உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., மறைந்த போது அக்கட்சி தொண்டர்கள், பலம் வாய்ந்த தலைமைக்காக சில ஆண்டு காலம் காத்திருந்தனர். கட்சி பிளவு, தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.,வின் வலிமையான தலைவராக ஜெயலலிதா உருவெடுத்தார்.
பல்வேறு சோதனைகளை கடந்து, அ.தி.மு.க.,வை மீண்டும் வலிமை பெற செய்தார், ஜெயலலிதா. வலிமையான ஒரே தலைமையின் கீழ், கட்சி கட்டுக்கோப்பாக வளர்ச்சி அடைந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க., மீண்டும் சோதனையை சந்தித்து வருகிறது. ஜெயலலிதா மறைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், அ.தி.மு.க., மீண்டும் பலம் வாய்ந்த தலைமை இல்லாமல் தவிக்கிறது.

பழனிசாமி, பன்னீர்செல்வம் கோஷ்டி பூசல் ஒருபுறம்; கட்சியை அபகரிக்க நினைக்கும் சசிகலா கும்பல் மறுபுறம் என, அ.தி.மு.க., தத்தளிக்கிறது. சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தை வெறுக்கும் தொண்டர்கள், அ.தி.மு.க.,வில் தற்போது உள்ள இரட்டைத் தலைமையையும் நம்ப முடியாமல் திணறுகின்றனர். தி.மு.க., அரசு எப்போது வேண்டுமானாலும், 'ரெய்டு' நடத்தலாம் என்பதும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ., மீதான பயமும், அ.தி.மு.க., நிர்வாகிகளை கலக்கமடைய செய்துள்ளன. அதனால் தான், அ.தி.மு.க., பொன் விழா கூட சுணக்கமாகவே நடக்கிறது.
உட்கட்சி பிரச்னையில் சிக்கியுள்ளதால், எதிர்க்கட்சியின் பணியை கவனிக்க முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பா.ஜ., தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்தெடுத்த அ.தி.மு.க., தன் பொன் விழாவை வெகுசிறப்பாக கொண்டாட வேண்டும். ஆனால் அக்கட்சி, இப்போது தடுமாறி கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.,விற்கு இது சோதனைகாலம். இதை கடந்து, புதிய நம்பிக்கையை அ.தி.மு.க., பெற வேண்டிய தருணம் இதுவே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE