ஒற்றுமையும் இல்லை; தெளிவும் இல்லை காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா வருத்தம்| Dinamalar

ஒற்றுமையும் இல்லை; தெளிவும் இல்லை காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா வருத்தம்

Added : அக் 27, 2021
காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சோனியா, ''கட்சியில் நிர்வாகிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை; கட்சி கொள்கைகள் குறித்த தெளிவு இல்லை,'' என, வருத்தத்துடன் குறிப்பிட்டார்.கட்சியின் கொள்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தாண்டு துவக்கத்தில்
 ஒற்றுமையும் இல்லை; தெளிவும் இல்லை காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா வருத்தம்

காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சோனியா, ''கட்சியில் நிர்வாகிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை; கட்சி கொள்கைகள் குறித்த தெளிவு இல்லை,'' என, வருத்தத்துடன் குறிப்பிட்டார்.கட்சியின் கொள்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது.கொள்கை உறுதிஇதையொட்டி, காங்., மேலிட பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடந்தது.

இதில், கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா பேசியதாவது:இளைய தலைமுறையைச் சேர்ந்த புதிய உறுப்பினர்களின் சேர்க்கை தான், எந்தவொரு அமைப்புக்குமே முக்கியமாக அமையும்.அவர்களை நல்ல புரித லுடன் வழிநடத்தி, சரியான பாதையை உருவாக்கித் தர வேண்டியது மூத்தவர்களின் கடமை.கட்சியின் கொள்கைகளை முழுதுமாக உள்வாங்கியிருந்தால் மட்டுமே, கட்சியின் மீதான தவறான பிரசாரத்தை முறியடிக்க முடியும். இதற்கான பயிற்சிகள் கீழ்மட்ட அளவிலிருந்து அனைத்து நிலைகளிலும் நடத்தப்படும்.

பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆகியவற்றின் சித்தாந்தங்களை எதிர்த்து போராட வேண்டும். அதற்கு, நம்மிடையே கொள்கை உறுதி வேண்டும். சண்டையிட வேண்டும்மக்கள் மத்தியில் அவர்களது பொய்களை அம்பலப்படுத்துவதன் வாயிலாக, இந்த போரில் நாம் வெல்ல முடியும்.

முக்கிய பிரச்னைகள் குறித்து கட்சியின் சார்பில் தினமும் அறிக்கைகள் விடப்படுகின்றன. ஆனாலும் கூட, அவற்றின் விபரங்கள் கீழ்மட்டத் தொண்டர்களை சென்றடையவில்லையோ என தோன்றுகிறது.கட்சிக்குள் ஒற்றுமை இல்லாமை, கொள்கை தெளிவின்மை இருப்பதாகவும் தெரிகிறது. கொள்கைகள் குறித்த போதுமான புரிதல்களோ, தெளிவுகளோ இல்லாத நிலை, மாநில அளவிலான நிர்வாகிகளிடமும் காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையை மாற்றி தொண்டர்களை உற்சாகப்படுத்தி, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பரப்பும் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் தீவிரமாக செயல்படுவதற்கு, கட்சிக்குள் சித்தாந்த பலத்தை நிறுவ வேண்டும்.அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் முக்கிய அமைப்புகளை, பிரதமர் நரேந்திர மோடி அரசு வலுவிழக்கச் செய்து வருகிறது.இந்நிலை தொடர்வதால் ஜனநாயகத்தின் அடிப்படை பண்புகளே கேள்விக்குறியாகி வருகின்றன.

மத்திய அரசின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர் என, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்காகவும் நாம்சண்டையிட வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக, நான் திரும்பத் திரும்ப கேட்டுக் கொள்வ தெல்லாம், ஒற்றுமையும், கட்டுப்பாடும் தான். சொந்த நலன்களுக்கு அப்பாற்பட்டு கட்சியைப் பலப்படுத்தும் வகையில் தான், நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


உறுப்பினர் சேர்க்கைகாங்., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டது தொடர்பாக, செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கை, நவ., 1ல் துவங்கி, அடுத்தாண்டு மார்ச் 31 வரை நடக்கும்.முதல்முறை வாக்காளர்களை கட்சியில் சேர்க்க முக்கியத்துவம் தரப்படும்.கட்சியின் கொள்கைகள் மீது, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.அவற்றை முறியடிக்கும் வகையில் கட்சியின் கொள்கைகள் குறித்த பயிற்சி முகாம்களும் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


திரிணமுல் விரக்தி


திரிணமுல் காங்.,கின் மூத்த தலைவர் சுகேந்திர சேகர் ராய் கூறியதாவது: பா.ஜ.,வை எதிர் கொள்ள, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக, சோனியா உள்ளிட்டோரையும் சந்தித்து தன் திட்டம் குறித்து தெரிவித்தார். ஆனால் ஆறு மாதங்களாகியும், இதுவரை எவரும் பதில் அளிக்கவில்லை. உட்கட்சி பிரச்னையை சமாளிப்பதில் காங்., முழு நேரத்தை செலவிட்டு வருகிறது.இதற்கு மேலும் காத்திருக்க தயாராக இல்லை. பா.ஜ.,வை எதிர்க்க, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவது அல்லது தனித்து போட்டியிடுவது குறித்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உடனடியாக முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


அமரீந்தர் இன்று முடிவுஉட்கட்சி பிரச்னையால் பஞ்சாப் முதல்வர் பதவியை இழந்த அமரீந்தர் சிங், காங்., கட்சியில் இருந்து வெளியேறினார். புதிய கட்சி துவக்க உள்ளதாகவும், தேவைப்பட்டால் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாகவும் சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் இன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதிய கட்சி தொடர்பாக அவர் அறிவிக்கக் கூடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


லாலுவின் கிண்டல்பீஹாரில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் வேட்பாளர்களை நிறுத்தினார். இதற்கு, கூட்டணி கட்சியான காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.'காங்கிரசால் 'டிபாசிட்' கூட வாங்க முடியாது. அதனால் நாங்களே போட்டியிடுகிறோம்' என, லாலு பிரசாத் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு மாற்றாக உள்ள ஒரே தேசியக் கட்சி காங்கிரஸ் தான். மற்ற அனைவரைவிட, அந்தக் கட்சியை நான் நன்கு அறிவேன். பல உதவிகளை செய்துள்ளேன். ஆனால் அக்கட்சியில் உள்ள குட்டித் தலைவர்கள், கூட்டணியை முறிக்கும் வகையில் பேசுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

-- நமது டில்லி நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X