இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': எண்ணூரில் மாவோயிஸ்ட் கைது

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்எண்ணூரில் மாவோயிஸ்ட் கைதுசென்னை: சென்னை அருகே எண்ணூரில் தங்கி கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்த ஜார்க்கண்டை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுகூர் கஞ்சு(40). அங்கு மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த இவர், பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டுள்ள இவர் மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில்,
crimereport, கிரைம் ரவுண்ட் அப், மாவோயிஸ்ட், சென்னை, கைது


தமிழக நிகழ்வுகள்
எண்ணூரில் மாவோயிஸ்ட் கைது


சென்னை: சென்னை அருகே எண்ணூரில் தங்கி கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்த ஜார்க்கண்டை சேர்ந்த மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுகூர் கஞ்சு(40). அங்கு மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த இவர், பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டுள்ள இவர் மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், எண்ணூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுமானத்தில் கூலி தொழிலாளியாக, இவர் வேலை பார்த்து வருவதாக ஜார்க்கண்ட் மாநில போலீசாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அவர்கள், சென்னை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்படி சுகூர் கஞ்சுவை சென்னை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


'மாஜி' பி.டி.ஓ.,வை கட்டி போட்டு 4 லட்சம் ரூபாய் மற்றும் நகை கொள்ளை


latest tamil newsவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் வசிப்பவர் ஓய்வு பெற்ற பி.டி.ஓ., கணேசன், 88. இவர் மனைவி ஒன்றரை மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.மகன் பெங்களூருவில் வசிக்கிறார். வீட்டில் கணேசன் தனியாக உள்ளார். நேற்று மாலை 3:00 மணிக்கு வீட்டிற்கு வந்த இருவர் 'இந்த பகுதியில் 'பிளாட்' விற்பனைக்கு உள்ளதா' எனக் கேட்டுள்ளனர்.

பேசிக் கொண்டே இருந்தவர்கள் கணேசனை வாயை பொத்தி வீட்டிற்குள் தள்ளிச் சென்று, துணியால் கையை கட்டி வாயில் துணியை வைத்தனர். கத்தியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய், 4.5 சவரன் செயினை கொள்ளையடித்தனர். பின் கணேசனை அடுத்த அறைக்குள் தள்ளி சென்று விட்டனர். கணேசன் துணியை வாயிலிருந்து எடுத்து, கையை அவிழ்த்து வெளியில் ஓடி வந்தார். அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பக்கத்து வீட்டு 'சிசிடிவி' கேமராவில் கொள்ளையர்கள் வந்து சென்ற கார் பதிவு ஆகியுள்ளதை போலீசார் ஆய்வு செய்தனர். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


மகள் தற்கொலை:3 பேர் விஷம் குடித்தனர்;தாய் பலி


வேலுார்: வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அருகே தானப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ், 60. விவசாயி. மனைவி சரஸ்வதி, 47. மகன் ராஜா, 25, மகள் பிரியங்கா, 26. பிரியங்கா பி. இ., படித்து விட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தார்.பிரியங்காவுக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்தது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த 9 ம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேதனையடைந்த தந்தை துரைராஜ், தாய் சரஸ்வதி, தம்பி ராஜா ஆகியோர், எங்களுக்கு வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்கிறோம் என கடிதம் எழுதி வைத்து விட்டு, கடந்த 24 ம் தேதி கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் விஷம் குடித்தனர்.மயங்கி விழுந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு சரஸ்வதி இறந்தார். துரைராஜ், ராஜா ஆபத்தான நிலையில் உள்ளதாக டாக்டர்கள் கூறினர். வேப்பங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


விவசாயி சாவில் சந்தேகம்அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த அவிநாசி கண்டிகையை சேர்ந்தவர் அருண், 32. விவசாயி. கடந்த 20 ம் தேதி வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், 23 ம் தேதி கண்டிகையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் அருகே அவர் இறந்து கிடந்தார். அதிக மது குடித்து அவர் இறந்ததாக நினைத்து போலீசாருக்கு தெரியாமல் அவரது மனைவி மலர்கொடியின், 30, உறவினர்கள் அங்குள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.

இந்நிலையில் அருணின் தந்தை கோவிந்தராஜ், 70, என்பவர் தன் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பாணாவரம் போலீசில் புகார் செய்தார். இதனால் தாசில்தார் பழனிராஜன், இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் வருவாய்த்துறையினர் இன்று மாலை 5:00 மணிக்கு அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின் சந்தேக மரணம் என பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இரிடியம் மோசடி கும்பலுடன் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு?


பழமையான கோவில் கோபுர கலசங்களில் அரிய வகை உலோகமான இரிடியம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரிடியம் வீட்டில் இருந்தால், சகல செல்வங்களும் பெருகும் என்ற நம்பிக்கையால், இதை வைத்து பல்வேறு மோசடிகள் அரங்கேறுகின்றன. 1 கிலோ இரிடியம், கள்ள சந்தையில் 50 லட்சம்ரூபாய்க்கு மேல் விலை போகிறது.

சில தினங்களுக்கு முன், கோவை ஒத்தக்கால் மண்டபத்தில், ஒரு வீட்டில் இரிடியம் கலந்த கலசம் எனக் கூறி விற்க முயன்ற, உடுமலையை சேர்ந்த 42 - 24 வயதுள்ள ஆறு பேரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கேரளாவை சேர்ந்த ஒருவரை தேடி வருகின்றனர். மோசடி கும்பலிடமிருந்து, 90 லட்சம் மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் பல கட்டுகளில், தனியார் வங்கி, 'ஸ்லிப்' காணப்பட்டது. இந்த ஸ்லிப் இக்கும்பலுக்கு எப்படி கிடைத்தது; இக்கும்பலுடன் தனியார் வங்கி ஊழியர்கள் தொடர்பில் உள்ளார்களா என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, வங்கி ஊழியர்கள் பக்கம் போலீஸ் விசாரணை திரும்பியுள்ளது. இந்த நோட்டுக்களை எங்கு நகல் எடுத்தார்கள், இதற்கு முன் புழக்கத்தில் விட்டார்களா, இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.


தேனி வேதபுரி ஆஸ்ரமத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டுlatest tamil newsதேனி அரண்மனைப்புதுார் வயல்பட்டி ரோட்டில் வேதபுரி ஸ்ரீ சுவாமி சித்பவானந்த ஆஸ்ரமம் உள்ளது. இதன் நிர்வாகத்தில் இயங்கும் தட்சிணாமூர்த்தி கோயிலில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தாயுமானவர் (ஒரு அடி), மாணிக்கவாசகர் (1.5 அடி) ஐம்பொன் சிலைகள் 2004ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ.90 ஆயிரம் மதிப்பிலான தலா முக்கால் அடி உயரமுள்ள வேதவியாசர், ஸநகர், ஸநாதனர், ஸனந்தர், ஸாந்தக்குமாரர், அரை அடி உயரமுள்ள நந்திகேஸ்வரர், கால் அடி உயரமுள்ள பலிபீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

நேற்று முன்தினம் இரவு ஆஸ்ரமத்திற்கு அருகே உள்ள வனத்துறை நாற்றாங்கால் பண்ணை வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து மூலவர் தட்சிணாமூர்த்தி கோயில் பின்புற சுவரில் உள்ள கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலுடன் சேர்த்து ஐம்பொன் சிலைகளையும் திருடி சென்றனர். தேனி எஸ்.பி., பிரவின்உமேஷ் டோங்ரே சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். திருடர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். நாற்றாங்கால் பண்ணையில் திருடர்கள் விட்டு சென்ற வேதவியாசர், பலி பீடம் உட்பட 2 சிலைகளை கண்டெடுக்கப்பட்டது. சிலைதிருட்டு தடுப்புப் பிரிவு போலீசாரும் விசாரிக்கின்றனர்.


அதிகாரி பழனி கணக்கில் ரூ.29 லட்சம் சிக்கியது


காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகில், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் சுகாதார சான்றிதழ் வழங்க பணம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.கடந்த 18ம் தேதி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில், துணை இயக்குனராக பணிபுரியும் பழனியிடம் இருந்து, கணக்கில் வராத 1.66 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், இளங்கோவன் ஆகியோரிடமும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மறுநாள் 19ல், சென்னையில் உள்ள அவரது வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 3.22 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.தொடர்ந்து, நீதிமன்ற அனுமதி பெற்று, சென்னை திருமங்கலம் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் அவரது பெயரில் கணக்கில் வராத 29.80 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீசார், அப்பணத்தை கைப்பற்றினர். வங்கி லாக்கரில் இருக்கும் 160 சவரன் நகை குறித்து விசாரித்து வருகின்றனர்.


துர்கை அம்மன் சிலை திருட்டு


ராமநாதபுரம் -நயினார்கோவில் ரோட்டில் தொன்னை குருசாமி என்றழைக்கப்படும் பழமையான சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள அனைத்து சிலைகளும் மிகவும் பழமை வாய்ந்தவை. இங்கு அமைந்திருந்த துர்கை அம்மன் கற்சிலையை நேற்று முன்தினம் இரவு பீடத்தோடு திருடிச்சென்றனர்.ராமநாதபுரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.


ரவுடிகள் தயாரித்த 'டிபன் பாக்ஸ்' வெடிகுண்டு


சிவகங்கை அருகே கீழக்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளி பழைய கட்டடத்தில் 'டிபன் பாக்ஸ்' வடிவில் பெட்டி கிடந்துள்ளது. அக்., 25 மாலை 5:00 மணிக்கு பள்ளியில் விளையாடிய சிறுவர்கள் கிேஷார் 8, நவீன்குமார் 13, வைணவன் 11, அதை எடுத்துள்ளனர். முதலில் அந்த பாக்ஸை திறக்க முடியாததால், கல்லால் அடித்து திறக்க முயற்சித்துள்ளனர். பாக்ஸ் திறக்கவில்லை. இதற்கு பின்னரே பள்ளி அருகே ரோட்டில் வீசியுள்ளனர். அப்போது வெடிகுண்டு வெடித்தது.அதில் இருந்த சில்வர் தகடு, ஆணிகள் சிதறி சிறுவர்கள் மீது பட்டதால் மூவரும் காயமுற்றனர். சில்வர் தகடு கிழித்ததால் கிேஷாரின் குடல் வெளியேறியது.

வெடிகுண்டு நிபுணர்கள், கியூ பிரிவு போலீசார், உள்ளூர் போலீசார் தொடர்ந்து கீழக்குளம் கிராமத்தில் விசாரிக்கின்றனர்.பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை தாக்குதலுக்கு பயன்படுத்தும் நோக்கில் சில மாதங்களுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் அதிக வெண்பாஸ்பரஸ், சில்வர் தகடு, ஆணிகள் கொண்டு தயாரித்த 'பாக்ஸ் வெடிகுண்டை' சிதிலமடைந்த இப்பள்ளியில் பாதுகாப்பிற்காக வைத்திருக்கலாம். ரவுடிகளின் தாக்குதல் 'பிளான்' சக்சஸ் ஆகாத காரணத்தாலோ அல்லது வேறு ஆயுதத்தை பயன்படுத்தும் நோக்கில் பள்ளியில் வைத்த 'டிபன் பாக்ஸ்' வெடிகுண்டை எடுக்காமல் மறந்திருக்க கூடும். அந்த பாக்சை எடுத்து வீசியதால் தான் சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொலை: இருவர் கைது


தஞ்சாவூர் மாவட்டம்,சூழியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கனகவல்லி, 33, திருமணமாகாதவர். இவர் காலையில் ஆடுகளை மேய்ச்சலுகு அழைத்து சென்று மாலையில் வீடு திரும்புவார். நேற்று முன்தினம் ஆடு மேய்க்கச் சென்ற கனகவல்லி இரவாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆடு மேய்க்கச் செல்லும் இடங்களில் தேடியும் காணவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் கனகவள்ளி கிடந்துள்ளார்.

அம்மாபேட்டை போலீசார், கனகவல்லியின் உடலை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் கிடந்த மீன் பிடிக்கும் துாண்டிலை மீட்டு, அப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, 28, என்பவரை பிடித்தனர். விசாரணையில், பெரியசாமி தனியாக இருந்த கனகவல்லியை வனப்பகுதிக்கு துாக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார், 22 என்பவரும், கனகவல்லியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தந்தையை கொன்ற மகன் கைது


பெரம்பலுார் மாவட்டம், எலந்தலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 49. கொல்லுபட்டறை நடத்தி வந்தார். இவருக்கு தையல்நாயகி, 44, ராணி, 40, என, இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு வேலவன், 21, வெற்றிவேல், 18, என்ற இரண்டு மகனும், இரண்டாவது மனைவிக்கு கதிர்வேல், 14, என்ற மகனும் உள்ளனர். தையல்நாயகி கணவரை பிரிந்து, பெரம்பலுார் காந்திநகரில் தனியாக வசித்து வருகிறார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மூத்த மகன் வேலவனுக்கு, திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பெருவளநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த மீனா, 18, என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இரண்டாவது மனைவி ராணி மற்றும் மூன்று மகன்கள், மருமகள் ஆகியோருடன், முருகன் எலந்தலைப்பட்டி கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில் மருமகள் மீனாவுடன், முருகனுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுபற்றி தெரிந்த வேலவன் இருவரையும் கண்டித்தும், கள்ளத்தொடர்பை அவர்கள் தொடர்ந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை 3:00 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த வேலவன், மீனாவிடம் தகராறு செய்து, அடித்துள்ளார். அப்போது முருகன், வேலவனை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வேலவன், தந்தையை தலை, கழுத்தில் அரிவாளால் வெட்டினார். இதில் அவர் இறந்தார். தப்பியோடிய வேலவனை பாடாலுார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


ரூ.2.51 கோடி நகைக்கடன் மோசடி: 3 பேர் சஸ்பெண்ட்


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் 2 கோடியே, 51 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில் வங்கி ஊழியர்கள் சரவணன், லிங்கப்பா ஜெகதீசன் மூன்று நபர்களையும், இணைப்பதிவாளர் ராஜ்குமார் உத்தரவின்பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் போலி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத்துறைக்கு தகவல் வந்தது. போலி நகைக்கடன் வழங்க உறுதுணையாக இருந்த வங்கி பணியாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 77 நபர்களுக்கு போலி நகைக்கடன்கள் வழங்கப்பட்டதாகவும், குறைவான எடையுள்ள நகைக்கு அதிக எடை போல் காண்பித்து அதிகளவில் பணம் வழங்கியதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நகைக்கடன் வழங்கியதில் மோசடி செய்தது உறுதியானதால் ஆரணி வங்கி பணியாளர்கள் 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.இந்திய நிலவரம்பலாத்கார வழக்கு எம்.எல். ஏ., மகன் கைது


இந்துார்: மத்திய பிரதேசத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவான காங்கிரஸ் எம்.எல்.ஏ., மகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. உஜ்ஜைன் மாவட்டம் பட்நகர் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., முரளி மோர்வால். இவரது மகன் கரண் மோர்வால். இவர் மீது ஏப்., 2ம் தேதி இந்துார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாலியல் பலாத்கார வழக்கு பதிவானது. தலைமறைவான அவரை ஆறு மாதங்களுக்கும் மேலாக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

'கைது நடவடிக்கைக்கு உதவுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், ஷாஜாபூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த கரண் மோர்வாலை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.


காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்கு


சமீபத்தில் நடந்த போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. இதன் வாயிலாக, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிரான தன் முதல் வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்தது. இந்த வெற்றியை, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் காஷ்மீரில் வசிக்கும் மக்கள் பலர் கொண்டாடியதாக தகவல் வெளியானது. ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில் மாணவியரும், ' ஷேர் - ஐ - காஷ்மீர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்' கல்லுாரியில் மாணவர்களும், பாக்., வெற்றியை கொண்டாடினர்.

மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 'வீடியோ' பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது; இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மருத்துவ மாணவ - மாணவியர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


ஆசிரியை பணி நீக்கம்latest tamil newsராஜஸ்தானின் உதய்பூரில், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் நபீசா அட்டாரி. கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும், 'வாட்ஸ் ஆப்'பில், 'நாம் வெற்றி பெற்றுவிட்டோம்' என பதிவு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்தார். மேலும், வாட்ஸ் ஆப்பில் தன் 'ஸ்டேடஸ்' ஆக, பாக்., வீரர்களின் வெற்றிக் கொண்டாட்ட புகைப்படத்தையும் வைத்திருந்தார்; இது, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நபீசா அட்டாரியை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


நீர்மூழ்கி கப்பல் தகவல் கசிவு கடற்படை அதிகாரி கைது


இந்திய கடற்படையில் உள்ள சிறப்பு வகை நீர்மூழ்கி கப்பலை நவீனப்படுத்துதல் தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான தகவல்கள் கசிந்ததாக புகார் எழுந்தது. அதுபற்றி விசாரிக்க கடற்படை உயர் அதிகாரி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த பிரச்னை தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகளும் விசாரணையை விரைவு படுத்தினர். தற்போது பணியில் உள்ள மாண்டர் பொறுப்பில் உள்ள கடற்படைஅதிகாரிக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மும்பையில் பணியில் இருந்த கடற்படை அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற இரு கடற்படை அதிகாரிகளை சி.பி.ஐ., நேற்று கைது செய்தது. இவர்கள் வாயிலாக நீர்மூழ்கி கப்பல் தகவல் பகிர்வில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணை தொடர்கிறது.

இதற்கிடையே கடற்படை அதிகாரிகளை தங்கள் பக்கம் சாய்த்து, கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசிய தகவல் சேகரிப்போர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதன்படி 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் வாயிலாக ரகசிய தகவல்களை அதிகாரிகளிடம் பெற்று பாகிஸ்தானுக்கு வழங்கியதாக அல்தாப் ஹுசைன் ஹருண்காஞ்சி என்பவரை குஜராத்தின் கோத்ராவில் போலீசார் நேற்று கைது செய்தனர்.


வயநாட்டில் நக்சல் சரண்


latest tamil newsதமிழகம், கேரளா, கர்நாடகா பகுதிகளில், சமீபகாலமாக நக்சல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மூன்று மாநில போலீசார், தொடர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், மாவோயிஸ்ட் இயக்கத்தின் கபினி பகுதி தலைமை கமாண்டர் ராமு,37, என்பவர், கேரளா மாநிலம் வயநாடு பகுதியில், ஐ.ஜி. அசோக் யாதவ் முன்னிலையில் சரண் அடைந்தார். இதனால், மூன்று மாநில நக்சல் செயல்பாடு குறித்து பல்வேறு தகவல் போலீசாருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-அக்-202107:26:38 IST Report Abuse
ராஜா தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - மாவோயிஸ்டுகள் எங்கேயோ இடிக்குறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X