தமிழகத்தில் புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.டில்லியில் நேற்று, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக மருத்துவ தேவைகள், சுகாதாரத்துறை கட்டமைப்பு என, 11 கோரிக்கைகள், மத்திய அரசின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கையாக ஏற்கனவே 850 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது. மேலும் 800 பேருக்கு அனுமதி கோரி உள்ளோம்.
மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து நடத்தவும், கோவையில் புதிய எய்ம்ஸ் கல்லுாரியை அமைக்கவும் கோரிக்கை வைத்துஉள்ளோம். தமிழகத்தில் 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்கவும் கேட்டுள்ளோம். கோவாக்சின் போட்டவர்களில் 12 லட்சம் பேர், இரண்டாவது தடுப்பூசிக்கு காத்திருப்பதால், உடனடியாக, 10 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. தவிர, நீட் தேர்வு ரத்து குறித்த கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
தமிழகத்தில், 19 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு அனுமதி கோரியும், ஒவ்வொன்றுக்கும் 50 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 950 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE