சென்னை: ‛‛மின்வாரியம் தொடர்பான சர்ச்சை கருத்து பிரச்னைக்கு ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு வந்த நோட்டீஸூக்கு, ‛என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும் தான்,' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பி.ஜி.ஆர். எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்துக்கு தமிழக மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை செய்துள்ளதாக சில ஆவணங்களை பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கண்டனம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். டுவிட்டரில் அண்ணாமலையும், செந்தில் பாலாஜியும் பதிலுக்கு பதில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இது தொடர்பாக பி.ஜி.ஆர். நிறுவனம் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீஸில், ஒரு வாரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். அவதூறு பரப்பியதற்காக ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலளித்த அண்ணாமலை தனது டுவிட்டரில், ‛‛500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். அறிவாலய அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது'' என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.