கோவில்களில் விரைவில் அறங்காவலர்கள் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் விரைவில் அறங்காவலர்கள் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

Updated : அக் 29, 2021 | Added : அக் 28, 2021 | கருத்துகள் (32)
Share
சென்னை : 'கோவில்ளுக்கு விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், அறங்காவலர் நியமன நடவடிக்கையை கண்காணிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதிப்பு ஏற்படலாம் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:ஹிந்து கோவில்களில், அயல்பணி என்ற முறையில், அறநிலையத்
கோவில்கள், அறங்காவலர்கள் ,  தமிழக அரசு, அறிவுரை

சென்னை : 'கோவில்ளுக்கு விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், அறங்காவலர் நியமன நடவடிக்கையை கண்காணிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பாதிப்பு ஏற்படலாம்ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:ஹிந்து கோவில்களில், அயல்பணி என்ற முறையில், அறநிலையத் துறை ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு, அந்தந்த கோவில்களின் நிதியில் இருந்து சம்பளம், அலவன்ஸ் வழங்கப்பட வேண்டும்.ஆனால், கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகளில் ஊழியர்களை நியமிக்க, அறங்காவலர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது. மற்றவர்களுக்கு இல்லை. நிர்வாக அதிகாரியை மட்டுமே கோவில்களுக்குநியமித்துக் கொள்ளலாம். அறநிலையத் துறை சட்டம், நிர்வாக அதிகாரி தவிர்த்து, அரசு ஊழியர்களை நியமிக்க அனுமதி அளிக்கவில்லை.

அறநிலையத் துறை ஊழியர்களை, கோவில்களில் உள்ள பல்வேறு பதவிகளில் சட்ட விரோதமாக நியமிக்கின்றனர். துணை ஆணையர் முதல், ஆய்வாளர்கள் வரை, அயல்பணி என்ற முறையில் கோவில்களில் நியமிக்கின்றனர். எனவே, அயல்பணி என்ற முறையில், கோவில்கள் மற்றும் மத நிறுவனங்களில் அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க, அறநிலையத் துறை ஆணையருக்கு தடை விதிக்க வேண்டும். கோவில் நிதியில் இருந்து வழங்கப்பட்ட சம்பளம், அலவன்ஸ் தொகையை திருப்பி கொடுக்கும்படிஉத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன்,விசாரணைக்கு வந்தது.

மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ''நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ கோவில்களில் உள்ள பணியிடங்களுக்கு நியமிக்க, அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.''அயல்பணி என்ற முறையில் 100க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம் இதை அனுமதிக்கவில்லை. எனவே, மேற்கொண்டு நியமனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''அறங்காவலர்களை நியமிக்க, மாவட்ட அளவில் குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.''குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய, விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு வாரங்களில் குழுக்கள் அமைக்கப்படும்,'' என்றார்.

முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில், மேற்கொண்டு நியமனங்களுக்கு தடை விதித்தால், கோவில் நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படலாம்; கோவில் நிலங்கள், சொத்துக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பாதிப்பு ஏற்படலாம்.கோவில்களில் தற்காலிக அல்லது நிரந்தர அடிப்படையில், ஊழியர்கள் நியமனம் தொடர்பாக முடிவெடுக்க, விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்போது தான், கோவில்கள் சுமுகமாக செயல்படும்.


கண்காணிக்கலாம்


இந்த வழக்கு விசாரணை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கிடையில், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு விடும் என நம்புகிறோம். மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், சட்டப்படி அறங்காவலர்கள் நியமிக்கும் முறையை நீதிமன்றம் கண்காணிக்கலாம்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.விசாரணையை, டிச., 15க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்துள்ளது.

மாவட்ட குழுக்களுக்கு உறுப்பினர்களை வரவேற்று வெளியிடப்பட்ட விளம்பரங்களில், விண்ணப்பிப்போருக்கான தகுதியை குறிப்பிடவில்லை என, டி.ஆர்.ரமேஷ் சுட்டிக் காட்டினார். உடனே, தலைமை நீதிபதி, விளம்பரத்தில் தவறு இருந்தால், சரி செய்து வெளியிடும்படி, அட்வகேட் ஜெனரலிடம் அறிவுறுத்தினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X