பெரியாறு அணைப்பிரச்னை விஸ்வரூபம் தமிழக அரசியல்வாதிகள் கப் சிப்| Dinamalar

தமிழ்நாடு

பெரியாறு அணைப்பிரச்னை விஸ்வரூபம் தமிழக அரசியல்வாதிகள் 'கப் சிப்'

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (21)
Share
கூடலுார் :உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி பெரியாறு அணையில் 142 அடி நீர்மட்டம் உயர்த்த விடாமல் தடுக்கும் பல்வேறு முயற்சியில் கேரளா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அணை குறித்த தவறான தகவல்களை வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன், தற்போது புதிய அணை கட்டுவதற்காக ரூ.1500 கோடி மதிப்பீட்டில் அறிக்கையை தயார் செய்து
 பெரியாறு ,அணைப்பிரச்னை ,விஸ்வரூபம்,அரசியல்வாதிகள்,

கூடலுார் :உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி பெரியாறு அணையில் 142 அடி நீர்மட்டம் உயர்த்த விடாமல் தடுக்கும் பல்வேறு முயற்சியில் கேரளா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அணை குறித்த தவறான தகவல்களை வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன், தற்போது புதிய அணை கட்டுவதற்காக ரூ.1500 கோடி மதிப்பீட்டில் அறிக்கையை தயார் செய்து மத்திய நீர்வளகமிஷனுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அணைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என சட்டசபை தேர்தலில் வாக்குறுதி கொடுத்த தமிழக அரசியல்வாதிகள் இதுவரை வாய் திறக்காமல் உள்ளதற்கு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தி கிளம்பியுள்ளது.

பெரியாறு அணையில் 142 அடியாக நீர்மட்டத்தை நிலைநிறுத்திக் கொள்ள 2014 மே 7 ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அணையை ஒட்டியுள்ள பேபி அணையைப் பலப்படுத்தியபின் முழுக்கொள்ளளவான 152 அடி நீர் தேக்கிக்கொள்ளலாம் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்புக்குப்பின் அதே ஆண்டில் நவ. 20ல் 142 அடி நீர் தேங்கி தீர்ப்பை உறுதி செய்தது. அதன்பின் 2015 டிச. 7, 2018 அக். 15ல் 142 அடியை எட்டியது.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் நீர்மட்டம் 137.60 அடியை எட்டியுள்ளது.


latest tamil news


மேலும் மழை பெய்யும் என்பதால் நீர்மட்டம் 142 அடியை எட்டும் வாய்ப்புள்ளது. ஆனால் இதனை தடுப்பதற்காக அணை உடையும் அபாயம் உள்ளதாகவும், கரையோரப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியும் பிரச்னையை கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெரிது படுத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் கலெக்டர் தலைமையில் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை கூட்டி ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாது கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் பெரியாறு அணைக்கு அருகில் புதிய அணை கட்டுவதற்கான அறிக்கையை தயார் செய்து மத்திய நீர்வளக்கமிஷனிடம் சமர்ப்பிக்கப்போவதாக மேலும் ஒரு குளறுபடியை செய்துள்ளார். இதற்கு தமிழக விவசாயிகளிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


நடவடிக்கை அவசியம்கே.எம்.அப்பாஸ், விவசாய சங்க தலைவர், கம்பம்: பெரியாறு அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 6.8 லட்சம் விவசாயிகள் உள்ளனர். 80 லட்சம் மக்கள் குடிநீரை நம்பியுள்ளனர். 1979 க்கு முன்னர் 2.31 லட்சம் ஏக்கராக இருந்த பாசனப்பரப்பு நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்த பின், 1.71 லட்சமாக குறைந்தது. மேலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்பின், அணையில் 142 அடியாக உயர்த்த 2014 ல் வழங்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப்பின் தண்ணீர் பற்றாக்குறைக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் மதிக்காமல் கேரள அரசு பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து 142 அடியை தேக்குவதற்கும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதில் கேரள அரசு பல்வேறு முனைப்புகளை காட்டி வரும் நிலையில் தாமதிக்காமல் தமிழக அரசு விரைவில் எதிர்நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.


வேதனையானதுசெங்குட்டுவன், கூடலுார் அனைத்து விவசாயிகள் நலச்சங்க முன்னாள் துணைத்தலைவர்: பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டமுடியாது என பல ஆய்வுகளுக்குப்பின் தெரிந்தும், வேண்டுமென்றே கேரளா மீண்டும் புதிய அணை என்பதை கையில் எடுத்துள்ளது. பல்வேறு தொழில் நுட்பக்குழுவினர் நடத்திய ஆய்வுக்குப்பின் அணை பலமாக உள்ளது என வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக செயல்படுகிறது. மேலும் இது தொடர்பாக கேரள அரசியல்வாதிகள் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதி அளித்த அரசியல்வாதிகள் அமைதியாக உள்ளது வேதனையாக உள்ளது. இதில் தமிழக அரசு உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X