சென்னை:'மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தை, ஏற்காடில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற முயன்றால், மக்களுடன் இணைந்து அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: அ.தி.மு.க., அரசு சட்டசபையில், 110 விதியின் கீழ் அறிவித்தபடி, சேலம் மாவட்டம் ஏற்காடு, செம்மடுவு கிராமத்தில், 5 ஏக்கர் நிலத்தில், கூட்டுறவு ஒன்றியம் வழியே, 61.80 கோடி ரூபாய் செலவில், மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்க முடிவானது.முதல் தவணையாக 25 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை வழியே கட்டுமான பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில், கூட்டுறவு துறை பதிவாளர், பொதுப்பணி துறை நிர்வாக பொறியாளருக்கு எழுதிய கடிதத்தில், மறு உத்தரவு வரும் வரை, கட்டடப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். தற்போது, ஏற்காட்டில் கட்டப்படும் மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தை, கொடைக்கானலுக்கு மாற்ற முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது.
சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள ஏற்காடு, கொல்லிமலை, கல்வராயன்மலை போன்ற மலை பகுதிகளில், அதிக அளவில் வசித்து வரும் மலைவாழ் மக்கள், அதிக அளவு வருவாய் ஈட்டும் வகையில், மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையம் ஏற்காட்டில் ஆரம்பிக்கப்பட்டது.
இதை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்று ஏற்காடு, ஆத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயலரிடம் மனு அளித்துள்ளனர். எதிலும் அரசியல் செய்யும் தி.மு.க., அரசு, இதிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது.கூட்டுறவு பயிற்சி நிலையத்தின் கட்டுமான பணிகள், 20 சதவீதம் முடிந்த நிலையில், இப்பயிற்சி நிலையத்தை, ஏற்காட்டில் இருந்து கொடைக்கானலுக்கு மாற்ற உள்ளதை அறிந்து, அப்பகுதி மலைவாழ் மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, மாநில கூட்டுறவு பயிற்சி நிலையம் தொடர்ந்து ஏற்காட்டிலேயே இருக்க வேண்டும்; கட்டுமான பணிகளை உடனடியாக தொடர அனுமதிக்க வேண்டும்.மாநில கூட்டுறவு பயிற்சி நிலையத்தை, வேறு இடத்திற்கு மாற்ற தொடர்ந்து முயற்சி செய்தால், சேலம் மாவட்ட அ.தி.மு.க., பொதுமக்களுடன் இணைந்து, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தும். இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE