்னர், சசிகலா ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பழனிசாமி தரப்பு காய் நகர்த்துகிறது. மதுரையில் தங்கும் சசிகலாவை, முக்குலத்தோர் சமுதாய நிர்வாகிகள் சந்தித்து பேசினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி, பழனிசாமி தரப்பில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
தஞ்சை சென்றார்
அ.தி.மு.க., தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள சசிகலா, தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நேற்று தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். சென்னை தியாகராய நகரில் உள்ள தன் வீட்டில் இருந்து, ஜெயலலிதா பயன்படுத்திய காரில், அ.தி.மு.க., கொடியுடன் புறப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி பூசணிக்காய் உடைத்து, அவரை வழியனுப்பி வைத்தனர். தஞ்சாவூர் செல்லும் வழியில், பல்வேறு இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின், அ.தி.மு.க., தொண்டர்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதற்காகஒரு வாரம் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE