சென்னை:தமிழக கவர்னர், துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிய விரும்புவதால், திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க தயாராகும்படி, அரசு துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.
அ.தி.மு.க., ஆட்சியில், கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித், மாவட்ட வாரியாக ஆய்வுக்கு சென்றார். இதற்கு, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவர் சென்ற இடங்களில், அவருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தின.
'பவர் பாயின்ட்'
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்டார். புதிய கவர்னராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக, தமிழக அரசிடம் பல்வேறு விளக்கங்களை, அவ்வப்போது கேட்டு வருகிறார்.தி.மு.க., அரசு மீது, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., சார்பில், கவர்னரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், ஒவ்வொரு துறை வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து கொள்ள, கவர்னர் முடிவு செய்திருப்பது, துறை செயலர்களுக்கு, தலைமை செயலர் இறையன்பு எழுதிய கடிதம் வழியாக தெரிய வந்துள்ளது.அனைத்து அரசு துறை செயலர்களுக்கு இறையன்பு எழுதியுள்ள கடிதம்:
தமிழக கவர்னர், மாநிலத்தில் உள்ள சில துறைகளின் செயல்பாடுகள் மற்றும் தற்போது செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள், மாநில, மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து அறிய விரும்புகிறார்.எனவே, கவர்னரிடம் உங்கள் துறையில் செயல்படுத்தப்படும், மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்கவும். இதற்காக, 'பவர் பாயின்ட்' விளக்க காட்சியும் தயாரிக்கலாம்.
தயாரிக்கப்பட்ட, 'பவர் பாயின்ட்' விளக்க காட்சிக்கு முன் விவாதிக்கப்பட வேண்டும். தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இக்கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
துறை வாரியாக திட்டங்கள் குறித்து கவர்னர் கேட்கலாமா; ஆய்வு செய்யலாமா; முதல்வர் இதை அனுமதிப்பாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.இது தொடர்பாக, தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டு உள்ள விளக்கம்:அலுவல் ரீதியாக துறையின் செயலர்களுக்கு, நான் அனுப்பிய ஒரு கடிதம், அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன்.
தமிழகத்திற்கு கவர்னர் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டு திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில், அதற்கான தரவுகளை திரட்டி வைத்துக் கொள்ளும்படி, அனைத்து துறை அலுவலர்களுக்கும், அலுவல் ரீதியான ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.
திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து, இதுபோல் தகவல்களை திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது, நிர்வாகத்தில் வழக்கமானது தான். அதை அரசியல் சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு, இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று தான் என்பது தெரியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எதிர்ப்பு!
'தமிழக அரசு துறைகளின் செயல்பாடுகளில் தலையிடுகிற போக்கை, கவர்னர் நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கவர்னரை பொறுத்தவரை அமைச்சரவையின் அறிவுரைபடியும், ஆலோசனை படியும் தான் செயல்பட முடியும்; நேரடியாகச் செயல்பட முடியாது.
மாநில அரசு நிறைவேற்றும் திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை தருமாறு, கவர்னர் கேட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.தமிழக அரசின் திட்டங்கள், துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி கண்காணிப்பதற்கோ, தலையிடுவதற்கோ கவர்னருக்கு எந்த உரிமையும் இல்லை.
இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாக, தமிழகத்தில் பா.ஜ.,வை காலுான்ற செய்வதற்கான முயற்சியில், கவர்னர் ஈடுபடுகிறாரோ என்ற, சந்தேகம் வலுப்பெறுகிறது. ஏற்கனவே, மக்களால் நிராகரிக்கப்பட்ட பா.ஜ., கட்சி, கவர்னரின் நடவடிக்கையால், மேலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.
பா.ஜ., ஆதரவு; தி.மு.க., வரவேற்பு!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: மத்திய அரசு திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக, முதல்வரையும், தலைமை செயலரையும் அழைத்து பேசி, கவர்னர் தன் கருத்துக்களை சொல்லி இருக்கிறார். அவர்களும் ஏற்று, அவர் கேட்ட தகவல்களை அளிக்க தயாராகி இருக்கின்றனர். அவர்களுக்கு புரிந்த யதார்த்தம், கூடவே இருக்கும் பூசாரி அரசியல் தலைவர்களுக்கு தெரியாமல் போய் விட்டது.
மத்திய அரசின் திட்டங்கள், தமிழகத்தில் சிறப்பாக செயல்படவும், மக்கள் அமைதியான வாழ்க்கை வாழவும், கவர்னர் எடுக்கும் முயற்சிகள் பக்கபலமாக இருக்கும் என்றால், கவர்னரின் செயல்பாடுகளுக்கு, தமிழக பா.ஜ., பக்கபலமாக இருக்கும்.
தி.மு.க., செய்தி தொடர்பு இணை செயலர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிக்கை:
முதல்வரும், தலைமைச் செயலரும், கவர்னரை சந்தித்த போது, 'மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து, துறைத் தலைவர்கள், 'பவர் பாயின்ட்' விளக்கம் அளித்தால், விபரமாக அறிந்து கொள்வேன்' என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.இதில் எந்த இடத்திலும், அதிகார துஷ்பிரயோகம் இல்லை. முதல்வருக்கு தெரியாமல், அதிகாரிகளை கூப்பிட்டு, ஆய்வு நடத்துவேன் என கவர்னர் கூறியிருந்தால், அது தவறு.
கவர்னர் அவ்வாறு கூறியிருந்தால், எதிர்த்திருப்போம். கவர்னர் தன் அதிகார எல்லைக்குள் இருந்து, விபரங்களை கேட்கும் போது, தமிழக அரசு தன் கடமையை செய்கிறது. வரம்பு மீறாமல் கவர்னரின் செயல்பாடு, சட்டத்துக்கு உட்பட்டு இருக்கும்போது, மாநில அரசு ஒத்துழைப்பதில் தவறில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE