புதுடில்லி :'பட்டாசுக்கு தடை விதிப்பதன் வாயிலாக, குறிப்பிட்ட பண்டிகைக்கு அல்லது சமூகத்தினருக்கு நாங்கள் எதிரானவர்கள் என கருதக்கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது என தடை விதிக்கப்படவில்லை. பசுமை பட்டாசுக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொண்டாட்டம் என்ற போர்வையில் குடிமக்களின் உயிருடன் விளையாடுவதை அனுமதிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு நாடு முழுதும் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பட்டாசு விற்பனைக்கு முழுமையான தடை விதிக்க மறுத்தது. அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் வாயிலாக பசுமை பட்டாசுகளை விற்க அனுமதி அளித்ததோடு, 'ஆன்லைன்' வாயிலாக பட்டாசு விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 'இந்த உத்தரவு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரானது' என, பரவலான கருத்து நிலவியது. உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, ஆறு பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்தன.
அவமதிப்பு வழக்கு
இதையடுத்து, 'அந்த நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் பதிவு செய்ய கூடாது' என கேள்வி எழுப்பி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பட்டாசுகளுக்கு 100 சதவீதம் தடை விதிக்கப்படவில்லை. அதுபோன்ற ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவையும் மீறி அந்த பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவது அதிருப்தி அளிக்கிறது. பசுமை பட்டாசுகள் விற்க தடை ஏதுமில்லை. ஆனால் சிலர் பசுமை பட்டாசு என்ற பெயரில் போலியான பட்டாசுகளை விற்பனை செய்கின்றனர்.
அது போன்ற போலி பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.,க்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடும். 'கியூ ஆர் கோடு'களில் கூட போலிகளை காண முடிகிறது.ஒரு சில பட்டாசுகளுக்கு தடை விதித்ததால் குறிப்பிட்ட பண்டிகைக்கோ அல்லது சமூகத்தினருக்கு நாங்கள் எதிரானவர்கள் என கருதக் கூடாது. கொண்டாட்டம் என்ற போர்வையில் குடிமக்களின் உயிருடன் விளையாடுவதை அனுமதிக்க முடியாது.
உத்தரவு
மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை சமூகத்துக்கு தெரிவிக்கவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு காரணமாக டில்லி மக்கள் படும் அவஸ்தைகளை அனைவரும் அறிவோம். பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காரணம் காட்டி, மற்ற அப்பாவி குடிமக்களின் வாழ்வில் நாம் விளையாட முடியாது.
பசுமை பட்டாசுகளை தவிர இதர பட்டாசுகள் விற்பனை செய்யபடாததை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரம் படைத்த மாநில அமைப்புகள் இந்த விவகாரத்தில் தோல்வி அடைந்துள்ளன.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE