திருப்பரங்குன்றம் :தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் தார்ச்சாலைகள் ஏற்கனவே உள்ள தார்ச்சாலைகள் மேல் அமைக்கப்படுவதால் சாலைகள் தரை மட்டத்திலிருந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனை தவிர்க்க சாலையை இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து அதனுடன் புதிய தார், ஜல்லி கலவையை சேர்த்து புதிதாக சாலை அமைக்கும் முயற்சி மதுரை தியாக ராஜர் பொறியியல் கல்லுாரி சுற்றுச்சூழல் தகவல் மைய ஆய்வகத்தில் நடக்கிறது.தார்ச்சாலைகள் அமைக்க துவங்கிய காலம்முதல் தற்போதுவரை பழைய ரோட்டின்மேல் புதிய ரோடுகள் அடுக்குகளாக போடப்பட்டு வருகிறது. இதனால் ரோடுகளின் உயரம் அதிகரிப்பதுடன், ரோட்டின் இருபுறமும் உள்ள மணல் பகுதிகள் பள்ளங்களாகி விடுகிறது. வாகனங்களில் செல்வோர் விபத்துக்களில் சிக்குகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் ரோடு உயர்வதால் வீடுகள் பள்ளமாகி மழை காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் செல்கிறது. பல இடங்களில் ரோட்டில் செல்லும் கழிவுநீர் வீடுகளுக்குள் செல்கிறது.
இருக்கின்ற ரோட்டின்மேல் புதிய ரோடுகள் போடப்படுவதால் செலவு இருமடங்காக அதிகரிக்கிறது. ஜல்லி, தார் தேவை அதிகரிக்கிறது. இவற்றை பூமியிலிருந்து எடுப்பதால் இயற்கை வளமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு கண்டுபிடித்துள்ள மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி டீன் வாசுதேவன் கூறியதாவது:
எங்களது புதிய தொழில்நுட்பத்தில் தார் சாலை அமைக்கும் போது, பழைய ரோட்டை இயந்திரம் மூலம் தோண்டி எடுக்க வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் கழிவுகளுடன், புதிய தார், ஜல்லிகளை மிக குறைந்த அளவு பயன்படுத்தி மீண்டும் புதிய ரோடு அமைக்கலாம்.
இதன்மூலம் 40 முதல் 50 சதவீதம் செலவு குறையும். அரசுக்கு பணம் சேமிப்பு, ஜல்லி, தார் தேவை குறையும். சுற்றுச்சூழல் பாதிக்காது. ரோடும் உயராது. கழிவுகள் சேராது. இதற்கான ஆய்வு முடியும் நிலையில் உள்ளது.
பிளாஸ்டிக் ரோடு
பழைய ரோடுகளை பெயர்த்தெடுத்து தேவைக்கேற்ப கழிவு பிளாஸ்டிக்குகளை புதிய ஜல்லிகள் மீது லேமினேட் செய்து அதை சூடான தாருடன் கலந்து, இதனுடன் பழைய ரோட்டில் எடுக்கப்பட்ட கலவையை சேர்த்து பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்கலாம். அப்படி அமைக்கும் ரோடுகள் 15 ஆண்டுகள் வரை சேதமடையாது. ரோட்டில் விரிசல், பள்ளங்கள் ஏற்படாது. இயற்கையை பாதிக்கும் கழிவு பிளாஸ்டிக்குகளை மீண்டும் பயன்படுத்துவதால் இயற்கையும் பாதுகாக்கப்படுகிறது. இம்முறையில் 2016ல் திண்டிவனத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.
வாசுதேவன் தலைமையில் பேராசிரியர்கள் ராமலிங்கம் சந்திரசேகர், சுந்தரகண்ணன் அடங்கிய குழுவினர் கண்டுபிடித்துள்ள புதிய தொழில் நுட்பம் வழியாக சாலைகள் அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும். விபரங்களுக்கு 94864 86728ல் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE