புதுடில்லி : “மருந்து தொழிலின் மையமாக இந்தியாவை மாற்ற, முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும்,” என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்துள்ளார்.
டில்லியில் நேற்று, 'ஆப்பர்ச்சுனிட்டீஸ் அண்டு பார்ட்னர்ஷிப்ஸ் இன் பார்மா அண்டு மெடிக்கல் டிவைசஸ்' எனப்படும், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் தயாரிப்பு தொடர்பான முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. 'ஆன்லைன்' வாயிலாக நடந்த இந்த மாநாட்டில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:முதலீட்டாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறுவதையே நானும் இப்போது கூறுகிறேன். இந்தியாவுக்கு வந்து தொழிற்சாலைகளை கட்டமைத்து தயாரியுங்கள். முதலீட்டாளர்களுக்கு இதன் வாயிலாக அழைப்பு விடுக்கிறேன்.

உங்கள் சொந்த நாடுகளில் இருப்பதை போல், பாதுகாப்பான முதலீட்டு சூழலை, இந்தியாவும் உங்களுக்கு வழங்கும். நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதை பயன்படுத்தி சர்வதேச மருந்து தொழில் நிறுவனங்கள் பயனடைய வேண்டும்.
இந்தியாவில் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும், சமமாகவே நடத்தப்படுவர். மருந்து தொழிலின் மையமாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். இதை நிறைவேற்ற, அத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.நாட்டில், மூன்று பெரிய மருந்து தயாரிக்கும் பூங்காக்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.