சாதாரண தொண்டன்?
'பாவம், அரசியலுக்கு பழைய முகம் என்றாலும், பதவிக்கு புதியவர் என்பதால் ஒருவித நடுக்கம் தெரிகிறது' என, உத்தரகண்ட் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான புஷ்கர் சிங் தாமி பற்றி கூறுகின்றனர், அந்த மாநில அரசியல்வாதிகள். இங்கு அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் கட்சிக்கு எதிராக கடுமையான அதிருப்தி அலை வீசியதால், சுதாரித்த பா.ஜ., மேலிடம், நான்கு ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்தை அதிரடியாக சமீபத்தில் மாற்றியது.
அவருக்கு பதிலாக தீரத் சிங் ராவத் முதல்வராக நியமிக்கப்பட்டார். சில நாட்களிலேயே அவரை துாக்கி விட்டு, தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் தாமியை நியமித்தது, பா.ஜ., மேலிடம். புஷ்கர் சிங் தாமி ஓரளவு சமாளித்து ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால் தேர்தலைப் பற்றிய பதற்றம், அவரது அடிமனதுக்குள் இருக்கிறது. 'எப்படியாவது வெற்றி பெற வேண்டுமே' என்ற பரபரப்பில் இருக்கிறார். இதனால் தன்னை மக்கள் செல்வாக்கு உள்ள தலைவராக முன் நிறுத்தாமல், பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய
திட்டமிட்டுள்ளார். கட்சி நிகழ்ச்சிகளிலும், 'நான் பா.ஜ.,வின் சாதாரண தொண்டன்' என, உணர்ச்சி பூர்வமாக பேசுகிறார். புஷ்கர் சிங் தாமியின் இந்த உணர்வுப்பூர்வமான அணுகுமுறை தேர்தலில் கை கொடுத்தால் நல்லது' என, ஏக்கத்துடன் கூறுகின்றனர், உத்தரகண்ட் பா.ஜ.,வினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE